உள்ளூர் செய்திகள்

மென் திறன்களால் மேம்படும் வாழ்க்கை

அமெரிக்காவிலுள்ள இல்லியனாய்ஸ் பல்கலைக்கழகத்தில் மனித மற்றும் சமூக மேம்பாட்டுத் துறையில் பேராசிரியராகப் பணி புரிபவர் கிறிஸ்டி லிராஸ். சாப்ட் ஸ்கில் எனப்படும் மென்திறன்களை மாணவர்கள் வளர்த்துக் கொள்வதன் முக்கியத்துவம் குறித்து சில அறிவுரைகளை இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ளார். கடுமையான ஆய்வுகளுக்குப் பின் இந்த முடிவுகளை அவர் அறிவித்துள்ளார். மென் திறன்கள் குறித்த அவரது கருத்துக்கள் இவை தான்... * நல்ல சமூகத் திறன், வேலைத் திறன், கலை பண்பாட்டு நடவடிக்கைகள் போன்ற கூடுதல் திறன்களைக் கொண்ட உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உயர்கல்வி மற்றும் நல்ல ஊதியங்களைப் பெறுவதில் முன்னிலை வகிக்கிறார்கள். * சமூகத்துடன் சுமூக உறவு கொள்வது, நேரம் தவறாமை, சுய கட்டுப்பாடு, சமூக பிரக்ஞை, கலை போன்ற மென்திறன்களோடு தொடர்புடைய அம்சங்களில் கவனம் செலுத்தினால் அது அந்த மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் உதவும். * நல்ல எதிர்காலம் அமைந்திட நல்ல மதிப்பெண்கள் அவசியம் தான். ஆனால் அதே நேரம் வெறும் அதிக மதிப்பெண்களைப் பெறுவதோடு மட்டும் நின்றுவிடாமல் மென்திறன்களை ஒருவர் வளர்த்துக் கொள்வது மிக மிக அவசியமாகும். * உலகப் பொருளாதாரமானது வெறும் உற்பத்தி சார்ந்ததாக இல்லாமல் சேவை மற்றும் தகவல் தொடர்பானதாக மாறி வருகிறது. இந்த நிலையில் வெறும் சாதனைகளைப் பட்டியலிடும் ஊழியர்களை விட வாடிக்கையாளர்களோடு இனிமையாகப் பழகக் கூடிய, சிறப்பான சேவையைத் தரக்கூடிய ஊழியர்களைத் தான் நிறுவனங்கள் பணிக்கு எடுத்துக் கொள்ள விரும்புகின்றன. * தலைமைப் பண்புகளைக் கொண்ட ஊழியர்களே இன்று பெரிதும் விரும்பப்படுகிறார்கள். எனவே சாப்ட் ஸ்கில் எனப்படும் மென்திறன்களை இளைஞர்கள் பெற வேண்டும் என்பதே கல்வி/வேலை ஆலோசகர்களின் வலியுறுத்தலாக அறியப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !