உள்ளூர் செய்திகள்

சமஸ்கிருதம் படிக்கலாமே!

சமஸ்கிருத கல்விக்கு மிகவும் பெயர் பெற்ற உலகப்புகழ் வாய்ந்த கல்லூரி சென்னை, மயிலாப்பூரிலுள்ள சமஸ்கிருத கல்லூரி. 1906ல் முன்னாள் நீதிபதி வி.கிருஷ்ணசாமி அய்யரால் துவங்கப்பட்டு தற்போது நூற்றாண்டு விழாவை தாண்டியுள்ளது. இங்கு பல உலகப் புகழ்பெற்ற சமஸ்கிருத பண்டிதர்கள் படித்து பட்டம் பெற்று இந்தியாவின் பல பகுதிகளிலும் மற்றும் வெளிநாடுகளிலும் பல உயர்ந்த பதவிகளை வகித்திருக்கிறார்கள். இங்கு பணிபுரிந்த பேராசிரியர்கள் மற்றும் முதல்வர்களில் பெரும்பாலானோர் ஜனாதிபதி விருதை பெற்றுள்ளார்கள். சமஸ்கிருதம் மற்றும் சாஸ்திரங்களின் ஆலயமாகவும் இந்தியாவிலே குறிப்பாக தென் மாநிலங்களில் முதன்மையானதாக போற்றப்படுகிறது. இக்கல்லூரி சென்னைப் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரம் பெற்றுள்ளது. இக்கல்லூரியில் சமஸ்கிருத சிரோமணி (முழுநேரம்) ‘சர்டிபிகேட்’ மற்றும் ‘டிப்ளமோ’ (பகுதிநேரம்) ஆகிய பாடத்திட்டங்கள் நடைபெறுகின்றன. ‘ப்ராக் சிரோமணி’ இரண்டாண்டுகள் முடிந்த பிறகு மாணவர்களின் விருப்பதிற்கேற்ப இலக்கணம், வேதாந்தம் முதலிய துறைகளில் சேர்ந்து பயிலலாம். இக்கல்லூரியில் மீமாம்சா, வேதாந்தம், வ்யாகரணம், ந்யாயம், சாஹித்யம், ஜோதிஷம் ஆகிய ஆறு சாஸ்திரங்கள் பயிற்றுவிக்கப்படுகின்றன. சமஸ்கிருத சிரோமணி மத்யமா இளநிலை (பி.ஏ.,) மூன்றாண்டுகள் பயின்ற பிறகு சமஸ்கிருத சிரோமணி முதுகலை (எம்.ஏ.,) பட்டப்படிப்பும் இங்கு உள்ளது. சமஸ்கிருத மொழியுடன் ஆங்கிலம், இந்தி மற்றும் கணினி விஞ்ஞானம் (கம்ப்யூட்டர் சயின்ஸ்) கட்டாய பாடமாக பயிற்றுவிக்கப்படுகின்றது. இந்த பாடத்திட்டத்தை கல்லூரியில் பயின்ற பிறகு சமஸ்கிருத துறையோடு பிற துறைகளிலும் வேலைவாய்ப்பு பெற வகை செய்கின்றது. மகாத்மா காந்தி, நோபல் பரிசு பெற்ற தாகூர், சத்திய மூர்த்தி முதலிய தேசிய பெருந்தலைவர்களாலும் உலகப் புகழ்பெற்ற அறிஞர்களாலும் சமஸ்கிருத மொழியின் சேவைக்காக பெரிதும் போற்றப்பட்டதாக சென்னை சமஸ்கிருத கல்லூரி விளங்குகிறது. இக்கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு ப்ராக் சிரோமணியிலிருந்து முதுகலை பட்டம் வரை சிரோமணி (எம்.ஏ.,) வரையிலுள்ள அனைத்து கல்வி உதவிகளையும் இக்கல்லூரியே முற்றிலும் இலவசமாக வழங்குகின்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !