உள்ளூர் செய்திகள்

சுற்றுலாவை கற்றுத்தரும் ஐ.ஐ.டி.டி.எம்.,

சுற்றுலா, பயணம், ஆய்வு மற்றும் அது தொடர்பான இதர படிப்புகளை வழங்கும் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனம் இது. 1983ம் ஆண்டு இந்த கல்வி நிறுவனம் புதுடில்லியில் தொடங்கப்பட்டது. கடந்த சில ஆண்டுகளில் இது பிரத்யேக அடையாளத்தை உருவாக்கி, சிறப்பான இடத்தை அடைந்துள்ளது. இந்தியா முழுவதும் மாநில அளவிலான பயிற்சிகளை நடத்த இந்த கல்வி நிறுவனத்துக்கு சுற்றுலாதுறை அதிகாரம் வழங்கியுள்ளது. கடந்த 1992ம் ஆண்டு முதல் மத்திய பிரதேசத்தின் குவாலியர் நகரில் இந்த கல்வி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. குவாலியர், புவனேஷ்வர், டில்லி, கோவா என நாட்டின் பல பகுதிகளில் இதற்கு மையங்கள் உள்ளன. குவாலியரில் உள்ள ஐ.ஐ.டி.டி.எம்.,மில் டூரிசம் அண்டு டிராவல், சர்வீசஸ் இன்டர்நேஷனல் பிசினஸ் பிரிவுகளில் போஸ்ட் கிராஜூவேட் டிப்ளமோ இன் மேனேஜ் மென்ட் (பி.ஜி.டி.எம்.,) படிப்பு உள்ளது. புவனேஷ்வரில் உள்ள மையத்தில் டூரிசம் அண்டு டிராவல், இன்டர்நேஷனல் பிசினஸ் ஆகிய பிரிவுகளில் பி.ஜி.டி.எம்., படிப்புகள் உள்ளன. டில்லியில்உள்ள மையத்தில் டூரிசம் அண்டு லெஷ்சர்’ பிரிவில் பி.ஜி.டி.எம்., படிப்பு உள்ளது. ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற இந்த படிப்புகள் எம்.பி.ஏ.,வுக்கு இணையானது. இதில் சேர நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். இந்த படிப்புகளுக்கு இரண்டு லட்சம் ரூபாய் முதல் ஒரு லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. இந்த 20 மாத படிப்புகள் நான்கு செமஸ்டர்களாக வழங்கப்படுகின்றன. பணியாற்றுபவர்களுக்கான பல்வேறு குறுகிய கால படிப்புகளையும் இந்த கல்வி நிறுவனம் வழங்கி வருகிறது. எனினும் இங்கு இளநிலை படிப்புகள் எதுவும் இல்லை. இங்கு சேரும் மாணவர்களுக்கு வெளிநாட்டு கல்வி குறித்த சர்டிபிகேட் படிப்பும் இலவசமாக வழங்கப்படுகிறது. விரும்பும் மாணவர்கள் மட்டும் இதில் சேரலாம். வெள்ளி விழாவை நிறைவு செய்துள்ள இந்த நிறுவனம், சுற்றுலா துறை மட்டுமின்றி சர்வதேச வணிகம், சேவைத்துறை என தனது எல்லைகளைவிரிவுபடுத்தி வருகிறது. இங்கு மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக ஹாஸ்டல்கள் அமைந்துள்ளன. எனினும் சில இடங்களே ஹாஸ்டல்களில் உள்ளது. இந்தியாவின் அனைத்து மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் இங்கு சேர்த்துக்கொள்ளப்படுகின்றனர். இங்கு படித்து முடித்த மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற நிலை உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !