சி.ஏ(சார்டர்ட் அக்கவுண்டன்சி) படிப்பு
வளரும் பொருளாதாரத்திற்கு பைனான்ஸ் மற்றும் அக்கவுண்ட் தொழில்கள் பெரிதும் துணைபுரிபவை என்பதால், இன்றைய நிலையில், சி.ஏ. தொழிலானது, ஒரு சவால் மற்றும் வெகுமதி நிறைந்த தொழிலாக உள்ளது. இந்த படிப்பு உலகளாவிய மதிப்பைக் கொண்டதாக உள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக இந்தப் படிப்பை மேற்கொள்வதற்கான விதிமுறைகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலையில், 12ம் வகுப்பை முடித்த ஒரு மாணவர், சி.ஏ. படிப்பை மேற்கொள்ள முடியும். மேலும், முன்பு ஐந்தரை வருடங்களாக இருந்தப் படிப்பு, தற்போது 4 வருட படிப்பாக மாறியுள்ளது. இந்தப் படிப்பில் சேருதல் முதலில் மாணவர்கள், சி.பி.டி.(காமன் ப்ரொபீஷியன்சி டெஸ்ட்) என்ற தேர்வுக்கு தகுதிபெற வேண்டும். இதன்பிறகு, 9 மாதங்கள் கழித்து, இன்டக்ரேட்டட் ப்ரொபஷனல் காம்பெடன்ஸ் கோர்ஸ்(ஐ.பி.சி.சி) என்ற தேர்வை எழுத வேண்டும். இந்த தேர்வானது 2 பிரிவுகளைக் கொண்டது. முதல் பிரிவில் 4 தாள்களும், இரண்டாவது பிரிவில் 3 தாள்களும் உள்ளன. முதல் பிரிவு தேர்வை முடித்தபிறகு, ஒரு மாணவர் 3 வருட இன்டர்ன்ஷிப் செல்ல முடியும். இரண்டாம் பிரிவு தேர்வையும், இரண்டரை வருட இன்டர்ன்ஷிப்பையும் முடித்தப் பிறகு, ஒருவர் இறுதி நிலைக்கு செல்லலாம். இன்டர்ன்ஷிப் என்பது இந்தப் படிப்பிற்கு மிகவும் முக்கியமானது. மேல்நிலைப் பள்ளிப் படிப்பில், கூட்டுத்தொகையாக 50 சதவீத மதிப்பெண்களை பெற்ற மாணவர்கள் சி.பி.டி. தேர்வுக்கு தகுதிபெறுவார்கள். ஆப்ஜெக்டிவ் முறையிலான இந்த தேர்வில், நெகடிவ் மதிப்பெண்கள் உண்டு. இந்த தேர்வில், அக்கவுண்டிங் அடிப்படைகள், வணிகச் சட்டங்கள், பொது பொருளாதாரம் மற்றும் எண்ணிக்கை அடிப்படையிலான திறனாய்வு உள்ளிட்ட பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். எனவே இந்தத் தேர்வில் வெற்றிபெற, நேர்மறை சிந்தனைகளுடன், ஆன்லைன் மற்றும் புத்தகக் கடைகளில் கிடைக்கும் மாதிரி கேள்வித் தொகுப்புகளை வைத்து பயிற்சி பெறலாம். வேலை வாய்ப்புகள் இத்துறையிலுள்ள வேலை வாய்ப்புகளை கணக்கற்றவை. பைனான்சியல் அக்கவுன்டன்சி, வரிவிதிப்புத் துறை, ஆடிட் டிவிஷன், பங்குச் சந்தை, நிதி சேவைகள் போன்ற பலவித துறைகளில் வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. மேலும் நீங்கள் எந்த நிறுவனத்திலும் பணிபுரியாமல், பல நிறுவனங்களுக்கு ஆலோசகராகவோ, பல நிறுவனங்களுக்கு ஆடிட்டராகவோ இருக்கலாம். எப்படியிருந்தாலும், இத்துறையில் வருமானத்திற்கு குறைவில்லை.