உள்ளூர் செய்திகள்

கவுன்சிலிங் செல்லும் மாணவர்களே...

தற்போது இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்லும் மாணவர்களுக்கு... நினைத்த கல்லூரி கிடைக்கவில்லையே... எதிர்பார்த்த பாடம் கிடைக்கவில்லையே என்ற ஏக்கம் இருக்கிறது. இந்த ஏக்கம் பலருக்கு கவலையாகக் கூட மாறிவிடுகிறதைப் பார்க்கிறோம். ஒரு குறிப்பிட்ட பிரிவில் எட்டு இடங்கள் ஏழு இடங்கள் இருந்தால்கூட மறுநாள் கவுன்சிலிங் ஹாலில் அதை பார்க்க முடிவதில்லை. ஏனெனில் தற்போது கவுன்சிலிங் செல்லும் மாணவர்களின் கட்-ஆப் மதிப்பெண்ணுக்கு இணையான மதிப்பெண் பெற்றவர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இந்த நெருக்கடி. இதுபோன்ற சமயத்தில் மாணவர்கள் மனம் தளரக்கூடாது. நமக்கு கிடைக்கக்கூடிய பாடத்தில் எது நல்லது? தற்போது கிடைக்கக்கூடிய கல்லூரிகளில் எது சிறந்தது என்பதை முடிவு செய்து எடுக்க வேண்டும். விரும்பிய கல்லூரி கிடைக்காததைவிட, விரும்பிய பாடப்பிரிவு கிடைக்காததற்கே மாணவர்கள் அதிகம் வருத்தப்படுவார்கள். பலர் தங்கள் சொந்த மாவட்டத்துக்குள் கல்லூரி அமைந்தால் நல்லது என்று நினைப்பார்கள். அதற்கு காரணம், இதே தரத்தில் உள்ள வேறொரு கல்லூரியில் தங்கிப் படிப்பதைவிட, வீட்டிலிருந்து செல்வது சிக்கனமாக இருக்கும் என்று கருதுகிறார்கள். இவற்றையெல்லாம் விட நீங்கள் எடுக்கப் போகும் பாடத்தை விரும்பி படிக்க உங்களுக்கு மனம் இருக்கிறதா என்பதை உங்கள் மனசாட்சியிடம் கேளுங்கள். அந்த பாடத்தை எந்த கல்லூரியில் சேர்ந்து படித்தாலும் நன்றாகப் படிப்பேன் என்ற உறுதிமொழியை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள். பிளஸ் 2வில் எடுத்த மதிப்பெண் சதவீதத்தை விட கல்லூரி படிப்பில் அதிக சதவீதம் எடுப்பேன் என்று உறுதி கொள்ளுங்கள். நீங்கள் படிக்கும் துறையில் வேலை வாய்ப்புகள் எங்கெல்லாம் உள்ளன. அவற்றில் சேர்வதற்கு அடிப்படை தகுதிகள் என்ன... உயர் கல்வி படிக்க என்னவெல்லாம் வாய்ப்புகள் இருக்கின்றன என்பதை முதலிலேயே தெரிந்து கொள்ளுங்கள். அவற்றுக்கு தயாராகும் விதமாகவே உங்களை நீங்கள் தயார்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் தற்போது சாதிக்காததை இன்னும் நான்காண்டு இடைவெளியில் நன்கு தயார்படுத்திக் கொண்டு களத்தில் இறங்கி சாதிப்பேன் என்ற எண்ணத்தை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக் கொள்ளுங்கள். படிப்புக்குரிய நேரத்தில் படிப்பு, அளவான பொழுதுபோக்கு, விளையாட்டு என்று உங்கள் மனதை உற்சாகமாக வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் லட்சியத்தில் நீங்கள் விடாப்பிடியாக இருக்கும் பட்சத்தில், நான்காண்டுகள் நான்கு நாட்கள் போல் நகர்ந்து செல்வதை உணர்வீர்கள். உங்கள் லட்சியத்துக்கு துணைபுரிவோர், வழிகாட்டியாக அமைவோரிடம் அதிகமாக தொடர்பு கொள்ளுங்கள். உங்கள் லட்சிய எல்லைக்கு வெளியில் உள்ள விஷயங்களை மிகக் கவனமாகவே அணுகுங்கள். இத்தனையையும் சுலபமாக கடைபிடிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். உங்களை நீங்களே நம்பி களத்தில் இறங்குங்கள் வெற்றி உங்களை விட்டு எப்போதும் விலகாது. வாழ்த்துக்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !