ஏமாற்றங்களை ஏமாற்றுவோம்!
ஒன்றை எதிர்பார்த்து காத்திருக்கையில், அது கிடைக்காமல் போகும் போது வரக் கூடிய உணர்வே ’ஏமாற்றம்’. இந்த உலகில் ஏமாற்றத்தை உணராதவர்களே இல்லை என்பதே நிதர்சனமான உண்மை! வாழ்க்கையில் ஏமாற்றங்கள் என்பது தவிர்க்க முடியாதது. ஆனால் பலர் ஏமாற்றத்தின் காரணமாக, தோல்வியில் விழுந்து விட்டால் மீண்டும் எழுவதே இல்லை. ஏனேனில் அவர்களால் நாம் ஏன் ஏமாற்றப்பட்டோம்? என்பதை அடையாளம் காண முடிவதில்லை. நாம் செய்யும் தவறுகளாலேயே நாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதே உண்மை. இதைத்தான், ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ என்று கணியன் பூங்குன்றனார் புறநானூற்றில் கூறுகிறார். ஒவ்வொரு நாளும் ஏமாற்றங்கள் நம்மைச் சுற்றி இருக்கலாம். நாம் நம்முடைய செயல்களில் கையாளும் வழிமுறைகளினால் ஏமாற்றங்களை வெற்றி கொள்ள முடியும். * ஏமாற்றத்தை வெளிப்படையாக துணிச்சலுடன் எதிர்கொள்வதே, நம்முடைய மன ஆரோக்கியத்திற்கு நல்லது. * தேவைகளை கட்டுப்படுத்துதல் அவசியம். அடிப்படை தேவைகள் என்கிற அளவுக்கு நம்முடைய தேவைகளை குறைத்து கொள்ள வேண்டும். * ஏமாற்றங்களை ஏற்றுக் கொள்ள பழக வேண்டும். தவிர்க்க முடியாததை ஏற்றுக் கொள்வது மனித சமுதாயத்தின் மிகப் பெரிய சாதனையாகும். அடக்கத்தோடும், பணிவோடும் ஏற்றுக் கொண்ட பிறகு அதன் விளைவுகளை சந்திக்கின்ற அகச் சக்தி நம்மிடம் தானாக வந்து விடும். * ஏமாற்றம் நம்மை துரத்தட்டும் பரவாயில்லை. ஆனால், ஏமாற்றத்தை துரத்தி கொண்டு நாம் ஓட வேண்டாம். * நமக்கு என்ன கிடைத்திருக்கிறதோ அதைப்பற்றி நாம் அதிகம் எண்ணிப் பார்க்க வேண்டும். ஆனால், எது நம்மிடம் இல்லையோ அதைப் பற்றியே நாம் சிந்தித்து கொண்டிருக்கிறோம் என்கிறார்கள் தத்துவ ஞானிகள். எனவே, நாம் நமது எண்ணங்களை மாற்றுவோம். * ‘விதி ஒரு கதவை மூடுகிற போது நம்பிக்கை இன்னொரு கதவை திறந்து வைக்கிறது’ என்பது வாழ்க்கையின் நியதி. ஆகவே நம்பிக்கையோடு இருப்போம். * இருண்ட தினத்தை மறுநாள் வரை வாழ்ந்து விட்டாலே, அந்தநாள் தானாகவே கழிந்து போகும் என்கிறார், வில்லியம் கூப்பர். ஏமாற்றங்களை எதிர்கொள்வோம்; ஓடி ஒளிய வேண்டாம். * ஒருவரிடம் நல்ல மாற்றம் எப்பொழுது வருமெனில் அவரிடம் உள்ள ஏமாற்றம் வெளியே போகும் போது தான். எனவே ஏமாற்றங்களை ஏமாற்றுவோம்! ஏமாற்றங்களை வெல்வோம்! -மு.தென்னவன், மதுரை.