உள்ளூர் செய்திகள்

மகத்துவம் வாய்ந்த மருத்துவ சுற்றுலாத் துறை

பலதரப்பட்ட மொழிபேசும் மற்றும் கலாச்சாரங்களைப் பின்பற்றும் மக்களைக் கொண்ட இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வது என்பது பல வெளிநாட்டவருக்கு ஒரு பரவசமான நிகழ்வுதான். அந்த இந்தியாதான் இன்று மருத்துவ சுற்றுலாவிற்கான ஒரு புகழ்பெற்ற மையமாக மாறி வருகிறது. இன்றைய நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வெறும் வரலாற்று சின்னங்களை மட்டுமே பார்க்க வருவதில்லை. மாறாக, தங்களின் மருத்துவ தேவைகளுக்காகவும்தான் வருகிறார்கள். எடை குறைப்பு, பல் மருத்துவம், காஸ்மெடிக் சிகிச்சை மற்றும் புத்துணர்ச்சி சிகிச்சை போன்ற பல மருத்துவ நோக்கங்கள் ஒரு சுற்றுலாப் பயணியின் திட்டத்தில் இருக்கிறது. இதுபோன்ற நோக்கங்களின் பொருட்டு, சுற்றுலா மேற்கொள்வது மருத்துவ சுற்றுலா எனப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும், நேச்சுரோபதி, ஆயுர்வேதம், சித்தா மற்றும் யோகா போன்ற மருத்துவமுறைகளில் சிகிச்சைகள் மேற்கொள்ள சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள். இன்றைய நிலையில் இந்தியாவானது, இத்தகைய பாரம்பரிய மருத்துவ முறைகள் மட்டுமின்றி, முக்கிய மருத்துவத் துறையான அலோபதி மருத்துவ துறையிலும் முன்னேறி வருகிறது. இதன்மூலம், பிற ஆசிய நாடுகளான சிங்கப்பூர், மலேசியா, ஹாங்காங் மற்றும் தாய்லாந்து போன்ற பல நாடுகளுடன் சேர்ந்து மருத்துவ சுற்றுலாவுக்கான ஒரு சிறந்த மையமாக திகழ்கிறது. இத்துறை வளர்ச்சிக்கான வாய்ப்புகள் இந்தியாவில் இத்துறை வளர்ச்சிக்கான மிகப்பெரிய மூலகாரணமே, அதிக எண்ணிக்கையிலான தரம் வாய்ந்த மருத்துவர்களும், மருத்துவமனைகளும் இருப்பதுதான். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு அமெரிக்காவில் சுமார் 2 லட்சம் டாலர்கள் செலவாகிறது. ஆனால் அதே சிகிச்சைக்கு இந்தியாவில் 20 ஆயிரம் டாலர்கள்தான் செலவாகிறது. மேலும், காத்திருக்கும் நேரமும் அதிகளவில் மிச்சமாகிறது. மருத்துவ வசதிகள் குறைவாயுள்ள ஆப்ரிக்கன், வளைகுடா மற்றும் சார்க் நாடுகளின் மக்களுக்கு, இந்தியா ஒரு சிறந்த மருத்துவ மையமாக விளங்குகிறது. மேலும், வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கு, இங்கு வந்து மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொள்வது 2 நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்வதாய் உள்ளது. இத்துறையின் வருமானம் வரும் 2012ம் ஆண்டில் ரூ.5000-10,000 கோடிகள் வரை இருக்கும் என்று சில நிறுவனங்களின் ஆய்வுகள் அடிப்படையில் மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் சுற்றுலாத் துறை, மாநில அரசுகளின் சுற்றுலாத் துறைகள், உயர்தர மருத்துவமனைகள், உயர்தர ஹோட்டல்கள், டிராவல் ஏஜென்சிகள் மற்றும் சுற்றுலா இயக்குநர்கள் ஆகிய பலரும் இந்தத் துறையில் பங்கெடுக்கிறார்கள். மருத்துவ சுற்றுலாத் துறை நல்ல வளர்ச்சியடைய, இந்த துறைகளுக்கிடையே சிறந்த ஒருங்கிணைப்பு இருக்க வேண்டும். இந்தத் துறையை மேம்படுத்துவதில், மருத்துவர்களின் பங்கு முக்கியமானது. அவர்கள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செல்லும்போது, இங்குள்ள மருத்துவ வசதிகள் பற்றி விவரித்து, பிறநாட்டு மக்களை ஈர்க்கிறார்கள். மருத்துவ சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் இத்துறையில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்திய மெடிக்கல் டூரிசம், மெடிக்கல் டூரிசம் கார்பரேஷன் போன்றவை இதுபோன்ற நிறுவனங்களுக்கு சில உதாரணங்கள். இத்துறையின் பணி வாய்ப்புகள் பலதரப்பட்ட துறைகளின் நிபுணர்களுக்கு இத்துறையில் பணி வாய்ப்புகள் உள்ளன. தகுதிபெற்ற மருத்துவர்கள், நர்சுகள், டயடீசியன்கள் மற்றும் துணை மருத்துவப் பணியாளர்கள் ஆகியோரின் தேவையோடு, விளம்பரம், மார்க்கெட்டிங், விற்பனை, நிர்வாகம், பயண ஒருங்கிணைப்பாளர்கள், ரிலேசன்ஷிப் அலுவலர்கள், பொதுமக்கள் தொடர்பு அலுவலர்கள், ஐ.டி. நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் மொழிபெயர்ப்பாளர்கள் போன்ற பலருக்கும் இத்துறையில் வேலை வாய்ப்புகள் உள்ளன. இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கும், மருத்துவர்களுக்கும் பாலமாக செயல்படக்கூடிய நபர்களை, மருத்துவ சுற்றுலா ஏற்பாட்டு நிறுவனங்கள் பணியில் அமர்த்துகின்றன. மேலும், மருத்துவமனைகளைத் தேர்ந்தெடுத்தல், விசா ஏற்பாடு செய்தல், தங்குமிட வசதி செய்து கொடுத்தல், சுற்றிப் பார்க்கும் இடங்களை தேர்ந்தெடுத்தல் போன்ற பலவித பணிகளை செய்வதற்கான ஆட்கள் இத்துறைக்கு தேவைப்படுகிறார்கள். மருத்துவ சுற்றுலா தொடர்பான இன்சூரன்ஸ் தொழிலானது, இந்தியாவில் தற்போது ஆரம்ப நிலையில் இருந்தாலும், பின்னாளில் பெரியளவில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மருத்துவ சுற்றுலா தொடர்பான தயாரிப்புகளின் வடிவமைப்பு, சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனை போன்ற துறைகளிலும் அதிக வேலை வாய்ப்புகள் உள்ளன. இத்துறை சார்ந்த தொழிலுக்கு தேவைப்படும் தகுதிகள் ஒருவர் பணியாற்ற விரும்பும் துறையில் அவர் முதுநிலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். இதைத்தவிர, ஒரு சான்றிதழ் படிப்பு மற்றும் மெடிக்கல் டூரிசம் மற்றும் டிராவல் மேனேஜ்மென்ட் படிப்புகளில் எம்.பி.ஏ. முடித்திருந்தால் அது கூடுதல் தகுதியாக கருதப்படும். கிளீனிக்கல் ரிசர்ச் கல்வி நிறுவனம்(இந்தியா), இத்துறையில் 2 வருட எம்.பி.ஏ. படிப்பை வழங்குகிறது. அப்பலோ மருத்துவமனையின் ஒரு பகுதியான மெட்வார்சிட்டி(மருத்துவப் பல்கலைக்கழகம்), மருத்துவ சுற்றுலா தொடர்பான 6 மாத ஆன்லைன் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. மருத்துவமனை நிர்வாகத் துறையில் முதுநிலை படிப்பானது, அந்தப் பணிக்கான அனைத்துவித தேவைகளோடும், படிப்பவர்களைத் தயார்படுத்துகிறது. மெடிக்கல் மற்றும் அத்துறை சாராத மாணவர்கள், இப்படிப்பில் சேர தகுதியுள்ளவர்கள். கல்வித் தகுதி, மதிப்பெண்கள், சான்றிதழ்கள் ஆகியவை இருந்தாலும், இத்தொழிலில் வெற்றிபெற வேண்டுமெனில், கண்ணியம், பரிதாப உணர்வு, மென் திறன்கள், கற்கும் ஆர்வம் போன்ற பண்புகள் இத்துறையில் முன்னேறுவதற்கான தகுதிகள். வருங்கால வாய்ப்பு இந்தியாவில், ஐ.டி. துறை வளர்ச்சியடைந்துள்ளதைப் போல் இத்துறையும் வளர்ச்சியடைந்து, அதற்கு நிகரான வருமானம் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இத்துறை இன்று வளர்ச்சியின் ஆரம்ப கட்டத்தில் இருந்தாலும், இச்சமயத்தில் இதில் நுழைபவர்கள் பின்னாளில் நல்ல நிலையில் இருப்பார்கள். எனவே, மாணவர்கள் இத்துறையை தேர்ந்தெடுப்பதைப் பற்றி தீவிரமாக யோசித்தால் நலம்!            


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !