உள்ளூர் செய்திகள்

மழைநீர் சேகரிக்க கற்றுத்தரும் படிப்பு

குடிநீர் பற்றாக்குறை என்பது உலகளாவிய அளவில் மிகப்பெரிய சமூகப்பிரச்னையாக உள்ளது. பல்வேறு நாடுகளில் குறைந்தபட்சம் மூன்று முறை சுத்திகரிக்கப்பட்ட நீரை மட்டுமே குடிநீராக பயன்படுத்த முடிகிறது. இன்னும் சில நாடுகளில் பயன்படுத்தும் நீருக்கான தேவையே அதிகரித்து வருகிறது. எனவே தற்போது மழைநீர் சேகரிப்பு மட்டுமே தண்ணீர் தொடர்பான அனைத்துப்பிரச்னைகளையும் தீர்க்கக்கூடியதாக உள்ளது. டில்லியில் உள்ள அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் மழைநீர் சேகரிப்பு தொடர்பான ஐந்து நாள் சான்றிதழ் படிப்பை வழங்குகிறது.இதில் கற்பித்தல், செயல்முறை வகுப்புகள் நடத்தப்படுகின்றன. சிவில் இன்ஜினியர்கள், கட்டடக்கலை வல்லுனர்கள், அர்பன் பிளானர், சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள், நகராட்சி  மேலாளர், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு இப்படிப்பு கற்றுத்தரப்படுகிறது. இதில் அளிக்கப்படும் கற்பித்தல், கள ஆய்வு, செயல்முறை பயிற்சிகளினால் மாணவர்கள் திட்டமிடல், வடிவமைத்தல், மழைநீர் சேகரிப்பு திட்டங்களை நிறைவேற்றும் முறைகளை அறிந்து கொள்கின்றனர். இத்துறையில் சிறந்து விளங்கும் நிபுணர்களை சந்திக்கும் வாய்ப்புகளையும், அவர்களது கருத்துக்களை அறிந்து கொள்ளும் வாய்ப்புகளையும் இப்படிப்பு மாணவர்களுக்கு அளிக்கிறது. இதற்கான கட்டணம் ரூ.8 ஆயிரத்து 800. நடைமுறை வாழ்வில் உள்ள தண்ணீர் பிரச்னைகளை தீர்க்கும் வழிமுறைகளை இப்படிப்பு வழங்குகிறது. குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டடங்களில் சிறிய அளவிலும், பூங்காக்கள், மேம்பாலங்கள், சாலைகள், நகர்ப்புறகாடுகள் மற்றும் பொதுஇடங்கள் ஆகியவற்றில் பெரிய அளவிலும் மழைநீரை சேகரிக்கும் தொழில்நுட்பத்தை இப்படிப்பு மாணவர்களுக்கு அளிக்கிறது. இதுகுறித்த சமீபத்திய அரசின் கொள்கைகள், சட்ட நடைமுறைகள், நிதிஉதவி போன்ற விவரங்களையும் மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். விரிவுரையோடு மட்டுமல்லாமல் களப்பணி, விளக்கப்படங்கள், செயல்முறைப்பயிற்சி ஆகியவையும் கலந்து வழங்கப்படுவதால் நகர்ப்புற மழைநீர்சேகரிப்பு திட்டமிடலும், வடிவமைத்தலும் எளிதாகிறது. இதில் கோட்பாடுகள், கட்டுமானப்பொருட்கள், திட்டமிடல், வடிவமைத்தல், கட்டுமானநுட்பங்கள்,  திட்டசெலவு, பராமரித்தல் போன்றவற்றை உள்ளடக்கியது. இப்படிப்பை முடித்த மாணவர்கள் மழைநீர் சேகரிப்பை தொழிலாக எடுத்துக்கொண்டு அதற்கான திட்டங்களை நிறைவேற்றுதல், வடிவமைத்தல் போன்ற ஆலோசனை மையங்களையும் தொடங்கலாம். இந்த ஐந்துநாள் சான்றிதழ் படிப்பை முடித்தவுடன் உடனடியாக வேலை கிடைக்கும் என எதிர்பார்க்க முடியாது. ஆனால் இப்படிப்பை முடிப்பதால் மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல், பணம் சம்பாதிப்பதற்குரிய பல்வேறு வாய்ப்புகளை பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !