பட்டதாரிகளுக்கான வரப்பிரசாதம் ‘கேட்’!
பொறியியல் மற்றும் அறிவியல் பட்டதாரிகளின் சிறந்த எதிர்காலத்திற்கு வழிவகுக்கும் ஒரு முக்கிய நுழைவுத் தேர்வு தான், ‘கிராஜூவேட் ஆப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங்’ (ஜி.ஏ.டி.இ.,) எனப்படும் ‘கேட்’! ஐ.ஐ.டி., என்.ஐ.டி., ஐ.ஐ.எஸ்சி., உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில், முதுநிலை பட்டப்படிப்பு மற்றும் முனைவர் ஆராய்ச்சி படிப்புகளில் கல்வி உதவித் தொகையுடன் படிக்கும் வாய்ப்பை இத்தேர்வின் மூலம் பெறலாம். இவைதவிர, மத்திய அரசின் கீழ் செயல்படும் பல்வேறு பொது நிறுவனங்களில் பணி வாய்ப்பினை பெறவும் இத்தேர்வு உதவுகிறது. யார் எழுதலாம்?: இளநிலை பட்டப்படிப்பில், பொறியியல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் கட்டடக்கலை போன்ற துறைகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் தேர்ச்சி அல்லது முதுநிலை பட்டப்படிப்பில், அறிவியல், கணிதம், புள்ளியியல், கணினி அறிவியல் அல்லது ஒருங்கிணைந்த அறிவியல் பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பி.பார்ம், எம்.எஸ்சி., எம்.சி.ஏ., எம்.டெக்., டூயல் டிகிரி படித்தவர்களும் இத்தேர்வை எழுதலாம். தேர்வு முறை: இத்தேர்வில் மொத்தம் 23 பாடப்பிரிவுகள் உள்ளன. மல்டிபில் சாய்ஸ் அடிப்படையில், கம்ப்பியூட்டர் பேஸ்டு டெஸ்ட் எனும் சி.பி.டி., தேர்வு முறையில் 65 கேள்விகளுடன் 100 மதிப்பெண்களுக்கு இத்தேர்வு நடத்தப்படும். பொறியியல், கணிதம், மொழியியல், பகுப்பாய்வு திறன்கள் மற்றும் வேதியியல் உள்ளிட்ட பல பகுதிகளில் திறன்கள் சோதனை செய்யப்படும். ‘நெகட்டிவ்’ மதிப்பெண்களும் உண்டு என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்பு: பல்வேறு அரசு பொதுத் துறை நிறுவனங்கள் இத்தேர்வை அடிப்படை எழுத்து தேர்வாக கருதி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்குகின்றன. நிறுவனங்கள்: இந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமான என்.டி.பி.சி., நவரத்னா அந்தஸ்து பெற்ற இந்திய மின் பகிர்மான நிறுவனம், எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழக நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.,), இந்திய எரிவாயு ஆணைய நிறுவனமான கெயில், நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன், பவர் கிரிட் இந்தியா லிமிடெட், பாரத் பெட்ரோலியம், மினரல் எக்ஸ் புளோரேஷன் கார்ப்பரேஷன் லிமிடெட், இந்துஸ்தான் பெட்ரோலியம், நேஷனல் ஹைட்ரோ எலக்ட்ரிக் பவர் கார்ப்பரேஷன், இந்தியன் ஆயில், நேஷனல் தெர்மல் பவர் கார்ப்பரேஷன், நேஷனல் அலுமினியம் கம்பெனி லிமிடெட், நேஷனல் பெர்ட்டிலைசர் லிமிடெட், காஸ் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட், விசாகப்பட்டினம் ஸ்டீல் பிளான்ட், மசாக்கான் டாக் லிமிடெட், ரயில் இண்டியா டெக்னிக்கல் அண்டு எக்னாமிக் சர்வீசஸ் லிமிடெட் மற்றும் ஐ.எஸ்.ஆர்.ஓ., பாபா அடாமிக் ரிசர்ச், ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் ‘கேட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளித்து நேர்முகத் தேர்வு மூலம் உடனடியாக பணிக்கு எடுத்துக் கொள்கின்றன. ஜூனியர் பெல்லோஷிப்: இதைத்தவிர அண்ணா பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் டெல்லி பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., உள்ளிட்ட பல்வேறு கல்வி நிறுவனங்களில் ‘ஜூனியர் பெல்லோஷிப்’ வாய்ப்பும் இத்தேர்வின் அடிப்படையில் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டுக் கல்வி: சிங்கப்பூரில் உள்ள நேஷனல் யுனிவர்சிட்டி ஆப் சிங்கப்பூர் (என்.யூ.எஸ்.,) கல்வி நிறுவனத்தில் இத்தேர்வை முடித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்குகின்றனர். மேலும், ஜெர்மனி போன்ற பல வெளிநாடுகளில் உயர் கல்வியை தொடர விரும்பும் மாணவர்கள் இத்தேர்வில் தகுதி பெற்றால் வாய்ப்பு மிகுதியாக உள்ளது. குறிப்பு: இத்தேர்வில் பெறும் மதிப்பெண்கள் 3 ஆண்டுகள் மட்டுமே செல்லுபடியாகும். மேலும் விவரங்களுக்கு: www.gate.iitr.ernet.in