புதுடில்லி: உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலில் 12வது இடத்துக்கு அமெரிக்கா தள்ளப்பட்டுள்ளது. இந்திய பாஸ்போர்ட் 85வது இடத்தில் உள்ளது.பாஸ்போர்ட்டை வைத்து விசா இல்லாமல் எத்தனை நாடுகளுக்கு பயணிக்கலாம் என்பதை அடிப்படையாக வைத்து சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலிடப்படுகிறது. சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கம் அளிக்கும் தரவுகளை வைத்து பிரிட்டனைச் சேர்ந்த ஹென்லே பாஸ்போர்ட் நிறுவனம் பட்டியலிடும் பணியைத் தொடர்ந்து வருகிறது. அந்த வகையில் இந்தாண்டுக்கான சக்திவாய்ந்த பாஸ்போர்ட் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதன்படி கடந்த 2014-ஆம் ஆண்டு உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் என்ற பெருமை பெற்ற அமெரிக்கா, இந்தாண்டு மலேசியாவுடன் உடன் 12வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளது. இந்த இரண்டு நாடுகளின் பாஸ்போர்ட் மூலம் உலகில் உள்ள 227 நாடுகளில் 180 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.இந்த பட்டியலில் ஆசிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன. முதலிடத்தில் சிங்கப்பூர்( 193 நாடுகளுக்கும் விசா இல்லாமல் செல்ல முடியும்) 2வது இடத்தில் தென் கொரியா(190 நாடுகளுக்கும் விசா இல்லாமல் செல்ல முடியும்) 3வது இடத்தில் ஜப்பான் (189 நாடுகளுக்கும்விசா இல்லாமல் செல்ல முடியும்)4வது இடத்தில் ஜெர்மனி, இத்தாலி, லக்சம்பர்க், ஸ்பெயின், சுவிட்சர்லாந்தும் 5வது இடத்தில் ஆஸ்திரியா, பெல்ஜியம், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், அயர்லாந்து, நெதர்லாந்தும் 6வது இடத்தில் கிரீஸ், ஹங்கேரி, நியூசிலாந்து, நார்வே, போர்ச்சுகல், ஸ்வீடன் ஆகிய நாடுகளும் 7 வது இடத்தில் ஆஸ்திரேலியா, செக் குடியரசு, மால்டா, போலந்து ஆகிய நாடுகளும் 8 வது இடத்தில் குரோஷியா, எஸ்டோனியா, ஸ்லோவேகியா, ஸ்லோவேனியா, ஐக்கிய அரபு எமீரேட்ஸ், பிரிட்டன் ஆகிய நாடுகளும்9 வது இடத்தை கனடாவும்10 வது இடத்தில் லாட்வியா மற்றும் லிச்சென்ஸ்டீன் நாடுகளும் உள்ளன. நமது அண்டை நாடான சீனா 64வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நிலை
2006 ல் 71 வது இடத்தையும், 2021 ல் 90வது இடத்தையும், பிடித்த இந்தியா இந்த ஆண்டு 85வது இடத்தை பிடித்துள்ளது. இந்திய பாஸ்போர்ட் மூலம் 57 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். கடைசி இடம்
இந்த பட்டியலில் கடைசியாக 106வது இடத்தில் ஆப்கானிஸ்தான் உள்ளது. அதற்கு முன்னர் சிரியா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகள் உள்ளன. பாகிஸ்தான் 103வது இடத்தையும், நேபாளம் 101வது இடத்தையும் பிடித்துள்ளது. வங்கதேசம் 100வது இடத்தையும், இலங்கை 98வது இடத்தையும், மியான்மர் 96வது இடத்தையும் பூடான் 92வது இடத்தையும் பிடித்துள்ளன.