ராக்கெட் சயின்ஸ் - துறை அறிமுகம்
ஏரோநாடிக்ஸ் மற்றும் விண்வெளி அறிவியலை உள்ளடக்கிய அறிவியலின் புதிய துறை தான் ராக்கெட் சயின்ஸ். கடந்த சில ஆண்டுகளாக நம் நாட்டில் சிறப்பான வளர்ச்சியை கண்டுவரும் இத்துறை மாணவர்களுக்கான மற்றொரு கல்வி வாய்ப்புப் பிரிவாக விளங்குகிறது. வளர்ந்த நாடுகளில் இத் துறையின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கிறது. இத்துறைக்கு அதிக முக்கியத்துவமும் ஏராளமான முதலீடும் தரப்பட்டு வருவதையும் காண்கிறோம். அமெரிக்காவின் கொலம்பியா விண்கலத்தில் இந்திய அமெரிக்கப் பெண்ணான கல்பனா சாவ்லா விண்வெளிப் பயணம் மேற்கொண்டதன் மூலமாக பல்வேறு இந்தியர்களின் மனதில் நீங்காத இடம் பெற்றார். எதிர்பாராத விதமாக அவர் சென்ற விண்கலம் விபத்துக்குள்ளாகி அவர் உயிரிழக்க நேரிட்டாலும் இத்துறை குறித்த ஆர்வமும் விழிப்புணர்வும் இதன் பின் அதிகரித்திருப்பது உண்மைதான். 1903ம் ஆண்டில் தொடங்கிய அதிவேக வானூர்தி வளர்ச்சியானது இன்று பூமிக்கான செயற்கைக் கோள் நிறுவும் வளர்ச்சியாக பரிணாமம் பெற்றுள்ளது. அதிவேக விமானங்கள் ராணுவத்தில் பயன்படுவது, ஆளில்லாத ராணுவ கண்காணிப்பு வானூர்தி, நிலவில் ஆய்வுக்கான கலங்கள், பிற கிரகங்களை ஆய்வு செய்வது என பல்வேறு நோக்கங்களுடன் இத் துறை சிறகடித்துப் பறந்து விரிவடைந்துள்ளது. நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்திக்கு இணையான செலவு விகிதம் மற்றும் ஆய்வுப் பணிகளின் அடிப்படையில் ஐ.எஸ்.ஆர்.ஓ., என்னும் இந்திய விண்வெளி ஆய்வு மையமானது உலகின் முதல் 3 நாடுகளில் ஒன்றாக நம்மைத் திகழ வைத்துள்ளது. இதன் சுய முயற்சியில் இந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் நிறுவனமானது சிறந்து விளங்குகிறது. தற்சமயம் இத் துறையானது கட்டுப்படுத்தப்பட்ட மற்றும் பாதுகாப்புக்குட்பட்ட துறையாக நம் நாட்டில் இருந்த போதும் வெகு விரைவிலேயே இத் துறையிலும் அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்படவுள்ளது. இதனால் வெளிநாட்டு விண்வெளி நிறுவனங்களும் நம் நாட்டு விண்வெளி ஆய்வுப் பணியில் ஈடுபடவுள்ளன. பணித்தன்மை மற்றும் வாய்ப்புகள்விண்கலங்கள், ஹெலிகாப்டர்கள், ஆயுதங்களின் வடிவமைப்பு, உற்பத்தி, செயல்பாடு பற்றிப் படிக்கும் பொறியியலின் ஒரு பிரிவாக ஏரோஸ்பேஸ் உள்ளது. ஏரோடைனமிக்ஸ், புரபல்ஷன், எலக்ட்ரானிக்ஸ் பிரிவுகளோடு இணைந்து ஏரோஸ்பேஸ் கூட்டாக செயல்படுகிறது. ஏவியேஷன், விண்வெளி ஆய்வு, பாதுகாப்பு அமைப்புகளின் மாதிரி, வளர்ச்சி மற்றும் பராமரிப்புப் பணிகள் இதில் மேற்கொள்ளப்படுகின்றன. இத்துறை படிப்புகளை முடிப்பவருக்கு ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஹெலிகாப்டர் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, தனியார் விமான நிறுவனங்கள், எச்.ஏ.எல்., என்.ஏ.எல்., ஐ.எஸ்.ஆர்.ஓ., டி.ஆர்.டி.ஒ., போன்ற நிறுவனங்களில் சிறப்பான பணி வாய்ப்புகள் கிடைக்கின்றன. இது தவிர ஆய்வு மாதிரிச் சோதனை, உற்பத்தி மற்றும் நிர்வாகப் பணிகளும் கிடைக்கின்றன. படிப்புகள்ஐ.ஐ.டி.,க்கள், பஞ்சாப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இத் துறை தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன. இவை நடத்தும் பி.டெக்., படிப்பில் நுழைவுத் தேர்வு மூலமாக சேர வேண்டியுள்ளது. சோதனைக் கூடங்களின் தன்மையைப் பொறுத்து கல்வி நிறுவனங்கள் மதிப்பிடப்படுகின்றன. பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிப்பவர்கள் இத்துறையில் இணைந்தால் அவர்கள் துறையில் சிறப்பாக மிளிர முடிகிறது. பெங்களூருவிலுள்ள ஐ.ஐ.எஸ்.சி., இத்துறையில் எம்.எஸ்சி., எம்.டெக்., படிப்புகளை நடத்துகிறது. கேட் தேர்வு மூலமாக இதில் சேரலாம். இது தவிர வெளிநாட்டுப் பல்கலைக்கழகமான அரிஸோனா ஸ்டேட் பல்கலைக்கழகம், எம்ப்ரி-ரிடில் ஏரோநாடிக்ஸ் பல்கலைக்கழகம், மிக்ஸிகன் பல்கலைக்கழகம், இல்லியனாய்ஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் பல்கலைக்கழகம், ஆர்லிங்டன் போன்றவற்றிலும் துறை தொடர்பான படிப்புகள் தரப்படுகின்றன. வாய்ப்புகள் இத்துறையில் போக்குவரத்து விமானங்களை தயாரிப்பது, விண்கல உற்பத்தி, ஆளில்லாத விண்கலம் தயாரிப்பு, நாட்டின் பாதுகாப்புப் பணிகளுக்கான விண்கலம், ஆயுதம் தயாரிப்பு, ஆய்வுப் பணிகள் என இத்துறை தொடர் வளர்ச்சி கண்டு வருவதால் துறைக்கான எதிர்காலம் சிறப்பாகவே இருக்கிறது. தனியார் இத்துறையில் அதிகமாக ஈடுபடுவதால் இத்துறையின் வளர்ச்சி உறுதியானது என்றே கூறலாம். திறன்களைப் பொறுத்து ஒருவரது சம்பளம் தீர்மானிக்கப்படுகிறது.