நியூட்ரிஷன் டயடிக்ஸ் துறை
ஹோம் சயின்ஸ் துறையின் சிறப்புப் படிப்புதான் நியூட்ரிஷன் அண்டு டயடிக்ஸ். இந்த துறையில் படிப்பவர்கள் பின்வரும் வேலைகளில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். ஹெல்த்கேர்: கார்ப்ரேட் மருத்துவமனைகளிலும், கிளினிக்குகளிலும் நியூட்ரிஷன் டயடிக்ஸ் படித்தவர்கள் பணிக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறார்கள். இவர்கள் தெரபடிக்ஸ், உணவு மேலாண்மை மற்றும் வகுப்பு எடுப்பது போன்ற பணிகளில் ஈடுபடுகிறார்கள். சமூக நலம்: வளர்ச்சி மற்றும் சமூக மேம்பாட்டுப் பணிகளில் நியூட்ரிஷன் டயடிக்ஸ் படித்தவர்களுக்கு ஒரு முக்கியமான பங்கு இருக்கிறது. இந்தியா போன்ற பெரிய மக்கள் தொகை கொண்ட நாடுகளில், உடல்நலம் பேணுவதில் நியூட்ரிஷன்களின் பங்கு இன்றியமையாதது. உணவுச் சேவை: புதிது புதிதாக உணவு வகைகளை உருவாக்குவது மற்றும் அறிமுகப்படுத்துவது போன்ற பணிகளை இத்துறையினர் மேற்கொள்கின்றனர். உடல் நலத்திற்கேற்ற உணவு வகைகளை இவர்கள் உருவாக்குவர். மாஸ் மீடியா: பத்திரிகைகள், டிவி ரேடியோ, எப்.எம்., நிலையங்கள் என எந்த மீடியாவை எடுத்துக் கொண்டாலும் அதில் நியூட்ரிஷனிஸ்டுகள், பொது மக்களிடம் உணவு மற்றும் உடல் நல மேம்பாடு ஆகியவை குறித்த சிறப்பு நிகழ்ச்சிகளைத் தருவர். இதனால் மீடியாவிலும் நியூட்ரிஷன்களுக்கு பணிவாய்ப்பு உண்டு. ஆய்வு மற்றும் வளர்ச்சி: ரெடிடுஈட் உணவு வகைகளை நிறுவனங்கள் அறிமுகப்படுத்தி வருகின்றன. பேக்கிங் செய்யப்பட்டு நீண்ட நாட்களுக்கு உணவுப் பொருட்கள் கெட்டுப் போகாமலும், சத்தை இழக்காமலும் இருப்பதற்கான ஆய்வுகளில் இத்துறையினர்தான் ஈடுபடுகின்றனர். பி.எஸ்சி., ஹோம்சயின்ஸ் படித்துவிட்டு பட்ட மேற்படிப்பாகவோ, டிப்ளமோ படிப்பாகவோ நியூட்ரிஷன் படிப்பை மேற்கொள்ளலாம். மாதம் ரூ.8 ஆயிரத்தில் துவங்கி ஒருவரது திறனுக்கேற்ப சம்பளம் தரும் துறை இது. இக்னோ, பெங்களூரு பல்கலைக்கழகம், உஸ்மானியா பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம் போன்ற எண்ணற்ற கல்வி நிறுவனங்கள் இதில் படிப்புகளைத் தருகின்றன.