புதுடில்லி:நீதிமன்ற விசாரணையின்போது, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் 'யா யா' என்று கூறியதற்கு, ''இதென்ன காபி கடையா, நீதிமன்றத்தில் இவ்வாறு பேசக் கூடாது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கோபத்துடன் குறிப்பிட்டார்.மஹாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த ஒருவர், வேலையில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் முன்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.அப்போது, உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய், அந்த மனுவைத் தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்த சீராய்வு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றிய ரஞ்சன் கோகோய், 2019ல் ஓய்வு பெற்றார். தற்போது ராஜ்யசபா எம்.பி.,யாக உள்ளார்.இந்நிலையில், தன் மனுவை நிராகரித்த நீதிபதி ரஞ்சன் கோகோய் மீது நீதித்துறை விசாரணை நடத்தக் கோரி, அந்த நபர், 2018ல் பொதுநல வழக்கை தாக்கல் செய்தார்.இது, தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்த்திவாலா, மனோஜ் மிஸ்ரா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அமர்வு கூறியதாவது:இது என்ன வழக்கு? உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கோரி எப்படி பொதுநல வழக்கு தொடர முடியும்? அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து, தலைமை நீதிபதியாக ஓய்வு பெற்றவர்.வழக்கில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரவில்லை என்பதற்காக, தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது வழக்கு தொடர முடியாது.உங்களுடைய வழக்கு, சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டால், மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்யலாம்.முதலில், உங்களுடைய மனுவில் இருந்து நீதிபதி ரஞ்சன் கோகோய் பெயரை நீக்கி, அது தொடர்பாக பதிவாளர் அலுவலகத்தில் உறுதிமொழி கொடுக்கவும். மனுவை திருத்தி வாருங்கள்; பிறகு விசாரிப்போம்.இவ்வாறு அமர்வு கூறியது.வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு, மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆமாம் என்பதை குறிக்கும் வகையில், ஆங்கிலத்தில் 'யா யா' என்று பதில் அளித்தார். இதற்கு தலைமை நீதிபதி கோபமடைந்தார். ''அது என்ன, யா யா? இந்த வார்த்தையை கேட்டாலே அலர்ஜியாக உள்ளது. இது என்ன காப்பி கடையா? இதுபோல் பேசுவதை ஏற்க முடியாது,'' என, தலைமை நீதிபதி சந்திரசூட் குறிப்பிட்டார்.