உள்ளூர் செய்திகள்

ஒரே பாடத்திட்டம் வேண்டும்!

பொறியியல் படிப்பு என்பது தொடர்ந்து ஆராய்ச்சி செய்யவேண்டிய படிப்பு! தேவையான வசதிகளை கல்வி நிறுவன வளாகத்திலேயே ஏற்படுத்திக்கொடுத்து, பேராசிரியர்களின் வழிகாட்டுதலில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள மாணவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்! மாணவர்களை சேர்ப்பது, பாடத்திட்டத்தை மட்டுமே போதிப்பது, வேலைக்கு அனுப்புவது என்று மட்டுமே ஒரு கல்வி நிறுவனம் செயல்படக்கூடாது. பொறியியல் படிப்பில் ஆராய்ச்சி தான் அடுத்தக்கட்டம் என்பது உணர்ந்து, பெரிய பன்னாட்டு நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து, கல்வி நிறுவனங்களிலேயே ஆராய்ச்சி மையம் அமைக்க வேண்டும். புதிய கண்டுபிடிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும்போது தான், பொறியியல் கல்வி அடுத்த நிலைக்கு முன்னேறும்! வேலைகள் நிறைய இருக்கின்றன. அதற்கு தகுதியுள்ளவர்களாக மாணவர்கள் தான் இல்லை! தற்போதைய பாடத்திட்டத்தில், ஒரு மாணவன் படித்துமுடித்து வேலைக்கு செல்லும் போது, தொழில் நிறுவனங்களில் பின்பற்றப்படும் அம்சங்களுக்கும், படித்த பாடத்திட்டத்திற்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கிறது. ஏனெனில், 15 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டுவரப்பட்ட பாடத்திட்டத்தையே இன்றைய மாணவர்களும் படித்து வருகின்றனர்! பொறியியல் படிப்பில், தேசிய அளவில் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து கல்வி நிறுவனங்களும் ஒரே பாடத்திட்டத்தை பின்பற்ற வேண்டும். அப்பாடத்திட்டம் தொழில் நிறுவனங்களுடன் இணைந்ததாகவும் இருக்க வேண்டும். செயல்முறைப் பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். கல்வி சார்ந்த அரசு உயர்பொறுப்புகளில் கல்வியாளர்கள் இருந்தால், இவை எளிதாக நடக்கும். கல்லூரியில் படிக்கும் பாடங்கள், வேலை செய்வதற்கு உதவாது என்பதால் தான், மாணவர்கள் சி, சி++, ஜாவா, கேட், கேம் என்று தனித்தனியாக படிக்கிறார்கள். இவ்வாறு தனியார் பயிற்சி நிறுவனங்களுக்கு சென்று, தங்களது தகுதிகளை உயர்த்திக்கொள்ளாத இளம் பட்டதாரிகளை தொழில் நிறுவனங்கள் தேர்வு செய்தாலும், அவர்களுக்கு ஓர் ஆண்டு வரை பயிற்சி அளித்த பிறகே பணியில் அமர்த்துகின்றன. அதனால் தான், இதுபோன்ற கூடுதல் பயிற்சிகளை மாணவர்களுக்கு, நாங்கள் இலவசமாகவே வழங்குகிறோம். தொழில் நிறுவனங்களுடன் இணைந்து ஆராய்ச்சி மையத்தை ஏற்படுத்த உள்ளோம்! -இ.பாபு, கோஜன் மேலாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம், சென்னை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !