போலீஸ்துறையில் சேர வேண்டுமா
பஞ்சாப் பல்கலைக்கழகம் போலீஸ் நிர்வாகப்படிப்பில் முதுகலைப் பட்டப்படிப்பினை அறிமுகப்படுத்தியுள்ளது. உலக அளவிலும், தேசிய அளவிலும் நடைபெறும் சமீபத்திய மாற்றங்களை கருத்திற்கொண்டு இதில் உள்ள பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், உலகளாவிய அளவில் கற்பித்தல் மற்றும் செயல்முறைப் பயிற்சியில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியை மாணவர்களுக்கு வழங்குவதே இப்பல்கலைக்கழகத்தின் குறிக்கோள் ஆகும். மக்களின் பார்வையில், இப்படிப்பை புரிந்துகொள்ளவும், எளிதில் அணுகவும் மாணவர்களை தயார்படுத்துவதே இப்படிப்பின் முக்கிய நோக்கம். இதில் நவீன தொழில்நுட்பங்கள், தகவல் தொழில்நுட்பத்திறன், கம்ப்யூட்டர் திறன் போன்றவை கற்றுத்தரப்படுகிறது. இதுதவிர பொது நிர்வாகம், போலீஸ் சைக்காலஜி, சோஷியாலஜி, ரிசர்ச் மெதாடாலஜி, சட்டம், குற்றவியல், தடய அறிவியல், போலீஸ் நடைமுறைகள் மற்றும் விசாரணை நுட்பங்கள் போன்ற பல்வேறு பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்படிப்பில் சிறந்து விளங்குபவர்கள் பல்வேறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள போலீஸ் துறைக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். இது தவிர எல்லை பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ், ஐ.டி.பி.பி., எனப்படும் இந்தோ-திபெத்திய எல்லை பாதுகாப்புப் படை, மத்திய தொழிற்சாலை பாதுகாப்புப் படைகளிலும் சேர்ந்து பணியாற்றலாம். போலீஸ் துறையில் பணியாற்றுபவர்கள் கூட இப்படிப்பை முடித்தவுடன் உயர்ந்த பதவிகளுக்கு செல்லலாம். வங்கிகள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்களுக்கு பாதுகாப்பு வழங்கும் தனியார் நிறுவனங்களிலும் பணிவாய்ப்புகள் பெறலாம். முதுகலைப்பட்டம் பெற்றவர்கள் அல்லது சமூக அறிவியல் துறையில் 45 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்கள் இப்படிப்பில் சேரலாம். ஏதாவது ஒரு பட்டப்படிப்பில் 50 சதவீதம் மதிப்பெண்கள் பெற்றவர்களும் இதில் சேர தகுதியானவர்கள். மேற்கண்ட தகுதிகளைப்பெற்ற காவல்துறை அல்லது துணை ராணுவப்படை வீரர்களும் இப்படிப்பில் சேரலாம். இதில் மொத்தம் 46 இடங்கள் மட்டுமே உள்ளன. இதற்கான கட்டணம் ஒரு செமஸ்டருக்கு ரூ. 10 ஆயிரமும், பல்கலைக்கழகத்தால் வழங்கப்படும் பிற கட்டணங்களும் உண்டு. பல்வேறு பல்கலை.,களில் தொலைதூர கல்வி முறையில் இப்படிப்பு கற்றுத்தரப்படுகிறது. போலீஸ் நிர்வாகப்படிப்பில் இரண்டாண்டு முதுகலைப் பட்டப்படிப்பை அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்குகிறது. ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் இப்படிப்பு கற்றுத்தரப்படுகிறது. இதற்கு ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். இதற்கான கட்டணம் வருடத்திற்கு ரூ.20 ஆயிரம்.