உள்ளூர் செய்திகள்

கட்டாயத் தேர்ச்சி சரியா, தவறா?

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 21ஏயின் கீழ் 6 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கல்வி என்பது அடிப்படை உரிமையாக மாற்றப்பட்டுள்ளது. அனைவருக்கும் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை மாநில அரசுகளின் வரம்புகளுக்குட்பட்டு தர வேண்டும் என்றும் இந்த சட்டப் பிரிவு உறுதி செய்கிறது. கல்வியை அடிப்படை உரிமையாக்கும் (ஆர்.டி.இ.,) மசோதாவின் மற்றொரு சாராம்சத்தின் படி 8ம் வகுப்பு வரை மாணவர்களை பெயிலாக்கக் கூடாது என்றும் கட்டாயத் தேர்ச்சி செய்ய வேண்டும் என்பதும் இந்த மசோதாவின் கூறுகளாக உள்ளன. இது நாடெங்கும் உள்ள ஆசிரியர்களின் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இதையொட்டி விவாதிக்கப்படும் கருத்துக்கள் இவை தான்... * 8ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி பெறச் செய்வது கல்வியின் தரத்தை நீர்த்துவிடச் செய்து விடும்* அனைவருக்கும் ஆரம்பக் கல்வி என்பது நல்ல திட்டம் தான் என்ற போதும் கல்வியின் தரத்தை காவு கொடுத்து அதைப் பெறுவது ஏற்புடையதல்ல.* குறைந்த பட்ச தரம் கூட இல்லாமல் அடுத்த மேல் வகுப்புக்கு மாணவர்களை அனுப்புவதால் அவர்களின் கிரகிக்கும் திறன் பெரிதும் பாதிக்கப்படும்.* இந்த மசோதா நிறைவேறும் பட்சத்தில் நமது நாட்டில்படித்தும் கல்வியறிவு இல்லாத மனிதர்களே அதிகம் இருப்பர். கல்வியமைப்பே கட்டாயத் தேர்ச்சி முறையினால் பாதிக்கப்படும். * திறன் வாய்ந்த மனித வளத்தை உருவாக்க தேர்வு முறையே சரியானது.* மாணவர்கள் தங்களது குறைபாடுகளை கண்டறிந்து சரி செய்து கொள்ள உதவும் தேர்வு முறையை நீக்கினால் பலவீனமான எதிர்கால சந்ததியே உருவாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 86வது திருத்தம் அறி முகம் செய்யப்பட்டு 6 ஆண்டுகளுக்குப் பின் கல்வியை அடிப்படை உரிமையாக்கும் மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அறிமுகம் செய்யும் முன் சட்டம் மற்றும் நிதியமைச்சகங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மாநிலங்கள் இத் திட்டத்திற்கு வழங்க வேண்டிய நிதி தொடர்பாக சர்ச்சைகள் எழுந்தன.  இந்தியாவில் கட்டாய ஆரம்பக் கல்வி முறையை கொண்டுவர ரூ.55 கோடி செலவாகும் என்பதால் மாநிலங்கள் இந்தச் செலவை பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டன. மாநில அரசுகள் இந்த மசோதாவின் தற்போதைய வடிவத்தில் சில மாற்றங்களை கேட்டதால் இத் திட்டத்தின் முழுச் செலவையும் மத்திய அரசே ஏற்றுக் கொள்ள முடிவு செய்யப்பட்டது. கல்வி அடிப்படை உரிமைச் சட்டம் தனியார் மற்றும் அரசுப் பள்ளிகளுக்கான குறைந்த பட்ச தரத்தை நிர்ணயிக்கும் என்றும் குழந்தைத் தொழிலாளர் முறை, பாலின பாகுபாடு, ஊனமுற்ற குழந்தைகளுக்கு தனி கவனம் போன்ற அம்சங்களில் கவனம் செலுத்திடும் என்றும் கூறப்படுகிறது.  தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை ஏழைக் குழந்தைகளுக்குக் கட்டாயம் ஒதுக்க வேண்டும் என்றும் அதற்கான கட்டணத்தை மத்திய அரசு பள்ளிகளுக்கு வழங்கிடும் என்றும் இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கிடையே சமீபத்தில் ராஜ்ய சபாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மசோதாவின் வெற்றி தோல்வி குறித்த கேள்விகளுக்கு காலம் தான் பதில் கூற வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !