உள்ளூர் செய்திகள்

சமூக சேவையில் விருப்பமா?

முன்பெல்லாம், கல்லூரி படிப்பில், ஆங்கில இலக்கியம் அல்லது கணிதம் போன்ற பட்டப்படிப்புகளை படித்தால்தான் மரியாதை. "சோசியல் வொர்க்" போன்ற படிப்புகளுக்கு மரியாதை இல்லை. வேறு வழியில்லாதவர்கள் படிக்கும் படிப்பாகவே அது கருதப்பட்டது. ஆனால் இன்று நிலைமை மாறிவிட்டது. அந்த படிப்பிற்கு அதிக மரியாதை கிடைத்துள்ளது. அந்த படிப்பை பற்றிய பல தவறான கருத்துக்கள் இன்று மறைந்துள்ளன. சோசியல் வொர்க் என்பது, சமூகத்தில் கீழ்மட்டத்தில் இருப்பவர்களுக்கு உதவி செய்தல் மற்றும் இன்ன பிற நல்ல செயல்களை செய்தல் என்பது மட்டுமல்ல. கடந்த பல வருட காலத்தில், சோசியல் வொர்க், ஒரு நல்ல தொழில்முறை பணியாக(profession) வளர்ந்துள்ளது. மேலும், இது ஒரு வழக்கமான சம்பிரதாய பணியும் அல்ல. இந்த பணியானது, சமூக மாற்றத்தை ஏற்படுத்தி, மனித உறவுகளில் உள்ள பிரச்சினைகளை தீர்த்து, அவர்களின் சுதந்திரத்தையும், மகிழ்ச்சியையும் அதிகப்படுத்துவதாகும். உடல் ஊனப் பிரச்சினை, போதை பழக்கம், வறுமை, மனநலக் கோளாறு உள்ளிட்ட பல சிக்கல்கள் இன்று சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றன. எனவே, சோசியல் வொர்க், இன்றைய சமூகத்தின் தவிர்க்க இயலாத அம்சமாக விளங்குகிறது. பணம் சம்பாதிப்பதே பிரதான நோக்கம் என்றில்லாமல், ஆத்மா திருப்திக்காக வேலைசெய்ய விரும்புபவர்கள், இந்த பணியை தேர்ந்தெடுக்க முழு தகுதியுடையவர்கள். இப்பணியின் வகைகள்: கிளீனிக்கள் சோசியல் வொர்க்: இது முற்றிலும் மருத்துவமனை சார்ந்த பணியாகும். நோயாளிகளின் தேவை அறிந்து அவர்களுக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் மருந்துகள் எடுப்பது தொடர்பாக உதவுதல் போன்றவை இவற்றில் அடங்கும். பள்ளி சோசியல் வொர்க்: போதை மருந்து பயன்பாட்டு பிரச்சினைகள், பாலியல் முறைகேட்டு பிரச்சினைகள் தொடர்பாக, பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடி, அவர்களுக்கு தேவையான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை வழங்குவது இந்த வகை. சைக்யாட்ரிக் சோசியல் வொர்க்: மன உளைச்சலுள்ள குழந்தைகள் மற்றும் விடலைப் பருவத்தினர் ஆகியோருக்கு உள்ள நடத்தை சிக்கல்களை ஆராய்ந்து, அதற்கேற்ப அவர்களுக்கு ஆலோசனை வழங்கும் பணி. குற்றவியல் மற்றும் திருத்துதல் சோசியல் வொர்க்: சிறை கைதிகளை சந்தித்து அவர்களுக்கு ஆலோசனை வழங்கி, அதன்மூலம் அவர்களை திருத்தி, சமூக விரோத நடவடிக்கைகளை குறைப்பது இவ்வகை பணியாகும். மெடிக்கல் சோசியல் வொர்க்: நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்களின் மன அழுத்தங்கள், தனிப்பட்ட பிரச்சினைகள் மற்றும் பொருளாதார சிக்கல்களை தீர்க்க உதவுவது இந்தப் பணி. சமூக அமைப்பு: வீட்டு வசதிகள், வேலையின்மை பிரச்சினைகள் மற்றும் உள்ளூர் சேவைகள் ஆகியவற்றை கவனிப்பது இந்த வகையை சேரும். ஆராய்ச்சி: சமூகம் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் நிறுவனங்களின் தீவிர செயல்பாட்டிற்கான வழிவகைகள் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்வதே இந்த வகை. தொழில்துறை சோசியல் வொர்க்: வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், தொழிலாளர் நலன்களை உறுதிசெய்வது இந்தப் பணியாகும். இத்தொழிலுக்கு தேவைப்படும் பண்புகள்: பொறுமை-பொறுமை-பொறுமை. இந்த ஒரு வார்த்தைதான் இத்தொழிலுக்கு தேவையான முழுமுதல் மாதும் தலையாய தகுதி. ஏனெனில், பலதரப்பட்ட பின்னணி உடைய, வயதுடைய மற்றும் குணாதிசயம் உடைய, சிக்கல்கள் உடைய மக்களை நீங்கள் சந்தித்து, அவர்களுடனேயே உங்களின் பணி காலம் முழுவதும் செலவிட வேண்டியிருக்கும். எனவே பொறுமைதான் உங்களின் ஒரே துணை. மக்களின் உளவியல் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு, அவற்றுக்கு தீர்வு காண்பதில் ஆர்வம் உள்ளவர்களே, இந்த தொழிலில் நீடிக்க முடியும். வேலை வாய்ப்புகள்: கிராமப்புற அவலம் மற்றும் வசதியின்மை, படிப்பறிவின்மை, மருத்துவ வசதிகளில் குறைபாடு மற்றும் மருந்துகளை துஷ்பிரயோகம் செய்தல் போன்ற அவலங்களை பற்றிய அதிகரித்து வரும் விழிப்புணர்வானது, சோசியல் வொர்க் துறையில் வேலைவாய்ப்பை அதிகரித்துள்ளது. அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள்(என்.ஜி.ஓ) வேலைவாய்ப்புகளை அளிக்கின்றன. மேலும், சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனங்களிலும் நிறைய வேலைவாய்ப்புகள் உள்ளன. தொழில் மற்றும் வணிக நிறுவனங்கள், சோசியல் வொர்க்கர்களை பணியமர்த்துகின்றன. அரசு பணி என்று எடுத்துக்கொண்டால், நல அதிகாரி பணிகளுக்கு, யு.பி.எஸ்.சி. மற்றும் மாநில பப்ளிக் சர்விஸ் கமிஷன் ஆகியவை போட்டித் தேர்வுகளை நடத்துகின்றன. அதேசமயம், அரசு சாரா அமைப்புகளில் ஏராளமான வேலைவாய்ப்புகள் குவிந்துள்ளன. சோசியல் வொர்க் படிப்பில் பட்டம் பெற்ற ஒருவர், முதலில் சோசியல் வொர்க்கராக பணியில் சேர்ந்து, பின்னர் பணி உயர்வு பெறலாம். ஒருவர் இத்துறையில் போதிய அனுபவம் பெற்றபிறகு, ஒருவர் சொந்தமாக கவுன்சிலிங் மையம் தொடங்கலாம். உலக சுகாதார நிறுவனம்(WHO) போன்ற சர்வதேச ஏஜென்சிகள், பல வேலைவாய்ப்புகளை வழங்குகின்றன. ஆனால் இவை பெரும்பாலும் ஒப்பந்த அடிப்படையிலானவை. பல கார்பரேட் நிறுவனங்கள், தங்களின் பணியாளர் நல திட்டங்களுக்கு பல சோசியல் வொர்க்கர்களை பணியமர்த்துகின்றன. இதனால் இத்துறைக்கு புதிதாக வருபவர்களுக்கு பணி திருப்தி கிடைப்பதோடு, நல்ல ஊதியமும் கிடைக்கிறது. சம்பளம்: நீங்கள் பணிக்கு சேரும் தொண்டு நிறுவனத்தைப் பொறுத்து, உங்களின் ஆரம்ப சம்பளம் ரூ.5 ஆயிரம் முதல் 8 வரை இருக்கும். அதேசமயம், சர்வதேச ஏஜென்சிகள் அதிக சம்பளம் தருகின்றன. வணிக மற்றும் தொழில் நிறுவனங்களில் ஆரம்ப சம்பளமாக ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வழங்கப்படுகிறது. படிப்புகள்: பலவித பல்கலைகள் மற்றும் கல்வி நிறுவனங்கள் விதவிதமான படிப்புகளை வழங்குகின்றன. * சோசியல் வொர்க் -ல் இளநிலை படிப்புகள். * முதுநிலை படிப்பு. * எம்.பில் மற்றும் பிஎச்.டி.(ஆராய்ச்சி சம்பந்தமான பாடம்) * தொடர்புடைய துறைகளுக்கான படிப்புகள். சோசியல் வொர்க் சார்ந்த படிப்புகளை வழங்கும் சில முக்கிய கல்வி நிறுவனங்கள்: Madras Universtiy, Loyola college of Chennai, Madurai Kamaraj university, Andhra university, Assam university, Bangalore university, Jamia Millia Islamia, Karnatak university, Nagpur university, Mangalore university, Osmania universtiy, Lucknow university, Pune university போன்றவை முக்கிய கல்வி நிறுவனங்களில் சிலவாகும்.        


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !