உள்ளூர் செய்திகள்

அமெரிக்காவில் உயர்கல்வி!

அமெரிக்காவில் உயர் கல்வியை தொடர வேண்டும் என்று கனவு கொண்ட மாணவர்கள், அறிந்து கொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் இதோ: திட்டமிடல்: அமெரிக்க பல்கலைக்கழகங்களில் சேர விரும்பும் இந்திய மாணவர்கள், குறைந்தது 12 முதல் 18 மாதங்கள் முன்னரே தங்களது திட்டமிடலை துவங்கிவிட வேண்டும். அங்கு மாணவர் சேர்க்கை, பெரும்பாலும் ஆகஸ்ட் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறுகிறது. மாணவர் சேர்க்கைக்கு, 10 மாதங்களுக்கு முன்னதாகவே உயர்கல்விக்கு விண்ணப்பிக்க வேண்டும். சில பல்கலைக்கழகங்கள், சுழற்சி முறையில் சேர்க்கை நடத்துவதால், ஆண்டுமுழுவதும் விண்ணப்பங்களை பெறுகின்றன. தேர்வு செய்தல்: அமெரிக்காவில் அங்கீகாரம் பெற்ற 4,500 பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் உள்ளன. இதில், மாணவர்களது தேவைகளை பொறுத்து தேர்வு செய்வது அவசியம்.  மாணவர் விரும்பும் பல்கலைக்கழகங்களின் இணையத்தளங்களுக்கு சென்று, விரும்பும் படிப்பு செயல்பாட்டில் உள்ளதா, சேர்க்கை எண்ணிக்கை எவ்வளவு மற்றும் தகுதிகள் என்னென்ன, ஆகிய விவரங்களை அறிந்துகொண்ட பின்னரே விண்ணப்பிக்க வேண்டும். இவை தவிர, கல்வி வளாகம், தட்பவெப்ப நிலைகள், கல்வி கட்டணம் மற்றும் இதர வசதிகள் போன்ற தனிப்பட்ட விருப்பத்திற்கு ஏற்றவாறு பல்கலைக்கழகங்களை தேர்வு செய்வது சிறப்பு. கூடுதல் வசதி: படிப்பை இன்னும் முடிவு செய்யாத மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் விண்ணப்பிக்கும் போது ‘அன்டிசைடு மேஜர்’ என்பதை குறிப்பிட்டு விண்ணப்பிக்கலாம் அல்லது ‘லிபரல் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’ கல்லூரிகளை தேர்வு செய்து விண்ணப்பிக்கலாம். இதன்மூலம், பொதுவான பாடங்களை முதல் இரண்டு ஆண்டும், கடைசி ஆண்டில் முக்கிய பாடங்களை தங்களுக்கு ஏற்ற துறையில் தேர்வு செய்து படிக்கும் வாய்ப்பு உள்ளது. இல்லையெனில், முதல் இரண்டு ஆண்டு இளநிலை பட்டப்படிப்பை, ‘அசோசியேட் டிகிரி’யாக, ‘கம்யூனிட்டி’ கல்லூரிகளிலும், பின் மூன்று மற்றும் நான்காம் ஆண்டு இளநிலை படிப்பை பல்கலைக்கழகங்களிலும் தொடரலாம். தகுதிகள்: இளநிலை பட்டப்படிப்புக்கு தகுதித்தேர்வில், ‘சேட்’ / ‘ஏ.சி.டி.,’, மற்றும் ஆங்கில மொழிப் புலமை தேர்வில், டோபல் / ஐ.இ.எல்.டிஎஸ்., / பி.டி.இ., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கு  ஜி.ஆர்.இ., / ஜிமேட் மற்றும் ஆங்கில மொழி புலமைத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். உதவித்தொகை மற்றும் இதர கல்வி நிதிஉதவிகளுக்கு இத்தேர்வு மதிப்பெண்கள் கணக்கில் எடுத்து கொள்ளப்படும். கூடுதல் தகவல்களுக்கு:‘யுடூப்’: https://www.youtube.com/user/EducationUSAtv பேஸ்புக்: https://www.facebook.com/EducationUSAatChennai/ பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகள் தகவல்களுக்கு: www.petersons.com தர அங்கீகாரம் பற்றி அறிய: www.chea.org போன்: 1800 103 1231 (திங்கள் முதல் வெள்ளி மாலை 2 - 5 மணி வரை) எஜுகேஷன் யு.எஸ்.ஏ., சென்னை மையம்: 044-28574134. வெபினார்: https://bit.ly/educationusawebinar  (வெள்ளிக்கிழமைதோறும் 4 மணி)இ-மெயில்: usiefchennai@usief.org.in -அமெரிக்க இந்திய கல்வி கூட்டமைப்பு, அமெரிக்க துணைத் தூதரகம், சென்னை. 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !