மேம்படுத்த வேண்டிய நூலக பயன்பாடுகள்
இணைய தளம், மொபைல் என நவீன தொழில்நுட்பத்தின் வீச்சால் நமது தகவல் பரிமாற்றம் பெரிதும் வளர்ந்துள்ளது. எனினும் வாசிப்பது என்னும் பழக்கத்தின் நுட்பமான பயன்பாட்டை அதை அனுபவிப்பவர் மட்டுமே அறிவர். நூலக பயன்பாட்டை ஒருவர் அறிந்து கொள்ளும் சரியான தருணம் என்பது பள்ளிப் பருவம் தான். பள்ளிப்பருவத்தில் நூலக பயன்பாடானது சரியாக தொடங்கப்பட்டால் எதிர்கால பயன்பாடு மிக மிக முக்கியமானதாகும். பள்ளிகள் தங்களது நூலகங்களை சரியான முறையில் மாணவர்கள் பயன்படுத்துவது குறித்து பல குறிப்புகளை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். அவற்றில் சில * வகுப்பறை நூலகங்களில் குழந்தைகள் இலக்கியம், சிறுகதைத் தொகுப்பு, கவிதை, படக்கதை, கற்பனைக் கதை, நகைச்சுவை, புதிர், நெடுங்கதை, வாழ்க்கைக் குறிப்பு, பரீட்சார்த்தக் கதைகள், இதழ்கள், நாளிதழ்கள் போன்றவை கட்டாயம் இடம் பெற வேண்டும். * சிறிய சிறிய கல்வித் திட்டங்கள் (புராஜக்ட்கள்), டைரிகள், சுயமாக உருவாக்கப்பட்ட புத்தகங்கள் ஆகியவை நூலகங்களில் கட்டாயம் இடம் பெற வேண்டும். இவை முக்கிய தகவல் சுரங்கங்களாக அமையும். குழந்தைகள் வீட்டில் படித்த புத்தகங்களையும் வகுப்பறை நூலகங்களில் வைப்பதும் சிறப்பான பலன் தரும். பங்கிடும் பண்பை வளர்ப்பதோடு, நூலகத்தின் செழுமையையும் இது உறுதி செய்திடும். * மாணவர்களோடு கல்லூரியின் நூலகத்திற்கு ஆசிரியர்கள் சென்று மாணவர்களுக்குத் தேவைப்படும் புத்தகங்களை அவர்கள் பெறுவதில் உதவுவது மிக முக்கியம். வகுப்பறையில் நடத்தப்படும் பாடத்திற்கு உபயோகமான நூல்களை ஆசிரியர்கள் நூலகங்களில் முன் கூட்டியே வைத்திடவேண்டும். * நூலகங்களில் ஆங்கில மொழி வாயிலான நூல்களை மட்டும் வைக்காமல் பிற மொழி நூல்களையும் வைப்பது மொழிகளின் இணையான அர்த்தத்தை உணர உதவுவதோடு குழந்தைகளுக்குத் தேவையான மொழிகளுக்கிடையேயான பரிமாற்றத் தேவைகளையும் நிறைவேற்றும். * நூலகங்களில் வாசிப்பதற்குக் குறிப்பிட்ட காலத்தை ஒதுக்குமாறு செய்ய வேண்டும். இது வகுப்பறை நேரத்துடன் இல்லாமல் வாசிக்க தனியான முக்கியத்துவத்துடன் தரப்பட வேண்டும். * படித்தது பற்றிய கருத்துக்களை அறிவதும் முக்கியம். வாய்மொழியாக அவை முதலில் பெறப்பட்டு பின்பு எழுத்துவடிவமாகவும் பெறப்படலாம். * தேவைக்கேற்ப புதிய புத்தகங்களை நூலகத்திற்கு வாங்குவது மிக அவசியமான ஒன்று. இது போலவே புதிய இதழ்களும் பத்திரிகைகளும் வாங்கப்பட வேண்டும். * வகுப்பறையிலோ சிறிய குழுவிலோ புத்தக அனுபவங்களை பகிர்ந்து கொள்ளச் செய்வதும் முக்கியமான செயல். புத்தகங்களை குழந்தைகளே தேர்வு செய்யச் சொல்வதும் அவசியமான ஒன்று. எதிர்பாராமல் புத்தகங்கள் கிழிந்து விட்டால் குழந்தைகளே அதை சரி செய்யக் கற்றுக் கொடுக்க வேண்டும். * வகுப்பறை நூலகங்களை நடத்துவது அதிக செலவு பிடிக்கும் என்ற தவறான கருத்து நிலவுகிறது. ஆனால் பல குழந்தைகள் பதிப்பகங்கள் செலவு குறைவான புத்தகங்களை வெளியிடுகின்றன. எனவே வகுப்பறை நூலகங்களை ஏற்படுத்துமாறு பெற்றோரும் வலியுறுத்த வேண்டும்.