ஈவென்ட் மேனேஜ்மென்ட்
இன்றைய உலகில் எதையுமே விளம்பரப்படுத்துவது மற்றும் காட்சிப்படுத்துவது என்பது ஒரு சாதாரண விஷயமாகிவிட்டது. அதை ஒரு வீண் செலவு என்று யாரும் இப்போது சொல்வதில்லை. இதற்காக பல பொது நிகழ்ச்சிகள் மற்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத்து நடத்துவது ஒரு பெரிய கலை. அதைப்பற்றி படிப்பதுதான் "ஈவென்ட் மேனேஜ்மென்ட்". இத்துறை இன்று மிகவும் பிரபலமாகி வருகிறது. உங்களுக்கு நிறைய படைப்பாற்றல் இருந்தால் போதும். அதன்மூலம் நீங்கள் இத்துறையில் நிறைய சாதிக்கலாம். இது உங்களுக்கு ஏற்ற ஒரு துறை. ஈவன்ட் மேனேஜ்மென்ட் என்பது, ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு, அதற்கு செயல்வடிவம் கொடுத்து பின்னர் நடைமுறைப் படுத்துவதாகும். இந்த ஈவென்ட் மேனேஜ்மென்ட் -ஐ 2 பிரிவுகளாக பிரிக்கலாம். தனிப்பட்டவை மற்றும் நிறுவன ரீதியானவை. பிறந்தநாள் நிகழ்ச்சிகள், நிச்சயதார்த்த நிகழ்ச்சிகள், மணிவிழா உள்ளிட்ட பல தனிநபர் சார்ந்த விழாக்கள் தற்போது ஈவென்ட் மேலாளரால் நடத்தப்படுகின்றன. அதேசமயம், ஒரு நிறுவனத்தின் புதிய தயாரிப்பை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியிலும், நிறுவன மாநாட்டை நடத்துவதிலும் ஈவென்ட் நிபுணர்களின் உதவித் தேவை. இந்த தொழிலுக்கு நிறைய படைப்புத் திறன் மற்றும் கடின உழைப்பு தேவை. நாம் செய்த பணியானது, நம்மையும், பிறரையும் இறுதியாக திருப்திப்படுத்துவதாக இருக்க வேண்டும். அந்த விதத்தில் உங்களின் உழைப்பு இருக்க வேண்டும். இன்றைக்கு, வணிக ரீதியாக நடத்தப்படும் ஏராளமான தொலைகாட்சி நிகழ்ச்சிகளுக்கு ஈவென்ட் மேலாண்மை தேவை. இன்றைய பார்வையாளர்கள், ஒரே ஒரு நிகழ்ச்சியிலோ அல்லது சேனலிலோ ஆழ்ந்து கிடப்பதை விரும்புவதில்லை. எனவே அவர்களை ஈர்த்து, மக்களை வசியப்படுத்தும் திறன் ஈவென்ட் மேலாளர்களையே சார்ந்துள்ளது. இதன்மூலம் இந்த படிப்பு, மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது. தகுதிகள்: ஒரு சிறந்த ஈவென்ட் மேலாளர் ஆவதற்கு, சான்றிதழ் தகுதி என்பது முக்கியமல்ல. நிகழ்ச்சிகளை நடத்துவதற்கான பேரார்வம், சிறப்பான ஒருங்கிணைக்கும் திறன், அதிகநேரம் பணிபுரியக்கூடிய உடல்வலிமை மற்றும் மனவலிமையை கொண்டவர்கள் இத்தொழிலில் சிறந்து விளங்கலாம். அதேசமயம், ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தில் ஈவென்ட் மேலாளர் ஆவதற்கு, எம்.பி.ஏ. பட்டத்துடன், பொதுமக்கள் தொடர்பு திறனையும் கொண்டிருக்க வேண்டும். ஒரு ஈவென்ட் நடத்துவதில், மக்களை சந்திப்பது, பொருத்தமான இடத்தை தேர்வுசெய்வது, உணவு ஏற்பாடு செய்வது, பூக்கள் அலங்காரம் செய்வது போன்ற பல பணிகள் இருக்கின்றன. மேலும், ஒளி-ஒலி ஏற்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும். நிகழ்ச்சி நடக்கும் இடமானது பார்ப்பதற்கே மகிழ்வை தரக்கூடியதாக இருக்க வேண்டும். அதேசமயம், நிகழ்ச்சி நடக்கும்போது ஏற்படும் இயற்கை பேரிடர் மற்றும் பிற எதிர்பாராத