உள்ளூர் செய்திகள்

செபாலஜி -தேர்தல் பற்றிய அறிவியல் ஆய்வு

இது தேர்தல் பற்றிய அறிவியல் ஆய்வு என்ற பொருளைக் கொண்டுள்ளது. தேர்தல்களையும் வாக்களிக்கும் மனப்பாங்கையும் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பை செபாலஜி எனக் கூறுகின்றனர். தேர்தல் பற்றிய மாதிரிகளையும் அவற்றில் காணப்படும் மாற்றங்களையும் பற்றி ஆராயும் நிபுணரை செபாலஜிஸ்ட் எனக் கூறலாம். கடந்த தேர்தல் குறித்த தகவல்கள், புள்ளி விபரங்கள், மக்களின் கருத்துக் கணிப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு தேர்தலின் முடிவுகள் எப்படியிருக்கும் என்பதை இவர்கள் கணிக்கின்றனர். வாக்களிப்பதில் உள்ள நிலை, ஓட்டுக்கள் மாறும் விதம், பதிவான ஓட்டுகளின் எண்ணிக்கை ஆகியவற்றின் அடிப்படையில் எந்தக் கட்சி வெற்றி பெறும், எது ஆட்சி அமைக்கலாம் போன்ற கணிப்புகளை இவர்கள் வெளியிடுகின்றனர். எவ்வளவு சதவீத ஓட்டுக்களின் மாற்றம் தற்போதைய ஆட்சியில் மாற்றத்தைக் கொண்டு வரும் என்பதையும் இவர்கள் கூறுகின்றனர். ஜனநாயக நாடு ஒன்றில் இவர்களுடைய பங்கு தேர்தலின் போது முக்கியமானதாக உள்ளது. தகுதிகள் இத் துறைக்கென்று பிரத்யேகமான படிப்புகள் எதுவும் கிடையாது. புள்ளியியல் அல்லது சமூக அறிவியல் படிப்புகளை மேற்கொண்டு இவ்விரு துறைகளிலுமே ஈடுபாடு கொண்டவர்கள் தங்களுடைய எதிர்காலத்தை இத்துறையில் அமைத்துக் கொள்ளலாம். சமூக அறிவியல் படிப்புகளின் ஒரு அங்கமாக செபாலஜி இருந்த போதும் இந்தியாவிலுள்ள எந்தவொரு பல்கலைக்கழகமோ தனியார் கல்வி நிறுவனமோ செபாலஜியை ஒரு தனிப்படிப்பாகத் தருவதில்லை. எனவே இந்தியாவின் பல்வேறு மாநிலசமூக அமைப்பு குறித்த வரலாறை நன்றாக அறிந்திருப்பது மட்டுமே இதில் ஒருவர் ஈடுபடத் தேவை. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்தியிருக்கும் முன் அனுபவம் இருப்பது இதில்ஒருவர் ஈடுபட உதவியாக இருக்கும். கருத்துக் கணிப்பின் முக்கிய 3 நிலைகளான மாதிரியைத் தேர்வு செய்வது, தகவல்களைப் பெறுவது, தகவல்களைப் பரிசீலிப்பது ஆகிய 3 நிலைகளிலும் முழுத் திறன் பெற்றவர்களே இத் துறைக்குப் பொருத்தமாக இருப்பார்கள். பல பகுதிகளுக்கும் பயணம் செய்யும் உடற்தகுதியும் இதற்குக் கூடுதலாகத் தேவைப்படுகிறது. பொதுவாக பட்ட மேற்படிப்பை அரசியல் அறிவியல் அல்லது சமூக அறிவியல் பிரிவில் முடித்திருப்பவர்கள் இதில் திறம்பட செயல்படலாம். புள்ளியியலில் ஈடுபாடும் விபரங்களை நுணுக்கமாக அறிவதில் ஆர்வமும் பெற்றிருப்பதுடன் இட ரீதியி-லான, இன ரீதியிலான சிந்தனைகள் பற்றி அறிந்திருப்பதும் கூடுதல் தகுதிகளாகக் கருதப்படுகிறது.   