பார்மசி படிக்க விருப்பமா
இன்று மனிதன் உயிர்வாழ காற்று, தண்ணீர், உணவு எவ்வளவு முக்கியமோ அதேபோல மருந்துகளும் முக்கியத்துவம் பெற்றுள்ளன. கடந்த நூற்றாண்டில் மருந்துகள் இயற்கையாகவும், பொடியாகவும், திரவமாகவும் பயன்படுத்தப்பட்டன. இன்று அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மருந்துகள் செயற்கையாக, நவீன முறையில் மிகுந்த நுட்பமாக தயாரிக்கப்படுகின்றன. நவீன கால மருந்துகள் ஆற்றல் மிக்கதாக உள்ளன. மாத்திரை, கேப்சூல், சொட்டு மருந்து, ஆயின்மென்ட், ஊசி மருந்து, டானிக், இன்ஹேலேசன், ஸ்ப்ரே, ஜெல்லி, கிரீம், லோஷன் போன்று பல்வேறு வடிவங்களில் இன்று கிடைக்கின்றன. ஒரு படைவீரன் ஆயுதமின்றி போர்க்களத்தில் எவ்வாறு போரிட முடியாதோ அதேபோல் டாக்டர்களும், மருத்துவ நிபுணர்களும் மருந்துகளின்றி சிகிச்சையளிக்கமுடியாது. மருந்துகள் தயாரிக்கும் படிப்பு பார்மசூட்டிக்கல் அல்லது பார்மசி எனப்படும். மருந்தியல், தயாரித்தல், பாதுகாத்தல், உரிய முறையில் வழங்குதல் என விவரிக்கப்படுகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்ப உதவியால் புதிய கண்டுபிடிப்புகளும், மேம்பாடும் மருந்து தயாரிக்கும் துறையை வெகுவாக முன்னேற்றம் அடையச் செய்துள்ளது. தற்போதுள்ள மருந்துகள் பாதுகாப்பானதாகவும் ஆற்றல் மிக்கதாகவும் இருக்கிறது. முன்னாள் நோயாளிகளை குணப்படுத்துவதில் பார்மசிஸ்ட்களின் பங்கு குறைவு. தற்போதுள்ள பார்மசிஸ்ட்கள் மருத்துவத் துறையில் முன்னணியில் நின்று பங்களித்து வருகின்றனர். மருத்துவர்கள் மருந்துகளைப் பற்றிய அனைத்து தகவல்களையும் பார்மசிஸ்ட் மூலமே அறிந்து கொள்ள முடியும். அவர்கள் மதிநுட்பமாகவும், எச்சரிக்கையுடனும், விவேகத்துடனும் சமூகத்துக்கு தொண்டாற்றி வருகின்றனர். பார்மசிஸ்ட் ஆக தங்களை பதிவு செய்து கொள்வதற்கு குறைந்தது டிப்ளமோ (டி.பார்ம்.,) மட்டுமே போதுமானது என்பது இந்தியாவில் மட்டுமே நடைமுறையில் உள்ளது. ஒருவர் டி.பார்ம்., படித்திருந்தால் பார்மசிஸ்ட் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம். மற்ற நாடுகளில் குறைந்தது பி.பார்ம்., அல்லது பி.எஸ்சி., பார்மசி போன்ற பட்டப்படிப்புகளை முடித்திருந்தால் மட்டுமே லைசென்ஸ் பெற முடியும். வளர்ந்த நாடுகளில் டாக்டர் ஆப் பார்மசி (பார்ம்.டி.,) படிப்பும், மருத்துவமனை மற்றும் கிளினிக்குகள் சார்ந்த பார்மசி படிப்புகளும் பிரபலமடைந்து வருகின்றன. இன்று அமெரிக்காவில் பார்மசிஸ்டாக பணிபுரிய வேண்டுமெனில் ஒருவர் கண்டிப்பாக பார்ம்.டி., பட்டப்படிப்பையும், ஸ்டேட் பார்மசி லைசென்சர் எக்சாமினேஷன் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தது ஆயிரத்து 500 மணி நேரம் கொண்ட பார்மசி படிப்பை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்தியாவில் பார்மசி கல்வி இந்தியாவில் பார்மசி கல்வி மிக தாமதமாகவே ஆரம்பிக்கப்பட்டது. எம்.எல். ஸ்க்ரோப் என அனைவராலும் அழைக்கப்பட்ட மகாதேவ லால் ஸ்க்ரோப் என்பவரால் 1932ம் ஆண்டு பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பார்மசி கல்வி முதன்முதலாக தொடங்கப்பட்டது. இப்பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் மதன் மோகன் மாளவியா அளித்த ஊக்கம் மற்றும் ஆதரவினால், ஸ்க்ரோப் பார்மசி படிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தினார். மேலும் 1940ம் ஆண்டு எம்.பார்ம்., பட்டப்படிப்பு இப்பல்கலைக்கழகத்திலேயே அறிமுகப்படுத்தப்பட்டது. பிட்ஸ் பிலானி, சாகர் பல்கலைக்கழகம், ஜதவ்பூர் பல்கலைக்கழகம் போன்றவற்றில் இந்த படிப்பு அறிமுகப்படுத்தப்பட பேராசிரியர் எம்.எல்.ஸ்க்ரோபே காரணமாக இருந்தார். 1945ம் ஆண்டு கேரளாவில் உள்ள மகாராஜாஸ் கல்லூரியில் டிப்ளமோ இன் பார்மசூட்டிகல் சயின்ஸ் படிப்பு தொடங்கப்பட்டது. 1930ம் ஆண்டுகளில் ஸ்க்ரோப்புடன் பணியாற்றிய வேதியியல் பேராசிரியர் கே.என்.மேனன் என்பவரே இந்தியாவில் நான்காவது முறையாக பார்மசி படிப்பு தொடங்க காரணமாக இருந்தவர். நாடு சுதந்திரம் பெற்ற போது 5 பார்மசி கல்லூரிகள் மட்டுமே இருந்தன. இன்று 650 கல்லூரிகள் ஆல் இந்தியா கவுன்சில் பார் டெக்னிக்கல் எஜுகேசன் அங்கீகாரம் பெற்ற பி.பார்ம்., பட்டப்படிப்புகளை வழங்கி வருகின்றன. கேரளாவில் மட்டும் 2007ம் ஆண்டு 27 கல்லூரிகள் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்றுள்ளன. மேலும் 20 டிப்ளமோ பார்மசி கல்லூரிகளும் கேரளாவில் இயங்கி வருகின்றன. பிளஸ் 2க்கு பின் பி.பார்ம்., படிப்பு மொத்தம் 4 ஆண்டுகள் பயில வேண்டும். முதலாண்டில் மாணவர்களுக்கு பொது அறிவியலும், வேதியியல், கணிதம், பயோஸ்டேட்டிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ், அனாடமி அண்டு பிசியாலஜி போன்ற படிப்புகளும் கற்றுத்தரப்படுகின்றன. அடுத்து வரும் ஆண்டுகளில் பயோகெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பாதோபிசியாலஜி போன்ற படிப்புகள் கற்றுத்தரப்படுகின்றன. இப்படிப்பு பார்மசூட்டிக்ஸ், பார்மகாக்னசி, பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி, பார்மகாலஜி போன்ற முக்கியப் பாடப்பிரிவுகளை உள்ளடக்கியது. பார்மசூட்டிக்ஸ் என்பது மருந்து மற்றும் காஸ்மெடிக் பொருட்கள் தயாரித்தலை பற்றிய படிப்பு. பார்மகாக்னசி என்பது இயற்கை வளங்களில் உள்ள மருந்துகளைப் பற்றியது. பார்மசூட்டிக்கல் கெமிஸ்ட்ரி என்பது வேதியியல் மற்றும் மருந்துகளின் தரக்கட்டுப்பாடு பற்றிய படிப்பு. பார்மகாலஜி என்பது மனித உடலில் மருந்துகள் செயல்படும் விதங்களைப் பற்றியது.