சிறுமி பலாத்கார வழக்கில் வாலிபர் சுட்டு பிடிப்பு
பல்லாரி: பல்லாரி அருகே, 5 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட வாலிபரை, சம்பவ இடத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்ற போது ஏட்டுவை தாக்கிவிட்டு தப்ப முயன்றார். அவரை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர்.பல்லாரி தோரணகல்லில் வசிக்கும் தம்பதியின் 5 வயது மகள், கடந்த 13ம் தேதி இரவு கடைக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்தபோது, ஒரு வாலிபரால் கடத்தி செல்லப்பட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி தற்போது உடல் நலம் தேறி வருகிறார். கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில், சிறுமியை பலாத்காரம் செய்ததாக விஜயநகரா மாவட்டம், கமலாபூரை சேர்ந்த மஞ்சுநாத், 25 என்பவரை நேற்று முன்தினம் இரவு கொப்பாலில், தோரணகல் போலீசார் கைது செய்தனர்.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு சம்பவம் நடந்த இடத்திற்கு, மஞ்சுநாத்தை அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஏட்டு ரகுபதியை சரமாரியாக தாக்கி விட்டு மஞ்சுநாத் தப்பி ஓடினார். அதிர்ச்சி அடைந்த எஸ்.ஐ., தாகேஷ் துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு சரண் அடையும்படி எச்சரித்தார். ஆனால், மஞ்சுநாத் கேட்கவில்லை.இதனால் அவரது வலது காலில், தாகேஷ் துப்பாக்கியால் சுட்டார். சுருண்டு விழுந்த மஞ்சுநாத்தை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். காயம் அடைந்த ஏட்டு ரகுபதியும் சிகிச்சை பெற்றார்.