எப்போதும் மதிப்பு இழக்காத சிவில் சர்விசஸ் துறை
ஐ.டி., போன்ற 20-21ம் நுõற்றாண்டுத் துறைகளின் எழுச்சியின் பின் சிவில் சர்விசஸ் போன்ற துறைகள் மதிப்பிழந்திருப்பதாக பொதுவான நம்பிக்கைகள் நம்மிடம் உண்டு. மேலும் ஊரக இளைஞர்கள் தான் நிர்வாகப் பணிகளுக்குச் செல்ல இன்னமும் கூட விரும்புவதாகவும் நம்பப்படுகிறது. ஆனால் இதுகுறித்த நிர்வாகச் சீர்திருத்தக் குழுவின் ஆய்வுகள் வேறு பட்ட தகவல்களைக் கூறுகின்றன. 2003-04ம் ஆண்டு முதல் 2006-07ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் சிவில் சர்விசஸ் தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே வருவதாகவும் ஊரகப் பகுதி இளைஞர்களை விட எப்போதும் நகர்ப்புற இளைஞர் களே அதிக எண்ணிக்கையில் இத் தேர்வை எழுதி வெற்றி பெற விழைவதாகவும் நிர்வாகச் சீர்திருத்தக் குழு கூறியுள்ளது. எனினும் இந்தத் தேர்வு 3 கட்டங்களைக் கொண்டிருப்பதால் பொதுவாக நீண்ட கால ஒரு முறையாக நடத்தப்படுவதை இக் குழு குறை கூறியுள்ளது. அதாவது ஒருவர் இத்தேர்வில் கலந்து கொண்டு முதனிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் தகுதி பெற சராசரியாக ஒரு ஆண்டுக்கும் மேலாக ஆகிறது. இதை கணிசமாகக் குறைத்து சில மாதங்களுக்குள் முடிக்க முடியுமா என்பது பற்றிய யோசனைகள் தேவை என இக்குழு வலியுறுத்தியுள்ளது.