உள்ளூர் செய்திகள்

பைனான்சியல் இன்ஜினியரிங் அண்டு ரிஸ்க் மேனேஜ்மென்ட்

மாற்றங்கள் நிறைந்த உலகில், புதுமைகளை படைக்கும் நிபுணர்களுக்கு தேவை அதிகரித்துள்ளது. ஆகவே, அடிப்படைத் திறன்களை மட்டுமே பெற்றிருந்தால் போதாது. போட்டித்திறன்களையும் பெற்றிருக்க வேண்டும். நவி மும்பையில் செயல்படும் ‘தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் கேபிடல் மார்க்கெட்’ கல்வி நிறுவனம் பைனான்சியல் இன்ஜினியரிங் அண்டு ரிஸ்க் மேனேஜ்மென்ட் படிப்பில் 6 மாத சான்றிதழ் படிப்பை வழங்குகிறது. வங்கிகள், மியூச்சுவல் பண்ட், நிதி நிறுவனங்கள், முதலீட்டு வங்கிகள், ஈக்குவிட்டி ஆராய்ச்சி நிறுவனங்கள், இடைத்தரகு நிறுவனங்கள், பிற நிதி சேவை வழங்கும் நிறுவனங்களில் பணியாற்றுபவர்களுக்கு நிதி தொடர்பான தொழில்நுட்பங்கள், செயல்முறைகள், செய்முறைப்பயிற்சி போன்றவற்றைப் பற்றி இப்படிப்பில் கற்றுத்தரப்படுகிறது. குவான்டிடேட்டிவ் டெக்னிக்ஸ், ஈக்குவிட்டி வேல்யூசன் அண்டு பிரைசிங், டெரிவேட்டிவ்ஸ் வேல்யூசன் அண்டு பிரைசிங், போர்ட்போலியோ மேனேஜ் மென்ட், பிக்சட் இன்கம் செக்யூரிட்டீஸ் அனலைசிஸ், கிரடிட் ரிஸ்க் மாடலிங் அண்டு எகனாமெட்ரிக் பேக்கேஜ் போன்ற பாடத் திட்டங்கள் இப்படிப்பில் உள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள நிதி குறித்தான பிரச்னைகளை ஆராயவும், அவற்றை கையாளும் வழிமுறைகளையும் இதில் கற்றுத்தரப்படுகிறது. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்து, இது தொடர்பான துறையில் பணியாற்றிய அனுபவமுள்ளவர்கள் இப்படிப்பை தேர்ந்தெடுக்கலாம். இதுதவிர, ஐதராபாத்தில் அமைந்துள்ள ‘இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ரிஸ்க் மேனேஜ்மென்ட்’(ஐ.ஐ.ஆர்.எம்.,) இத்துறையில் ஒரு ஆண்டு முதுகலை டிப்ளமோ படிப்பை வழங்குகிறது. இன்ஜினியரிங் உட்பட ஏதேனும் இளங்கலைப் பட்டப்படிப்பை முடித்தவர்கள் இப்படிப்பை தேர்ந்தெடுக்கலாம். இதில் உள்ள பாடத் திட்டங்கள் லண்டனில் செயல்படும் சார்ட்டட் இன்சூரன்ஸ் இன்ஸ்டிடியூட்(சி.ஐ.ஐ.,)யை அடிப்படையாக கொண்டவை. இந்தியாவில் காப்பீடுகள் ஒழுங்கு முறை சம்மந்தமான 4 படிப்புகளும் இதில் உள்ளன. இப்படிப்பு ஆயுள் காப்பீடு, பொது காப்பீடு, ரிஸ்க் மேனேஜ்மென்ட் என மூன்று வகையாக  உள்ளது. இதில் தொழில்நுட்பத்திறன்களும், போட்டித்திறன்களும் கற்றுத்தரப்படுகிறது. இப்படிப்பை முடித்தவர்கள் இன்சூரன்ஸ் துறையில் உயர்பதவிகளுக்கு செல்லலாம். டெக்னிக்கல் மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவாக பணியாற்றலாம். மார்க்கெட்டிங் துறைகளிலும் இப்படிப்பை முடித்தவர்கள் பணியாற்றலாம். இதற்கான கட்டணம் ஐ.ஐ.சி.எம்., ல் ரூ.55 ஆயிரம்.  ஐ.ஐ.ஆர்.எம்.,ல் 1 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் ஆகும். இப்படிப்பை முடித்தவர்கள் தொடக்கநிலையில் 5.5 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !