உள்ளூர் செய்திகள்

அமெரிக்க மேம்பாட்டுக்குத் தேவை வெளிநாட்டு மொழிக் கல்வி

உலகையே ஒரு துருவமாக்கும் விதத்தில் பல ஆண்டுகளாக அசுர பொருளாதார வளர்ச்சி கண்டு வந்த அமெரிக்காவைக் கண்டு எந்த நாடு தான் வியப்படையவில்லை? ஆனாலும் இந்த நிலையில் பெரிய சரிவு சமீப காலமாக ஏற்பட்டிருப்பதை நாம் கவனித்து வருகிறோம். தற்போதைய சூழலில் அமெரிக்காவின் தனித்தன்மையை அந்த நாடு கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது என்றே கருதப்படுகிறது. அமெரிக்கர்கள் வெளிநாட்டு மொழிகளை பயிலுவதன் மூலமாகவே அந்த நாட்டின் தொழில் வெற்றியை மேம்படுத்தி தேச பாதுகாப்பை நிலை நிறுத்த முடியும் என்னும் கருத்து தற்போது அங்கே பரவலாக விவாதிக்கப்பட்டு வருகிறது. ஒருபுறம் மிகக் கடுமையான பொருளாதாரச் சவால்களையும் மறுபுறம் சர்வதேச அளவில் தன் மீதான பல நாடுகளின் கசப்புணர்வையும் அமெரிக்கா தற்போது எதிர்கொண்டிருக்கிறது. போதிய தகவல் பரிமாற்றம் இல்லாதது தான் இதற்குக் காரணம் என்னும் கருத்து தற்போது அமெரிக்காவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. பிற நாட்டு மொழித்திறனில்லாதது தான் இதற்குக் காரணம் என்றும் சுட்டிக் காட்டப்படுகிறது. அதிலும் முக்கியமாக மத்திய கிழக்கு மற்றும் ஆசிய நாடுகளின் மொழியறிவின்மையின் காரணமாக அமெரிக்கா உடனடிப் பிரச்னைகளை கையாளுவதில் கடும் சிக்கல்களை சந்திக்கிறது. அமெரிக்காவின் பெருமையை நிலை நிறுத்த வேண்டுமானால் அந்நாட்டினர் உலகளவில் நல்ல தொடர்புகளையும் தகவல் பரிமாற்றங்களையும் வளர்த்துக் கொள்வது கட்டாயத் தேவை என்று அந்த நாட்டு நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.  சீனாவில் 20 கோடி பள்ளிக் குழந்தைகள் ஆங்கிலத்தை ஒரு பாடமாகப் பயிலும் நிலையில் அமெரிக்காவிலுள்ள 24 ஆயிரம் குழந்தைகள் மட்டுமே சீன மொழியைப் படிக்கின்றனர். அமெரிக்காவில் உற்பத்தியாகும் பொருட்களை ஆங்கிலம் தெரிந்தவர்களிடம் மட்டுமே அமெரிக்க பிசினஸ் துறை விற்க முனைகிறது. நல்ல தரத்தின் காரணமாக அவற்றை விற்பதில் சிரமங்களின்றி இது வரை விற்க முடிந்தது. ஆனால் உலகமயமாக்கல் சூழலில் இந்தியா போன்ற நாடுகளின் பொருட்கள் அமெரிக்கப் பொருட்களோடு கடுமையாக போட்டி போடுகின்றன. எனவே அமெரிக்க பிசினஸ் நிபுணர்கள் சில அம்சங்களை வலியுறுத்தி வருகின்றனர். நல்ல உறவும், தரமான சேவையும் உறுதி செய்யப்பட பன்னாட்டு மொழிகளை அமெரிக்க கார்ப்பரேட் துறை அறிந்திருப்பது அவசியம் என்பது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலமாக மட்டுமே அமெரிக்கா எதிர்காலத்தில் பலமும் வளமுமான நாடாகத் திகழ முடியும் என்று இவர்கள் கருதுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !