சாகசத்தையும், வருமானத்தையும் விரும்புவோருக்கு ஏற்ற மெர்ச்சன்ட் நேவி
உலகின் பல நாடுகளுக்கு சரக்குகளை கொண்டு செல்லும் வியாபார கப்பல் "மெர்ச்சன்ட் நேவி" என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய கப்பல்களில் பயணம் செய்பவர்கள், மாதக்கணக்கில் தங்களின் வீட்டையும், குடும்பத்தையும் பிரிந்து இருக்க வேண்டும். உலகத்தை எப்போதும் சுற்றிக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை உள்ளவர்களும், குடும்பத்தை நீண்டகாலம் பிரிந்திருக்கும் மனப் பக்குவம் உள்ளவர்களும் மட்டுமே இந்த வேளையில் இருக்க முடியும். போதுமான நுண்ணறிவு, தகுதிகள் மற்றும் நல்லொழுக்கம் ஆகியவை இந்த தொழிலுக்கான அடிப்படை தகுதிகள். இந்த பணியில் மிக நல்ல சம்பளம் உண்டு. சம்பளத்துடன், பலதரப்பட்ட நாடுகளின் உணவு, பொழுதுபோக்கு, விளையாட்டு மற்றும் பலவிதமான சந்தோஷங்களும் உண்டு. அதேசமயம், மாதக்கணக்கில் கடல் பயணம் செய்வதற்கான உடல் திறமும், மனோதிடமும் இருக்க வேண்டும். இப்பணிக்கு தேவைப்படும் தகுதிகள்: இப்பணியில் இருக்கும் ஒருவருக்கு பல சிறப்பு தகுதிகள் தேவைப்படுகின்றன. கடல் காய்ச்சலுக்கு(கடல் பிரயாண நோய்) ஆட்படாதவராக இருக்க வேண்டும். நல்ல மனோதிடம் உள்ளவராகவும், சிறந்த உடல் வலிமை உள்ளவராகவும் இருக்க வேண்டும். விளையாட்டு திறன் உள்ளவராகவும், சூழலுக்கு தக்கவாறு மாறக்கூடியவராகவும், பொறுப்புகளை விரும்பி ஏற்கக்கூடியவராகவும், சகிப்புத்தன்மை உடையவராகவும், பொறுமை கொண்டவராகவும், சாகசங்களையும், சவால்களையும் விரும்புபவராகவும், பணியின்போதே, மேல்நிலை தேர்வுகளுக்கு படிக்கும் தன்மை கொண்டவராகவும் இருக்க வேண்டும். நல்ல அறிவுடையவராகவும், உள்ளுணர்வு உடையவராகவும், குழுவாக பணிபுரியும் தன்மை கொண்டவராகவும், நெகிழ்வுத்தன்மை உடையவராகவும், தனக்கு நெருக்கமானவர்களை நெடுநாள் பிரிந்திருக்கும் பண்பு கொண்டவராகவும் இருத்தல் வேண்டும். மெர்ச்சன்ட் நேவி தொழில்: வணிக கப்பல்களில் பணிபுரிவதுதான் இது. இந்திய மெர்ச்சன்ட் நேவி எனப்படுவது, பயணிகள் கப்பல், கார்கோ, தொலைதூரக் கப்பல்கள், பெட்ரோலிய பொருட்களை ஏற்றிசெல்லும் கப்பல், உலோகங்களை ஏற்றி செல்லும் கப்பல்கள் மற்றும் பிற சிறப்புவகை கப்பல்கள். இத்தகைய கப்பல்கள் அரசு மற்றும் தனியார் கம்பெனிகளால் இயக்கப்படுகின்றன. பயிற்சிபெற்ற மாலுமிகள், கப்பல் பொறியாளர்கள் மற்றும் சிப்பந்திகளைக் கொண்டு இத்தகைய கப்பல்கள் இயக்கப்படுகின்றன. இந்திய மெர்ச்சன்ட் நேவி துறைக்கான அதிகாரிகளுக்கு பயிற்சியளிப்பது இந்திய அரசின் பொறுப்பாக உள்ளது. ஷிப்பிங் துறையில் இயக்குனரகத்தின் கட்டுப்பாட்டில் பல பயிற்சி நிறுவனங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. கப்பலில் உள்ள துறைகள்: மெர்ச்சன்ட் நேவி