எம்.பி.ஏ., படிப்பு - உங்களின் சில சந்தேகங்களுக்கான பதில்கள்
மேலாண்மை படிப்பை மேற்கொள்ளலாம் என்று முடிவு செய்கையில், ஒருவருக்கு பலவிதமான குழப்பங்கள் ஏற்படுகின்றன. பொது எம்.பி.ஏ., படிக்கலாமா? அல்லது ஸ்பெஷலைசேஷன் படிக்கலாமா? பி.ஜி.டி.எம்., படிக்கலாமா? முழுநேர எம்.பி.ஏ., படிக்கலாமா அல்லது பகுதிநேர எம்.பி.ஏ., படிக்கலாமா? உள்ளிட்டவைகளே அந்தக் கேள்விகள். பொதுவாக, பொறியியல் படிப்பை முடித்தப்பின்னர், எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்வது ஒரு வழக்கமாக இருக்கிறது. இதனால் எந்தளவிற்கு பணி வாய்ப்புகளும், முக்கியத்துவமும் கிடைக்கிறது என்பதைப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, எம்.பி.ஏ., தொடர்பான பலவிதமான சந்தேகங்களுக்கு விடைகாண வேண்டியுள்ளது. எம்.பி.ஏ., படிப்பை ஏன் மேற்கொள்ள வேண்டும்? இன்றைய காலத்தில் எம்.பி.ஏ., படிப்பு குறித்த தகவல்கள் அபரிமிதமான அளவில் அனைத்து வழிகளிலும் கிடைப்பதால், எம்.பி.ஏ., படிப்பவர்களுக்கு முடிவு எடுப்பது மிகவும் எளிதான ஒன்றாக உள்ளது. பணி சார்ந்த மேம்பாட்டிற்காகவே பெரும்பாலானவர்கள் இப்படிப்பை மேற்கொள்கின்றனர். படித்து முடித்ததும், அவர்களின் கவனம், டெக்னிக்கல் பிரிவைவிட, வணிகப் பிரிவில்தான் அதிகம் செல்கிறது. எம்.பி.ஏ., என்பது உலகளவில் வணிக நடவடிக்கைகளில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக இருப்பதால், அதை படித்தவர்களுக்கு எங்கு சென்றாலும், ஏதேனும் ஒரு பணிவாய்ப்பு காத்திருக்கும். மேலும், ஆசிரியர் பணி மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு, ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. மேற்கூறிய அம்சங்கள்தான் ஒருவரை எம்.பி.ஏ., படிக்கத் தூண்டுகிறது. பி.பி.ஏ., படிப்பை முடித்தப்பிறகு, எம்.பி.ஏ., படிப்புதான் சிறந்ததா? BBA படிப்பை முடித்த பலருக்கும், MBA படிப்பை மேற்கொள்வதுதான் பலரின் தேர்வாகவும் இருக்கிறது. BBA படிப்பில், ஒரு கருத்தாக்கத்தின் பயன்பாடு பற்றி கவனம் செலுத்துவதைவிட, அதை தெளிவாக அறிந்துகொள்ள வைப்பதில்தான் அக்கறை காட்டப்படுகிறது. MBA படிப்பின் மூலமாக, ஒரு குறிப்பிட்ட பிரிவில் ஸ்பெஷலைசேஷன் மேற்கொண்டு, அதைப் பற்றிய ஆழமான அறிவைப் பெறலாம். ஒரு MBA பட்டதாரி, internships, corporate interface, industry - expert lectures and summer training programmes ஆகிய அம்சங்களின் மூலமாக, தான் படித்த விஷயங்களை நேரடி அனுபவத்தில் பொருத்திப் பார்க்கிறார். சட்ட பட்டதாரிகளுக்கான தனி எம்.பி.ஏ., என்று எதுவும் இருக்கிறதா? நீதிமன்ற மேலாளர்களுக்கான MBA படிப்பை ஹைதராபாத்திலுள்ள நல்சார் சட்டப் பல்கலை தொடங்கியுள்ளது. நீதிமன்ற மேலாண்மை, கார்பரேட் நிர்வாகம், நிதி சேவைகள் மற்றும் கேபிடல் மார்க்கெட் ஆகிய பிரிவுகளில் சிறப்பு ஆராய்ச்சியை இப்படிப்பு ஊக்குவிக்கிறது. நுழைவுத்தேர்வு, குழு விவாதம் மற்றும் நேர்முகத் தேர்வு ஆகிய நடைமுறைகளின் மூலமாக இப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் நிறைவுசெய்த எவரும், இப்படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம். அதேசமயம், ஒரு வருட கட்டணம் ரூ.3.25 லட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. எம்.பி.ஏ., தொடர்பான நிறை - குறைகள் என்னென்ன? உயர்ந்த சம்பளம், நல்ல பதவி மற்றும் நல்ல எதிர்காலம் ஆகியவை, எம்.பி.ஏ., முடித்தவருக்கு உண்டு என்ற நம்பிக்கை ஆழமாக உள்ளது. அதேசமயம், இப்படிப்பை மேற்கொள்ள விரும்புவோருக்கு முழுநேரப் படிப்பு, பகுதிநேர படிப்பு மற்றும் வார இறுதிநாள் படிப்பு ஆகிய பலதரப்பட்ட வாய்ப்புகள் உள்ளன. புகழ்பெற்ற வணிகப் பள்ளிகளில் வழங்கப்படும் MBA படிப்பில் இடம்பிடிப்பது அவ்வளவு எளிதல்ல மற்றும் அவற்றுக்கான செலவுத் தொகையும் மிக அதிகம். மேலும், அனைத்து கல்வி நிறுவனங்கள் வழங்கும் MBA பட்டமும் சம அந்தஸ்து கொண்டதல்ல.