சம்பவங்களையும் சமாளிக்கும் விதமாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும் அதுகுறித்து எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். பணியின் தன்மை: ஒரு நிகழ்ச்சியை திட்டமிட்டு, அதை மனதிற்குள் வடிவமைத்தல், அதற்கான தேவைகளை ஆராய்தல், அந்நிகழ்ச்சியை நடத்துபவர்களின் நோக்கத்தை அறிந்து கொள்ளுதல், வரவு-செலவு கணக்கு தயாரித்தல், திட்டமிடுதல், ஏற்பாடு செய்தல், செயல்படுத்துதல், பிற விளம்பரதாரர் நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து செயல்படுதல், நிகழ்ச்சியை நடத்துவதற்கு தேவைப்படும் அரசு அதிகாரிகளின் அனுமதியைப் பெறுதல், மேடை அமைப்பை திட்டமிட்டு காட்சிப்படுத்தல், நிகழ்ச்சியை விளம்பரப்படுத்துவதற்கான மீடியா தொடர்புகளை மேற்கொள்ளுதல் போன்ற பல பணிகள் இத்துறை சார்ந்தவை. பேஷன் ஷோ, இசை நிகழ்ச்சி, வர்த்தக நிறுவன கருத்தரங்கம், கண்காட்சிகள், திருமண நிகழ்ச்சிகள், பார்ட்டிகள், திறன் வெளிகாட்டும் நிகழ்ச்சிகள் போன்றவை அடிக்கடி நடக்கும் நிகழ்ச்சிகளில் குறிப்பிடத்தக்கவை. வேலைவாய்ப்புகள்: ஆரம்பத்தில் சிறிய நிறுவனங்களிலேயே வேலை கிடைக்கும். இதில் கிடைக்கும் அனுபவத்தை வைத்து பெரிய நிறுவனங்களுக்கு செல்லலாம். மேலும், எதிலும் ஊழியராக சேராமல், ப்ரீ லேன்சராக பணிபுரியும் வாய்ப்பும் உண்டு. ஒரு நிறுவனத்தை நாம் இதன்பொருட்டு அணுகினால் அவர்கள் உங்களின் பெயரை குறித்துக் கொள்வார்கள். அவர்களுக்கு தேவையானபோது உங்களை அழைப்பார்கள். அந்தந்த நிறுவனத்தைப் பொருத்தும், நிகழ்ச்சியின் தன்மையைப் பொருத்தும் உங்களுக்கான வருமானம் நிர்ணயிக்கப்படும். மேலும் நீங்கள், promotion coordinator -ஆகவும் உங்கள் பணியை துவக்கலாம். இதற்கு, நிகழ்சிகளை நடத்துவது பற்றி சிறந்த அறிவையும், திறனையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் உங்களிடம் சிறிது முதலீடும் இருக்க வேண்டும். பல பெரிய நிறுவனங்கள், தங்களில் ஒரு பணியாளராக ஈவென்ட் மேலாளர்களை வைத்துள்ளன. அதேசமயம், நீங்கள் ஒருங்கிணைத்து கண்காணிப்பதில் சரியாக செயல்படவில்லை என்றால், நஷ்டம் உங்களுக்குத்தான். எனவே நெட்வொர்கிங் மிக சிறப்பாக இருந்தால்தான் வெற்றிபெற முடியும். சம்பளம்: நடக்கும் நிகழ்ச்சியைப் பொருத்தும், ஒரு நிகழ்ச்சி வணிகரீதியாக வெற்றி பெறுவதைப் பொறுத்துமே உங்களின் வருமானம் அடங்கியுள்ளது. பொதுவாகவே இதில் வருமானம் அதிகம். பொதுமக்கள் தொடர்பு மற்றும் விளம்பரத்துறை ஆகியவற்றில் படிப்பை மேற்கொள்வது, உங்களுக்கு ஈவென்ட் மேலாண்மையில் உதவும். மேலும், சந்தைப்படுத்தலை(மார்கெடிங்) பற்றி எம்.பி.ஏ. படிப்பதானது மிகவும் சிறந்தது. முக்கிய கல்வி நிறுவனங்கள்: Amity Institute of Event Management - Delhi College of Event and Management - Pune Event management developement institute - Bandra, Maharashtra National Institute of Event Management - Mumbai National Institute of Fashion and Events - Japalpur போன்றவை இப்படிப்பை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.