பிரிட்டனில் கல்வி பயில்வது எப்படிப்பட்டது?
சுதந்திரம், நாட்டின் அறிவுக் கலாச்சாரத்தோடு இணைந்த தன்மை மற்றும் புத்தாக்க முயற்சிகள் போன்றவை, பிரிட்டன் கல்வியை உலகளவில் பலரும் விரும்புவதற்கு காரணம். நீங்கள் அந்நாட்டில் எந்த படிப்பை மேற்கொண்டாலும், சொந்தமாக சிந்திக்கவும், புத்தாக்க முயற்சிகளில் ஈடுபடவும் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். பிரிட்டன் கல்வி உங்களின் தன்னம்பிக்கையை அதிகரிப்பதோடு, மொழி, படைப்பாக்கம், பகுப்பாய்வு மற்றும் ஆராய்ச்சித் திறன்களை மேம்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஆங்கில மொழித்திறன் மாணவர்கள் மற்றும் மாணவர்களுக்கு இடையிலான நெருங்கிய உறவு என்ற சிறப்பம்சம், பிரிட்டன் கல்வியில் முக்கியமானதாகும். சர்வதேச மாணவர்களுக்கு, பிரிட்டன் கல்வி நிறுவனங்களால் சிறப்பான ஆங்கில மொழி பயிற்சி அளிக்கப்படுகிறது. பல கல்வி நிறுவனங்கள், சர்வதேச மாணவர்கள் தங்களின் படிப்பில் சிறந்து விளங்கவும், தேவையான மொழியறிவு பெறும் வகையிலும் பல ஆங்கில மொழி வகுப்புகளை நடத்துகின்றன. சுயமாக கற்றல் பிரிட்டனின் இளநிலைப் பட்டப் படிப்பானது, நீங்கள் விரும்பும் பாடத்தை ஆழ்ந்து, அனுபவித்துப் படிப்பதற்கு துணைபுரிகிறது. நீங்கள் இளநிலைப் பட்டம் படித்தாலும் சரி, பவுன்டேஷன் டிகிரி படித்தாலும் சரி அல்லது HND படித்தாலும் சரி, உங்களுக்கான விஷயத்தை நீங்களே யோசிக்கவும், சுயமாக பணிபுரியவும் கற்றுக்கொள்வீர்கள். அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கம்ப்யூட்டிங் மற்றும் வணிகம், கலை மற்றும் வடிவமைப்பு, சமூக அறவியல்கள், மானுடவியல் சார்ந்த மற்றும் பிற துறைகளின் படிப்புகள் என்று மொத்தமாக, ஆயிரக்கணக்கில் வழங்கப்படுகின்றன. இவற்றில் உங்களுக்கு தேவையானது எது என்பதை தேர்வுசெய்து கொள்ளலாம். கல்வி அமைப்பு Degrees என்பவை, பிரிட்டனில் மிகப் பிரபலமான இளநிலை பட்ட அளவிலான கல்வித் தகுதியாகும். அவை, அகடமிக் படிப்புகளாகும் மற்றும் அப்படிப்பை முடிக்க, இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் 3 ஆண்டுகளும், ஸ்காட்லாந்தில் 4 ஆண்டுகளும் படிக்க வேண்டும். சில படிப்புகளுக்கு 1 ஆண்டு வரை நீட்டிப்பு கிடைக்கும். ஏனெனில், மாணவர்கள் தொழில்துறை மற்றும் வெளிநாட்டு அனுபவம் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த நீட்டிப்பு. பெரும்பாலான முதுநிலைப் படிப்புகள் மற்றும் எம்.பி.ஏ., பட்டப் படிப்புகளுக்கு, பிரிட்டனில் 1 வருட காலம் மட்டுமே ஆகும். ஆனால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா போன்ற பிற நாடுகளில் இப்படிப்புகளை முடிக்க 2 வருட காலமாகும். பிரிட்டனில் படிக்கும் காலகட்டத்தில், ஒரு வெளிநாட்டு மாணவர், உலகின் மிக முக்கிய வணிக மொழியான ஆங்கிலத்தை சிறப்பாக கற்றுக்கொள்கிறார்கள் மற்றும் அற்புதமான சர்வதேச அனுபவத்தைப் பெறுகிறார்கள். குறைந்தபட்சம் 50 நாடுகளின் மாணவர்களையாவது சந்திக்கும் வாய்ப்பு பிரிட்டனில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு கிடைக்கும். அங்கீகார அமைப்பு பிரிட்டனைப் பொறுத்தவரை, ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனமும், அது வழங்கும் படிப்புகளின் தரத்திற்கும், அங்கீகாரத்திற்கும் பொறுப்பாகும். உயர்கல்விக்கான தர நிர்ணய ஏஜென்சி(QAA - Quality assurance agency) தனது சுதந்திரமான ஆடிட்டிங் நடவடிக்கையை மேற்கொள்கிறது. பிரிட்டனின் உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கும் படிப்புகள், பட்டங்கள் மற்றும் தகுதிநிலைகள் போன்றவை, தேவைப்படும் தர நிலையில் இருக்கிறதா என்பதை இந்த ஏஜென்சி உறுதி செய்கிறது. பிரிட்டன் உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பல துறைகள், சம்பந்தப்பட்ட நிபுணத்துவ அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுகின்றன. இந்த அமைப்புகள் பாடத்திட்டம் தொடர்பாக வழிகாட்டுவதுடன், அவ்வப்போது மதிப்பாய்வு நடவடிக்கைகளையும் மேற்கொள்கின்றன. ஸ்காட்லாந்தில் உள்ள கல்லூரிகள் Her Majesty Inspectorate of Education என்ற அமைப்பின் ஆய்வின் மூலம், தர சோதனைக்கு உள்ளாகின்றன. வேலை வாய்ப்புக்கு தயாராதல் மதிப்பு வாய்ந்த பணி அனுபவத்தோடு, உங்களின் பிரிட்டன் படிப்பு அனுபவத்தை சிறப்பு வாய்ந்ததாக உங்களால் மாற்றிக்கொள்ள முடியும். பிரிட்டனில் படிக்கும்போது பணிபுரியும் அனுபவமானது, நல்ல மொழியறிவை வழங்குவதோடு, உங்களின் ரெஸ்யூமிலும் சிறப்பு சேர்க்கிறது. பணி வாய்ப்பை வழங்கும் நிறுவனங்கள், ஸ்மார்ட்டான, கிரியேட்டிவ்வான, குழுவோடு சேர்ந்து பணிபுரியக்கூடிய நபரைத்தான் பணியமர்த்த விரும்பும். இந்த வகையில் பிரிட்டன் கல்வி அனுபவம் உங்களுக்கு மிகவும் உதவிபுரிவதாக இருக்கும். பணி வாய்ப்புகளைப் பெற, பிரிட்டனில் பல உதவிகள் சர்வதேச மாணவர்களுக்கு செய்யப்படுகின்றன. அவை, * பணி விளம்பரங்களை அணுக உதவி* CV -க்கள் மற்றும் பணி விண்ணப்பங்களை எழுத உதவி* நேர்முகத் தேர்வுக்கு தயாராதல் குறித்த ஆலோசனைகள்* பிரிட்டனில் பணிபுரியும் அனுபவம் குறித்த தகவல்கள் போன்ற உதவிகள் வழங்கப்படுகின்றன. மேலும், பணிபுரியும் இடத்தில் முதல்தர அனுபவத்தைப் பெறவும், புரபஷனல் தொடர்புகளை அதிகப்படுத்திக் கொள்ளவும் உதவிகள் கிடைக்கும். பல பிரிட்டன் கல்வி நிறுவனங்கள், உள்ளூர் நிறுவனங்களுடன் ஒத்துழைப்புகளை வைத்துள்ளன. அந்நிறுவனங்கள், அருகிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களை பணியில் சேர்த்துக்கொள்ள விரும்புகின்றன. எனவே, படிக்கும்போதே, ஒரு வெளிநாட்டு மாணவருக்கு நல்ல பணி அனுபவம் பெறுவதற்கான சூழல்கள் ஏற்படுகின்றன. விண்ணப்பிப்பது எப்படி? பிரிட்டன் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெறுவதென்பது மிகவும் கடினமான ஒன்றாக இருப்பதில்லை. நீங்கள் எந்தமாதிரியான படிப்பில் சேர விரும்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து நடைமுறைகள் மாறும். விண்ணப்பித்தலில் பல வழிமுறைகள் உள்ளன. உங்களிடம் சரியான தகவல்கள் இருந்தால், விண்ணப்பிப்பது எளிமையானதுதான். ஆன்லைன் மூலமாக, பல பிரிட்டன் படிப்புகளுக்கு நேரடியாக விண்ணப்பிக்கலாம். இளநிலைப் படிப்புகளுக்கு, ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் அல்லது பல்கலை அல்லது கல்லூரி அட்மிஷன் சிஸ்டம்(UCAS) மூலமாக (www.ucas.com) மேற்கொள்ளலாம். அதேசமயம், முதுநிலைப் படிப்புகளுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். வளாக உதவி பிரிட்டனில், ஒரு சர்வதேச மாணவருக்கு தேவையான அனைத்து உதவிகளும் தடையின்றி கிடைக்கும். பிரிட்டன் கல்வி அமைப்பில் பழகுவதில் ஏதேனும் சிக்கல் இருந்தால் அல்லது படிப்பு விஷயத்தில் ஏதேனும் உதவி தேவைப்பட்டால் நீங்கள்தான் அவர்களிடம் கேட்க வேண்டும். நீங்கள் படிக்கும் இடத்திலுள்ள ஆலோசகர்கள் மற்றும் அகடமிக் பணியாளர்கள், உங்களுக்கு உதவ எப்போதும் மகிழ்ச்சியுடன் காத்திருப்பர். சர்வதேச மாணவர் யூனியனும் உதவி செய்ய எப்போதும் தயாராக இருக்கும். பல பிரிட்டன் உயர்கல்வி நிறுவனங்கள், தங்களின் படிப்பு காலம் முழுவதும் மாணவர்களுக்கு உதவ, ஸ்பெஷலிஸ்ட் சர்வதேச ஆலோசகர்களை வைத்திருக்கும். அவர்கள், உங்களின் தங்கும் வசதி முதற்கொண்டு, பிரிட்டனில் தங்குவதற்கான நீட்டிப்பு விஷயங்கள் வரை உங்களுக்கு உதவுவார்கள். நீங்கள் பயிலும் கல்வி நிறுவனம் நடத்தும் Orientation or Induction programmes போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று பயன்பெறலாம். இந்த நிகழ்ச்சிகள், 2 நாட்கள் முதல் 1 வாரம் வரையிலும்கூட நடைபெறும். எனவே, பிரிட்டனுக்கு படிக்கச் செல்லும் மாணவர்கள் எதையும் நினைத்து அதிகம் கவலைப்படத் தேவையில்லை. சர்வதேச அளவில் பல நாட்டு மாணவர்களை பன்னெடுங்காலமாகவே ஈர்த்துவரும் பிரிட்டனில், உங்களுக்கு சிறப்பான அனுபவங்கள் காத்துக் கொண்டுள்ளன.