அமைப்பில் மிகவும் முக்கிய துறை, கப்பல் தள துறையாகும். இதன் தலைவர் கப்பல் கேப்டன் ஆவார். இவரே அந்த கப்பலின் ஒட்டுமொத்த தலைவர். கேப்டனுக்கு அடுத்து இரண்டாம் நிலையில் உள்ளவர் முதல்நிலை அலுவலர்(பர்ஸ்ட் மேட்). இவருக்கு அடுத்து இரண்டாம் நிலை அலுவலர்(செகண்ட் மேட்) ஒருவர் உள்ளார். இவரின் பணி என்னவெனில், முதல் 2 நிலைகளில் உள்ள மேலதிகாரிகளுக்கு பணி தொடர்பாக உதவி புரிவதாகும். அடுத்ததாக, மூன்றாம் நிலை அலுவலர்(தேர்ட் மேட்) ஒருவர் இருக்கிறார். அவருக்கு அடுத்த நிலைகளில் ஹார்பர் மாஸ்டர், பைலட் ஆப் தி ஷிப் அண்ட் செராங் ஆகியோர் உள்ளனர். என்ஜின் துறைக்கு ஷிப் இன்ஜினீயர் தலைமை வகிக்கிறார். இவருக்கு உதவியாக 2,3,4,5 ஆகிய நிலைகளிலுள்ள பொறியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் உள்ளனர். இந்த துறையானது, எலெக்ட்ரிகல் அதிகாரி மற்றும் ரேடியோ அதிகாரி ஆகியோரையும் கொண்டுள்ளது. மேலும் இதில், கப்பலை செலுத்துபவரும் இருப்பார். என்ஜின் துறையிலுள்ள பொறியாளர்களின் ஒட்டுமொத்த பணி எதுவெனில், இயக்குவது, செலுத்துவது, கண்காணிப்பது, தடுப்பு மற்றும் நிறுத்தத்தை கண்காணிப்பதாகும். அடுத்ததாக வருவது சேவைத்துறை. இத்துறையில், தலைமை பணியாளர், தலைமை சமையல்காரர், சமையல்காரர்கள், சமையலறை பணியாளர்கள் போன்றோர் உள்ளனர். இறுதியாக, நாடிகல் சர்வேயர்ஸ், லைட் கீப்பர்ஸ், டிரெஸ் டைவர்ஸ் மற்றும் ஸ்கின் டைவர்ஸ் போன்றோர் இருப்பர். தளப் பணி என்பது கப்பலின் பொது நிர்வாகம் தொடர்புடையது. இதில், கப்பலை செலுத்துதல், சரக்கு ஏற்றல்-இறக்கலை மேற்பார்வை இடுதல், ஊழியர்களின் தேவைகளை கவனித்தல். மேலும், வெளிநாடுகளின் துறைமுக நடைமுறைகள், சுங்க விதிமுறை, கடற்பாதுகாப்பு விதிமுறை, குடியேற்றம் ஆகிய விஷயங்களை கவனிப்பதும் அவர்களின் பணி. மொத்தத்தில், ஒரு கப்பலே இவர்களின் பொறுப்புதான். கப்பல் அலுவலர் நியமனம்: ஒரு வணிக கப்பலில் நேவிகேடிங் அதிகாரியாக நியமிக்கப்பட வேண்டுமெனில், "திறன் சான்றிதழை" கட்டாயம் பெற வேண்டும். டி.எஸ். சாணக்கியாவிலிருந்து(கப்பலில் அமைந்த கல்வி மையம்), நேவிகேடிங் அதிகாரிக்கான, திறனுக்கான, முதல் சான்றிதழை பெற்றிருந்தால், அது "செகண்ட் மேட்" பணிக்கானது. பயிற்சி கப்பல் சாணக்கியாவில்(கப்பலில் அமைந்த கல்வி மையம்), நாடிகல் சயின்ஸ் பாடத்தில் 3 வருட பட்டப் படிப்பை முடித்த பிறகு, ஒரு கேடட் அதிகாரிக்கான திறன் சான்றிதழைப் பெற, செகண்ட் மேட் நிலைக்கு உயர்வதற்குள், டெக் பிரிவில் ஒரு வருடம் பணியாற்ற வேண்டும். இந்த காலத்தில் அவருக்கு, ஒரு சிறு தொகை உதவித்தொகையாக வழங்கப்படும். மும்பை பல்கலையில், நாடிகல் சயின்ஸ் பாடத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர், கடல்சார்ந்த பணிக்கு செல்ல தகுதி