உள்ளூர் செய்திகள்

தூங்கினால் ஜெயிக்கலாம்...

ஏன் நாம் நன்றாக தூங்க வேண்டும்? நம்முடைய எண்ணங்களையும், மனதையும், புத்துணர்வு அடையச் செய்வதற்கும், நம் உடலின் சோர்வுகளை போக்குவதற்கும், மூளையின் செயல்பாட்டை அதிகப்படுத்துவதற்கும் நன்றாக தூங்க வேண்டும். நாம் தூங்கும் போது நம்முடைய மூளையும் தூங்குகிறதா? இல்லை. நாம் தூங்கினாலும் நம்முடைய மூளை செயல்பட்டுக் கொண்டு தான் இருக்கிறது. அப்போது மற்ற நேரங்களை விட மூளையின் செயல்பாடு ஆற்றலுடன் அதிகமாக இருக்கும். நாம் வேலை செய்யும் போதும், நடக்கும் போதும் நம்முடைய மூளை அடுத்த செயல்களுக்கான உந்து விசையை அளித்துக் கொண்டே இருக்கிறது. ஆனால் நாம் எந்த வேலையும் செய்யாமல் உறங்கும் போது நம்முடைய மூளையின் வேலைப்பளு குறைந்து புத்துணர்வு பெறும். ‘முன்தூங்கி முன்எழுவர் திடமாகவும், அறிவாகவும், உறுதியாகவும் விளங்குவர்’ என்னும் பழமொழியில் உண்மைகள் அடங்கியுள்ளன. நாம் முதல் பாதியில் தூங்கும் தூக்கம் மிகவும் பலன் அளிக்க கூடியது. எனவே இரவில் காலம் கடத்தாமல் படுக்கைக்கு சென்று நம்முடைய பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும். தீர்வு காண்பதன் மூலம் நாம் விவேகமாகவும், அறிவுக்கூர்மையுடனும் செயல்படலாம். அவ்வாறு செயல்படுவதன் மூலம் நம்முடைய இலக்கை அடைந்து ஜெயிக்கலாம். படுக்கைக்கு செல்வதற்கு முன்னால், உங்களுடைய பிரச்னைகளை சிந்தியுங்கள். அவற்றை சிந்திக்கும் போது தேவையில்லாத கோபமோ, பயமோ கொள்ள வேண்டாம். பின், இதற்கான தீர்வை உங்கள் மனதிடம் கேட்டு விட்டு தூங்குங்கள். இதை பக்குவமாக கையாண்டால் உங்கள் மனம் பிரச்னைக்கான தீர்வை காணும். தெளிவான மற்றும் குழப்பமற்ற தூக்கம் உங்கள் நினைவுத்திறனை அதிகப்படுத்தும் என ஆராய்ச்சியாளர்கள் பலர் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் நீங்கள் படிக்கும் பாடங்களை நினைவில் வைத்துக் கொள்ளலாம். உங்கள் பாடங்கள் அனைத்தையும் தினமும் மாலை தொடர்ச்சியாக இரண்டு மணிநேரம் ஆழ்ந்து படிக்க வேண்டும். பின் விரைவாக படுக்கைக்கு சென்று உறங்க வேண்டும். இவ்வாறு செய்வதால் நீங்கள் படித்த பாடங்கள் எண்ணத்தில் நன்கு பதியும். இதனால் ஞாபகமின்மை குறையும். கற்பவை அனைத்தும் எண்ணத்தில் இருக்கும். எனவே, உரிய நேரத்தில் தூங்குவதன் மூலம் நம்முடைய எண்ணங்கள், சிந்தனைகளை துரிதப்படுத்தி, உடல் நலத்தை காத்து, மன அழுத்தத்தை நீக்கி வாழ்வில் ஜெயிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !