உள்ளூர் செய்திகள்

நர்சிங் - துறை அறிமுகம்

சமூகத்தில் உள்ள தனிநபர், குடும்பம், குழுமம், சமூகம் போன்ற பிரிவினரில் நோயுற்றவரை நோயுற்ற போதும் நோயுற்றுவிடாதிருக்கும் பொருட்டும் அக்கறையுடன் கவனித்துக் கொள்ளும் துறை தான் நர்சிங் என்பதை அறிவோம். ஆரோக்கிய மேம்பாடு, நோய்த்தடுப்பு, ஊனமுற்றோர், நலிவுற்றவரை கவனித்துக் கொள்ளுதல் போன்ற முக்கியமான பணிகளை மேற்கொள்பவர்கள் நர்சுகள் தான். நோயாளிகளின் சிகிச்சையில் நர்சுகளின் பணி தலையாயமானதாகும். உதாரணமாக எந்த ஒரு மருத்துவமனையிலும் பொது வார்டில் துவங்கி  அறுவை சிகிச்சை மையம் வரை எங்கும் இவர்கள் டாக்டர்களுக்கு இணையான முக்கியப் பணியாற்றுகின்றனர் என்றே கூறலாம். மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்காதவர் தான் நர்சிங் படிப்புக்குச் செல்கின்றனர் என்ற தவறான கருத்து முன்பெல்லாம் உண்டு. மருத்துவம் மற்றும் நர்சிங் இரண்டுமே ஒன்றுக்கொன்று தொடர்புடைய துறைகள் தான் என்றாலும் இவை இரண்டிலும் ஈடுபட வெவ்வேறுவிதமான திறமைகளும் மன நிலையும் தேவைப்படுகிறது. பொதுவாகவே மருத்துவருக்கும் நோயாளிக்குமான தொடர்பு குறைந்த நேரமே நீடிக்கிறது. ஆனால் நர்சுகள் தான் நோயளிகளுடன் நல்ல உறவை ஏற்படுத்தி அவர்களுடன் அதிக நேரத்தைச் செலவழிக்கின்றனர். இந்தியாவில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் முறையாகப் பயிற்சி பெற்ற நர்சுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. பணி வாய்ப்புகளும் இவர்களுக்கு மிக நன்றாக உள்ளன. நர்சுகளுக்கான தேவையை நிறைவேற்றும் விதத்தில் இந்தியாவில் நர்சிங் பள்ளிகளும் கல்லூரிகளும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. தனிநபரிடமும் நர்சிங் குறித்த மதிப்பீடு மாறிவருவதால் தற்போது அதிக எண்ணிக்கையில் நர்சிங் படிப்புகளை இன்றைய இளைஞர்கள் மேற்கொண்டு வருகின்றனர். படிப்புகளும் தகுதிகளும்: நர்சிங் படிப்புகள் டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு என்று பல நிலைகளில் தரப்படுகிறது. பி.எஸ்சி., படிப்பாக நர்சிங் படிக்க பிளஸ் 2ல் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களைப் படித்திருக்க வேண்டும். இதே போல ஜி.என்.எம்., எனப்படும் ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வைப்ரி படிப்புக்கும் இதே தகுதியே தேவைப்படுகிறது. ஆசிரியப் பணியைத் தொடர விரும்புபவர்கள் எம்.எஸ்சி., நர்சிங் மேற்படிப்பைத் தொடரலாம். நர்சிங் தொடர்பான பிற படிப்புகள் இவை தான். பி.எஸ்சி., நர்சிங்: இது நர்சிங் தொடர்பான அடிப்படைப் படிப்பாகும். இதில் நர்சிங், முதல் உதவி, மிட் ஒய்ப்ரி குறித்த அடிப்படைத் தொழில் நுணுக்கங்கள் கற்றுத் தரப்படுகின்றன. தியரிடிகல் மற்றும் பிராக்டிகல் பயிற்சிகள் இதில் கற்றுத் தரப்படுகின்றன. ஜி.என்.எம்.: ஜெனரல் நர்சிங் அண்ட் மிட் ஒய்ப்ரி என்னும் இந்தப் படிப்பில் மருத்துவமனைகளில் பணியாற்றும் முதல் நிலை நர்சுகளைஉருவாக்கிடும் விதத்தில் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஏ.என்.எம். எச்.டபிள்யூ.,: கிராமப்புறங்களில் வசிக்கும் குழந்தைகள், தாய்மார் மற்றும் தனிநபர்களுக்கு சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பான அம்சங்களை எப்படிப் பயிற்றுவிப்பது என்ற அடிப்படையில் ஆக்சிலரி நர்ஸ் மிட்ஒய்ப் அண்ட் ஹெல்த் ஒர்க்கர்ஸ் படிப்பு நடத்தப்படுகிறது. டிப்ளமோ இன் நர்சிங்: 10ம் வகுப்புக்கு இணையான படிப்பு முடித்தவர்கள் இதைப் படிக்கலாம். பொதுவாக ஒரு ஆண்டு அல்லது 2 ஆண்டு படிக்கக் கூடிய படிப்பாக இது உள்ளது. பணி வாய்ப்புகள்: திறன், தகுதி மற்றும் பயிற்சி பெற்ற நர்சுகளுக்கான தேவை உலகெங்கும் உள்ளது. இந்திய அரசும் தற்போது ஆரோக்கிய சேவைக்கான வலையமைப்பை உருவாக்கிடும் முயற்சிகளில் முனைப்பு காட்டுவதால் இத் துறையினருக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்கும் என கணிக்கப்படுகிறது. அதிலும் குறிப்பாக தற்போது கார்ப்பரேட் நிறுவனங்கள் இத்துறையில் இணைந்திட ஈடுபாடு காட்டுகின்றன. இதனால் இத்துறையில் இணைபவர்களுக்கு மிக நல்ல எதிர்காலம் உருவாகும் வாய்ப்புகள் உள்ளன. தற்போது இந்தியாவில் நோயாளிகளுக்கும் நர்சுகளுக்குமான விகிதம் மிகக் குறைவாகவே உள்ளது. இதைச் சரி செய்ய வேண்டுமானால் அடுத்த சில ஆண்டுகளில் 6 லட்சத்திற்கும் அதிகமான நர்சுகள் தேவைப்படுவர் என கணிக்கப்படுகிறது. தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகள், நர்சிங் ஹோம்கள், சானடோரியங்கள், கிளினிக்குகள், குழந்தைகள் காப்பகங்கள், பள்ளிகள், கல்லூரிகள், சுகாதாரம் தொடர்புடைய அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்கள், என்.ஜி.ஒ., நிறுவனங்கள் என எண்ணற்ற வாய்ப்புகளைத் தரும்நிறுவனங்கள் நர்சுகளுக்காகக் காத்திருக்கின்றன. நர்சிங் துறையில் சிறப்பான ஊதியம் தரப்படுகிறது. அனுபவத்தையும் திறமையையும் பொறுத்து சிறப்பான சம்பளத்தை ஒருவர் பெற முடிகிறது. நர்சிங் பள்ளிகளிலும் நர்சிங் கல்லூரிகளிலும் படிப்பவருக்கு சிறப்பான ஊதியம் கிடைப்பதைக் காணமுடிகிறது. நர்சிங் முடிப்பவர்களுக்கு வெளிநாடுகளிலும் நல்ல பணி வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடுகளில் பணி புரிய விரும்புபவர் பி.எஸ்சி., அல்லது எம்.எஸ்சி., படித்திருக்க வேண்டும். குறிப்பாக பிரிட்டன், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நர்சிங் படித்தவருக்கு எப்போதுமே தேவை இருக்கிறது. நர்சிங் படிப்புகளை தமிழ்நாட்டில் பல கல்லூரிகளில் படிக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்