ஓராண்டுக்குள் விவாகரத்துக்கு விண்ணப்பிக்க முடியாது
பிரயாக்ராஜ்: 'ஹிந்து திருமண சட்டத்தின் கீழ், விதிவிலக்கான சூழ்நிலை அல்லது ஒழுக்கக்கேடுகள் இல்லாவிட்டால், ஓராண்டுக்குள் விவாகரத்து கோரி தம்பதியர் விண்ணப்பிக்க முடியாது' என, அலகாபாத் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. உத்தர பிரதேசத்தின் சஹாரன்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த நிஷாந்த் பரத்வாஜ் - ரிஷிகா கவுதம் தம்பதி, மாவட்ட குடும்பநல நீதிமன்றத்தில் பரஸ்பர விவாகரத்து கோரி விண்ணப்பித்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், திருமணமாகி ஓராண்டு கூட ஆகவில்லை எனக் கூறி விண்ணப்பத்தை நிராகரித்தது.இதை எதிர்த்து, அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் நிஷாந்த் பரத்வாஜ் மேல்முறையீடு செய்தார். மனுவை விசாரித்த நீதிபதிகள் கூறியதாவது:ஹிந்து திருமண சட்டப்பிரிவு - 14ல் வழங்கப்பட்டுள்ளபடி, விவாகரத்துக்கு விண்ணப்பிக்க, குறைந்தபட்சம் ஓராண்டு ஆகியிருக்க வேண்டும். ஆனால், இந்த தம்பதிக்கு திருமணமாகி ஓராண்டு கூட ஆகவில்லை. இரண்டு ஹிந்துக்களுக்கு இடையிலான திருமணம் புனிதமானது. சட்டத்தில் அனுமதிக்கப்பட்ட காரணங்களுக்காக மட்டுமே, திருமணத்தை கலைக்க அனுமதிக்கப்படும். விதிவிலக்கான சூழ்நிலை அல்லது ஒழுக்கக்கேடு இல்லாவிட்டால், ஓராண்டுக்குள் விவாகரத்து கோரி தம்பதி விண்ணப்பிக்க முடியாது. அதற்கு சட்டத்தில் இடமும் இல்லை. எனவே, இந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட தம்பதி, ஓராண்டுக்குப் பின், விவாகரத்து கோரி புதிதாக விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.