தாய், 4 சகோதரிகளை கொன்ற வாலிபர்
லக்னோ உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உள்ள ஹோட்டலில், தன் தாய் மற்றும் நான்கு தங்கைகளைக் கொன்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். தன் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய சொத்துக்களை பறித்துக் கொண்டதுடன், தன் தங்கைகளை விற்க முயற்சிப்பதாக அவர் கூறியது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசத்தில் ஆக்ராவின் படுவா பகுதியைச் சேர்ந்த அர்ஷத் என்ற, 24 வயது இளைஞர், தாய் அஸ்மா, சகோதரிகள், அலியா, 9, அலிஷா, 19, அக் ஷா, 16, ரெஹ்மீன், 18 மற்றும் தன் தந்தை ஆகியோருடன் சமீபத்தில் லக்னோவுக்கு வந்தார். அங்குள்ள ஹோட்டல் ஒன்றில் அவர்கள் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் இரவு உலகமே, புத்தாண்டைக் கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், தன் தாய் மற்றும் நான்கு தங்கைகளை கொலை செய்துஉள்ளார், அர்ஷத். வீடியோ வெளியீடு
பின், தன் தந்தையை லக்னோ ரயில் நிலையத்தில் விட்டுவிட்டு, நேராக போலீசில் சென்று அந்த இளைஞர் சரணடைந்தார். முன்னதாக, தன் தாய் மற்றும் தங்கைகளை கொலை செய்தது தொடர்பாக, வீடியோ ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது:ஆக்ராவின் படுவா பகுதியில் எங்கள் சமூகத்தைச் சேர்ந்த சிலர், எங்களுடைய சொத்துக்களை பறித்துக்கொள்ள முயற்சித்தனர். பாதி நிலத்தை பறித்துக் கொண்டுள்ளனர். மீதமுள்ள இடத்தையும் பறிக்க திட்டமிட்டனர். இதைத் தவிர, என் மீதும், என் தந்தை மீதும் பொய் வழக்குகள் தொடர திட்டமிட்டனர். அதன்பின், என் தங்கைகளை விற்கப் போவதாக என்னை மிரட்டினர். அவர்களுக்கு அரசியல் அதிகாரம் மற்றும் போலீஸ் ஆதரவு உள்ளது.நாங்கள் மதம் மாற முயற்சித்தோம். அதனால், எங்கள் குடும்பத்தினருக்கு உள்ளூரைச் சேர்ந்த அவர்கள் துன்புறுத்தல்களை கொடுத்து வந்தனர். பல முயற்சிகள் செய்தும், எங்களால் அவர்களை எதிர்த்து நிற்க முடியவில்லை. தந்தை உதவி
என் தங்கைகள் விற்கப்படுவதை சகித்துக்கொள்ள தயாராக இல்லை. அதனால், இந்த முடிவை எடுத்தோம். என் தாயை துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்றேன். தங்கைகளின் வாயில் துணியை அடைத்தும், அவர்கள் கைகளில் வெட்டியும் கொலை செய்தேன். இதற்கு என் தந்தையும் உதவினார்.எங்கள் நிலத்தை மீட்டு, அங்கு கோவில் கட்ட வேண்டும். எங்களுடைய மற்ற சொத்துக்களை விற்று, ஆதரவற்ற குழந்தைகளுக்கு உதவி செய்ய வேண்டும். அப்போதுதான் அவர்களுடைய ஆத்மா சாந்தி அடையும்.எங்களுடைய ஊரில் செயல்படும் நில மாபியா மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் மோடி மற்றும் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கேட்டுக் கொள்கிறேன். அவர்களை விட்டுவிடாதீர்கள். தகுந்த தண்டனையை பெற்றுத் தர வேண்டும்.இவ்வாறு வீடியோவில் அவர் கூறியுள்ளார்.இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். தப்பியோடிய இளைஞரின் தந்தையை போலீசார் தேடி வருகின்றனர். இதற்கிடையே, வீடியோவின் நம்பகத்தன்மை தொடர்பாகவும், அதில் கூறப்பட்டுள்ள விவகாரம் தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டு வருவதாக, போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.