பெற்றவர். தகுதி சான்றிதழை பெறும் விஷயத்திலும் இவருக்கு விதிவிலக்கு உண்டு. மேரி -இல் பயிற்சி முடித்த ஒருவர், ஒரு மெர்ச்சன்ட் நேவி கப்பலில் ஜூனியர் இன்ஜினீயராக பணியாற்றலாம். கடல்சார் பொறியாளர்களுக்கான தேர்வு, ஷிப்பிங் இயக்குனரகத்தின் மூலமாக, தரைவழி போக்குவரத்து இயக்குனரகம் மூலமாக நடத்தப்படுகிறது. அதிகாரிகளின் செயல்பாடுகள் மற்றும் பொறுப்புகள்: பயிற்சி கப்பல் சாணக்கியாவிலிருந்து(கப்பலில் அமைந்த கல்வி மையம்) தகுதி பெற்று, நேவிகேடிங் அதிகாரிகளாக பணியில் சேருபவர்கள் பல முக்கிய பணிகளுக்கு பொறுப்பாகிறார்கள். கப்பலில் சரக்குகளை ஏற்றுதல்-இறக்குதல், கப்பலை பராமரித்தல், பயணிகள் மற்றும் சிப்பந்திகளின் பாதுகாப்பு, தேசிய மற்றும் சர்வதேச நடத்தை விதிமுறைகளை கடைபிடித்தல் மற்றும் கப்பல் பயணத்திற்கான ஏற்பாடுகளை கவனித்தல் போன்றவை. கடல்சார் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனத்திலிருந்து வந்து பணியாற்றும் ஒரு கடல்சார் பொறியாளர், கப்பலின் முக்கிய என்ஜின், துணை மெஷினரி கருவிகள் மற்றும் பாதுகாப்பு கருவிகளையும் இயக்கி, பராமரிக்கும் பொறுப்பை ஏற்கிறார். ஒரு கப்பலில் அதிகபட்ச பொறுப்புடைய மற்றும் தலைமை பணி "ஷிப் மாஸ்டர்" பணியாகும். அதேசமயம் பொறியாளர் பிரிவில், தலைமை பொறியாளர் பணியே தலையாய பணி. தேர்வு விதிமுறைகள்: இத்துறை தொடர்பான தேர்வுகளுக்கு வழிகாட்டுவதற்கு புத்தகங்கள் உள்ளன. அதில், "மெர்ச்சன்ட் நேவியில் பொறியாளர்கள்/மாஸ்டர்கள் மற்றும் மேட்ஸ் -களுக்கான தேர்வு" என்ற வெளியீடு சிறப்பானதாகும். இத்துறையில் பயிற்சி பெறுபவர்களுக்கான வேலைவாய்ப்பை பெற்று தருவதில் அரசாங்கம் எந்த பொறுப்பையும் ஏற்பதில்லை என்றாலும், டி.எஸ். சாணக்யா மற்றும் மேரி ஆகிய கல்வி நிறுவனங்கள், வேலை பெறுவதற்கு உதவுகின்றன. சம்பளம்: மெர்ச்சன்ட் நேவி தொழிலில் எப்போதுமே நல்ல சம்பளம் உண்டு. ஒரு நேவிகேடிங் அதிகாரி மற்றும் கடல்சார் பொறியாளர், இந்தியாவைப் பொறுத்தவரை மாதம் ரூ.60 ஆயிரம் பெறுகிறார். அதேசமயம் வெளிநாட்டில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் பெறுகிறார். இத்தொழிலில் பதவி உயர்வு என்பது தகுதி தேர்வுகளை எழுதுவதில் அடங்கியுள்ளது. மெர்ச்சன்ட் நேவி படிப்புகளுக்கான சில புகழ்பெற்ற கல்வி நிறுவனங்கள்: இந்தியன் மேரிடைம் பல்கலைக்கழகம் - சென்னை டி.எஸ். சாணக்யா - மும்பை மெரைன் இன்ஜினீயரிங் அண்ட் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் - மும்பை ஆர்.எல். இன்ஸ்டிடியூட் ஆப் நாடிகல் சயின்ஸ் - மதுரை லால் பகதூர் சாஸ்திரி காலேஜ் ஆப் அட்வான்ஸ்ட் மேரிடைம் ஸ்டடீஸ் அண்ட் ரிசர்ச் - மும்பை போன்றவை முக்கியமானவை. மற்றபடி இந்தியாவில் பல கல்வி நிறுவனங்கள் இந்த படிப்புகளுக்காக செயல்படுகின்றன.