எதிர்கால எம்.பி.ஏ.,க்களுக்கு சில தகவல்கள்...
நாடெங்குமுள்ள பிசினஸ் மேனேஜ்மென்ட் நிறுவனங்களில் கேம்பஸ் இன்டர்வியூக்கள் சமீபத்தில் தான் நடந்து முடிந்துள்ளன. இவற்றை அலசிப் பார்த்தால் திருப்தியில்லை என்றே கூற வேண்டியுள்ளது. தங்களிடம் படித்து முடிக்கவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் நல்ல பணியைப் பெற்றுத் தர ஐ.ஐ.எம்., போன்ற நிறுவனங்களுக்கே முடியவில்லை என்று தகவல்கள் கூறுகின்றன. ஐ.ஐ.எம்.,களின் நிலையே இப்படியென்றால் பிற நிறுவனங்களைப் பற்றிக் கூற வேண்டுமா? இதற்கு என்ன காரணம்? உலகெங்கும் நிலவி வரும் மந்தமான பொருளாதாரச் சூழல் ஒரு காரணம் எனக் கூறலாம். ஐ.டி., தவிர பிற துறைகளிலும் இந்த நிலை காணப்படுகிறது. முன்பு போல அல்லாமல் இந்த மந்தமான சூழல் ஒரு சில பகுதிகளை மட்டுமே பாதிக்காமல் உலகெங்கையும் பாதித்துள்ளது. இதனால் கேம்பஸ் தேடிவந்து தங்களுக்கான பணியாளர்களை நிறுவனங்கள் எடுத்துக் கொள்வது வெகுவாக குறைந்துள்ளது. ஐ.ஐ.எம்., போன்றவற்றைத் தேடி சில நிறுவனங்கள் தேடி வந்து வாய்ப்பு தந்திருப்பதே அவற்றோடான தங்களது உறவு பாதிக்கப்படாமலிருக்கத் தான். அதிகமான கட்டணங்கள் செலுத்தி எம்.பி.ஏ., முடிக்கவிருப்பவர்கள் தங்களது கல்விக் கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டியிருப்பதால் எந்தவொரு வாய்ப்பையும் தவறவிடாமல் விழிப்போடு இருக்க வேண்டிய சூழல் இது. எனவே தற்போது எம்.பி.ஏ.,வில் சேரவிருப்பவர்கள் ஒரு சிறப்புப் படிப்பைப் படிக்காமல் 2 சிறப்புப் படிப்பாக இதைத் தேர்வு செய்யலாம். இதனால் திறன்கள் பரந்து பட்டதாக அமைவதோடு நமக்கு நல்ல வாய்ப்புகளையும் தந்திடும். தற்போதைய சூழலில் நிறுவனங்கள் தங்களது எதிர்கால ஊழியர்கள் தாங்களாகவே தங்களை ஊக்குவித்துக் கொள்ளும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றன. ஓய்வு நேரங்களில் தங்களை ஒரு சுயவேலை மேலாண்மைக்கேற்றவராக மாற்றிக் கொள்ளக் கூடியவராக நீங்கள் இருந்தால் உங்களுக்கும் எதிர்காலத்தில் சிறப்பான வாய்ப்புகள் காத்திருக்கின்றன என்பதை அறியுங்கள். எதிலும் வறட்டுப் பிடிவாதம் கொண்டவராக இருக்க வேண்டாம். எந்த நிறுவனத்திலும் பணியாற்றும் குணமுடையவராக உங்களை நீங்கள் வைத்துக் கொள்ள முயற்சி செய்யுங்கள். இப்போதிருந்தே உங்களது மென்திறன்களை வளர்த்துக் கொள்ள முயலுங்கள். இவை தான் உங்களுக்கான எதிர்காலத்தை அமைக்கவுள்ளது என்பதை அறிந்து அதற்கேற்ப செயல்படுங்கள்.