கற்பதில் ஒவ்வொருவரும் வெவ்வேறு ரகம்
வாழ்நாள் முழுவதும் நாம் கற்றுக்கொண்டேதான் இருக்கிறோம். வேலைக்குச் சேர்ந்தவுடன் புதிதாக ஒரு உலகத்தினுள் நுழைவதுபோல் உணருகிறோம். அது வரை நாம் கற்றுக் கொண்டதில் மிகக்குறைந்த அளவே அங்கு தேவைப்படும். பல புதிய சூழ்நிலைகள், புதியமனிதர்கள் ஒவ்வொருவரும் தனித்தனி விதத்தில் வித்தியாசமான மனிதர்கள், புதுமையான செயல்பாடுகள் என்று அனைத்தும் மாறுபட்டு இருக்கும். அந்தச் சூழலுக்குள் நாம் நுழையும்போது நாம்தான் அந்தச் சூழலுக்கு ஏற்றவகையில் நம்மை மாற்றிக் கொள்ள புதிது புதிதாகக் கற்றுக்கொள்ள வேண்டும். அனைவருக்கும் எதையும் கற்றுக்கொள்வதில் பல விதங்கள் இருக்கும். படங்கள் பார்த்து, ஒசைகள் கேட்டு அல்லது சிலவற்றை செய்து பார்த்து கற்றுக் கொள்கிறார்கள். கற்றுக்கொள்வது என்பது பலரும் நினைப்பதுபோல் கல்லுாரியை விட்டு வெளியே வந்தவுடன் நின்றுவிடும் சமாச்சாரம் இல்லை. சுற்றுக்கொள்கிறோம் என்று மிகவும் எளிதாக நாம் சொல்லிவிட்டாலும் கற்றுக்கொள்ளும் விதம் ஆளுக்காள் வேறுபடுகிறது. நியாயமாகப் பார்த்தால் குழந்தை பருவத்திலேயே நாம் இதை கவனிக்கவேண்டும். பெற்றோரும் ஆசிரியர்களும் முக்கியமாக செய்யவேண்டிய வேலை இது. மேலை நாடுகளில் ஒரு குழந்தையின் கிரகிக்கும் தன்மை மற்றொரு குழந்தையின் கிரகிக்கும் தன்மையிலிருந்து வேறுபடுகிறது என்பதைக் கண்டறிந்து அந்தந்தக் குழந்தைக்கு ஏற்பக் கற்றுக்கொடுக்கும் தன்மை அவர்களிடம் இருக்கிறது. இந்தியாவிலும் ஒரு சில வசதியான குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் இந்த முறையைப் பின்பற்றுகின்றனர். வளர்ந்த பிறகும் நம்முடைய கற்றுக்கொள்ளும் திறன் ஆளுக்காள் மாறுபடுவதை நாம் அறிவோம். இந்த மாதிரி ஒரே குணம் படைத்த மாணவர்கள் ஒரு இடத்தில் குழுமி ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்டுக்கொண்டே படித்துவிடுவார்கள். ஆனால் இந்த முறைக்கு உங்களுடைய கவனம் நுாறு சதவீதம் இருக்க வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக கற்றுக் கொள்கிறார்கள். நம்மைப் பொறுத்தவரை எந்த முறையில் கற்றுக்கொண்டால் சரியாக பிரகாசிக்கிறோம் என்று தெரிந்துகொண்டு அந்த முறையையே காலம் முழுவதும் கடைபிடிக்க வேண்டும்.