பணித் தன்மை தேர்தல் முடிவுகளைக் கணிக்கும் செயலானது செபாலஜிஸ்டுகளின் பணியில் ஒரு பகுதி மட்டுமே. தேர்தல் குறித்த முழு விபரங்களைத் தொகுப்பது, பகுத்தாய்வு செய்வது ஆகியவையும் இவர்களுடைய பணியில் உள்ளது. கருத்துக் கணிப்பில் கேட்ட பதில்கள் மாறுதல்களுக்கு உட்பட்டவை என்ப-தால் மாதிரியை தேர்ந்தெடுப்பதும் சரியான பதிலைப் பெறுவதும் சவாலான பணிகளாக இருக்கும். கேள்விகளை சரியாகத் தயாரிப்பது, துல்லியமான பதில்களை மட்டுமே பதிவு செய்வது, அதை பாரபட்சமின்றி அலசி ஆய்வு செய்து முடிவுக்கு வருவது போன்ற முக்கியப் பணிகள் இவர்களுடையது தான். குறிப்பாக பல்வேறு மாறுபட்ட சமூக, கலாச்சார மாறுதல்களைக் கொண்ட இந்தியா போன்ற துணைக் கண்டத்தில் தேர்தல் முடிவுகளை சரியாகக் கணிப்பதென்பது கடினமான பணியாக உள்ளது. இதையெல்லாம் தாண்டி சரியான முடிவுகளை கணிப்பவர் இவர்தான் என்று பெயர் வாங்குவது உண்மையிலேயே அரிய பணி தான்.   வாய்ப்புகள் தேர்தலுடன் தொடர்புடைய பணி என்பதால் இதைக் குறிப்பிட்ட கால கட்டத்தில் மட்டுமே செய்ய வேண்டியுள்ளது. தேர்தல் காலங்களில் செபாலஜிஸ்டுகளுக்குத் தேவையுள்ளது. இதனால் தான் இத் துறையில் ஈடுப-டுபவர்கள் முழு நேரப் பணியாக இதைத் தேர்வு செய்யாமல் குறிப்பிட்ட காலங்களில் மட்டுமே இதில் பணிபுரிகின்றனர். அரசியல் கட்சிகள் தங்களது ஆட்சியின் போது மக்களின் மனப்பான்மை எப்படியுள்ளது என்பதை அறிய செபாலஜிஸ்டுகளை பயன்படுத்துகின்றனர். துறையில் நுழைபவர்கள் தொடக்கத்தில் பயிற்சியாளராக பணியை ஆரம்பித்து பின் அனுபவமும் திறனும் சேர சேர நிபுணராக மாறுகின்றனர். சரியான மற்றும் தவறான முடிவுகளுக்கு இடையேயான நூலிழை வித்தியாசத்தை நிபுணர் ஒருவரால் மட்டுமே உணர முடிகிறது. எனவே தான் அனுபவமும்திறனும் உள்ள செபாலஜிஸ்டுகள் எப்போதுமே பெரிதும் மதிக்கப்படுகின்றனர். திறனைப் பொறுத்து எகிறும் ஊதியத்தையும் இவர்கள் பெறலாம். செபாலஜிஸ்டுகளை மீடியாவும் அரசியல் கட்சிகளும் பெரிதும் சார்ந்து இருப்பதை நாம் கடந்த சில ஆண்டுகளாகக் காண்கிறோம். மார்க்கெட் ரிசர்ச் அனலிஸ்டுகளாகவும் இவர்கள் பணியாற்றலாம். அரசியல் ஜோதிடம் என்று கூறப்படும் செபாலஜி துறை தகவல் தொடர்புத் துறை-யின் வளர்ச்சியால் அதிக மதிப்பைப் பெற்று வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !