உள்ளூர் செய்திகள்

ஐ.டி., வேலைக்குக் காத்திருக்க வேண்டுமா

கடந்த ஆண்டு தங்களது இன்ஜினியரிங் படிப்பை முடித்துவிட்டு ஏற்கனவே ஐ.டி., நிறுவனங்களின் கேம்பஸ் இன்டர்வியூ மூலமாக பணிக்காகத் தேர்வு செய்யப்பட்டிருக்கும் இளைஞர்கள் பலர் இருப்பீர்கள். உங்களில் பலர் தற்போதைய கடுமையான பொருளாதாரச் சூழலால் இன்னமும் பணி அழைப்புப் பெறாமல் காத்திருப்பவராக இருக்கலாம். இன்னும் சிலருக்கு பணி அழைப்பு வந்தும் முன்பு உறுதியளித்தது போன்ற சம்பளம் இல்லை என்பதால் அந்த வாய்ப்பை நிராகரிப்பவராகவும் இருக்கலாம். இது புதிய வேலைகளைப் பொறுத்தவரை சற்றே சிரமமான காலகட்டம் தான். எதிர்காலம் பற்றிய குழப்பங்கள் நீடிக்கும் இன்றைய சூழலில் உடனடியாக நீங்கள் என்ன செய்யலாம். கடந்த சில மாதங்களாகவே பொதுத்துறை வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், பிற நிறுவனங்கள் தொடர்ந்து புதிய வேலை வாய்ப்புகளை அறிவித்த வண்ணம் உள்ளன. இந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டு வெவ்வேறு போட்டித் தேர்வுகளையும் உங்களைப் போன்ற குழப்பத்தில் இருப்பவர்கள் கட்டாயம் எழுத வேண்டும். இதன் மூலமாக நிரந்தரமான நல்ல வேலை ஒன்றை நீங்கள் பெறலாம். ஐ.டி., நிறுவனங்கள் கூட தற்போது சிக்கன நடவடிக்கை என்று காபி, டீ போன்ற செலவுகளைக் குறைக்கத் தொடங்கியுள்ளன. புதிய வேலைகளைக் குறைத்துள்ளன. தவிர சம்பள வெட்டு போன்ற நடவடிக்கைகளும் இவற்றில் சாதாரணமாகக் காண முடிகிறது. ஆனால் பொதுத் துறை மாறி வருகிறது. டாம்பீகமான நடவடிக்கைகளில் பொதுத் துறை நிறுவனங்கள் எப்போதும் ஈடுபட முடியாது என்றாலும் மெதுவாக நிதானமாக இவை மாறிவருகின்றன. உறுதியான சம்பளம், நிலையான வேலைத் தன்மை மற்றும் ஓரளவு நிலையான பணி நேரங்கள் என்பதால் அடுத்த சில ஆண்டுகளுக்கு பொதுத் துறை நிறுவனங்களில் சேர கடுமையான போட்டி நிலவினால் ஆச்சரியமில்லை. சமீப காலத்தில் நடத்தப்பட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களின் நிர்வாகப் பணியிடங்களில் கடுமையான போட்டியை ஏற்படுத்தியவர்கள் இன்ஜினியரிங் பட்டதாரிகள் தான். எம்.பி.ஏ., பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., தகுதியுடையவர்களோடு சேர்ந்து இவர்கள் கிளார்க், நிர்வாக அதிகாரி போன்ற பணிகளுக்கான போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு சிறப்பான வெற்றி பெற்றுள்ளனர். கிடைக்குமா கிடைக்காதா என்ற நிலையில்லாத் தன்மையின்றி இவர்களுக்கு பொதுத் துறை நிறுவனங்கள் நல்ல வாய்ப்பை அளிக்கின்றன. மேலும் போட்டித் தேர்வுகளில் இடம் பெறும் ஆப்டிடியூட் பகுதியில் இவர்களுக்கு ஏற்கனவே நல்ல பரிச்சயம் உள்ளது. எனவே பொதுத் துறையில் நிதி நிறுவனங்கள் என்று மட்டுமன்றி ஸ்டீல், எண்ணெய் மற்றும் அனைத்துத் துறைகளிலுமுள்ள நிறுவனங்கள் தற்போது அதிக எண்ணிக்கையில் தொடர்ந்து அறிவிக்கும் பணி வாய்ப்புகளை தவறாது பயன்படுத்திக் கொள்ள வேண்டும். சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பி.எஸ்.என்.எல்., ஜே.டி.ஓ., பணியிடங்களுக்கான வாய்ப்பில் எண்ணற்ற இன்ஜினியரிங் பட்டதாரிகள் விண்ணப்பிப்பது தற்போதைய நிலையின் தீவிரத்தைக் காட்டுகிறது. 3500க்கும் மேற்பட்ட காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அது ஒரு அரிய வாய்ப்பாகவே அமைகிறது. கடந்த சில மாதங்களில் பொதுத் துறை பொதுக் காப்பீட்டு நிறுவனங்களான ஓரியன்டல் இன்சூரன்ஸ், நேஷனல் இன்சூரன்ஸ் ஆகியவை நிர்வாக அதிகாரி பணிக்கான வாய்ப்பை வழங்கியது. இப்போது மற்றொரு பொதுத் துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனமும் ஸ்பெஷலிஸ்ட்ஆபிசர் பணி வாய்ப்பை அறிவித்துள்ளது. இதுபோன்ற பணி வாய்ப்புகள் சிறந்த நிறுவனத்தில் தொடக்கத்திலேயே சிறப்பான நிலையிலான வாய்ப்பைத் தருவதால் பணியில் சேர்ந்து 10 ஆண்டுகளில் உங்களால் சிறப்பான பதவி உயர்வுகளைப் பெற முடியும். போட்டித் தேர்வில் இன்ஜினியரிங் மாணவர்களுக்குக் கடினமான பகுதி என்பது பொது அறிவும் ஆங்கிலமும் தான். இதை போதிய பயிற்சியின் மூலமாகவே பெற முடியும். எனவே இது போன்ற வாய்ப்புகளை எப்போதும் தவறவிடக் கூடாது. வளமான எதிர்காலம் ஐ.டி., துறையில் தான் இருக்கிறது என்ற நினைப்பை விட்டுவிட்டு நம்மைச் சுற்றியுள்ள வாய்ப்புகளை கவனித்து விண்ணப்பிக்க வேண்டும். பொதுத் துறை நிறுவனங்கள் நவீனமயமாகி வருவதால் உங்களது இன்ஜினியரிங் திறன்கள் பயன்படும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. இவை எல்லாவற்றையும் விட முக்கியமான அம்சம் ஒன்று உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஐ.டி., துறையில் பணி புரிவோர் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொள்வதைக் காண்கிறோம். 25 வயதுக்குள் இளைஞர்கள் திருமணம் செய்து கொள்ள விரும்புகிறார்கள். பெண்கள் படித்து முடித்து ஒரு சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குள் திருமணம் செய்து கொள்கின்றனர். எப்போதும் பெண்கள் பற்றாக்குறை காணப்படுகிறது. பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்களை பெண்களும் அவர்களின் பெற்றோரும் நாடும் போக்கை தற்போது காண முடிகிறது. எனவே எதிர்கால வாழ்க்கைக்கும் இது உதவும் என்பதில் சந்தேகமில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !