உள்ளூர் செய்திகள்

எம்.பி.ஏ., படிப்பது என்றால் என்ன?

எம்.பி.ஏ., படிப்பை மேற்கொள்வதென்பது, வெறுமனே அசைன்மென்ட்டுகள், பாடப்புத்தகங்கள், மேலாண்மை தியரி மற்றும் கருத்தாக்கங்கள் சம்பந்தப்பட்டது மட்டுமே அல்ல. எம்.பி.ஏ., என்பது வகுப்பறை தியரி மற்றும் அசைன்மென்ட் என்பதைவிட, அதிகளவில் அனுபவ அறிவை சார்ந்த படிப்பாகும். அந்த அறிவைப் பெற, கேஸ் ஸ்டடீஸ், ரோல் பிளே, மேனேஜ்மென்ட் கேம்ஸ் மற்றும் புராஜெக்ட்டுகள் போன்றவை ஒருவருக்கு நடைமுறை வணிக அறிவைத் தருவதில் பெரும் பங்காற்றுகின்றன. இந்த நிலையில், ஒரு மாணவர், நேர மேலாண்மை மற்றும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்துவது போன்ற விஷயங்களின் முக்கியத்துவத்தை உணர்கிறார். எம்.பி.ஏ., கல்வி என்பது ஒரு மாற்றமடையும் அனுபவமாகும். விவாதங்கள், குழு பயிற்சிகள், கேம்ஸ் மற்றும் புராஜெக்ட்டுகள் போன்றவை ஒரு எம்.பி.ஏ., மாணவரின் நிபுணத்துவ திறமைகளை மேம்படுத்துகின்றன. இவைதவிர, தலைமைத்துவ பண்பு, தகவல்தொடர்பு மற்றும் குழுவாக பணி செய்தல் உள்ளிட்ட மென் திறன்களை கற்றுக்கொள்வது, ஒரு வெற்றிகரமான மேலாண்மை நிபுணராக திகழ்வதற்குரிய முக்கிய தேவைகள். ஐ.ஐ.எம்.,கள் அல்லாத பிற கல்வி நிறுவனங்களில் மேலாண்மைப் படிப்புகளை மேற்கொள்வது பயன்தரக்கூடியதா? கல்வி என்பது மதிப்பு வாய்ந்தது. அதை எவ்வாறு திறமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஒருவர் நன்கு அறிந்துகொள்ள வேண்டும். படிப்பின் வெற்றி என்பது அதை மேற்கொள்ளும் இடத்தைவிட, கற்பவரின் திறன் மற்றும் ஆர்வத்தை சார்ந்தே பெரிதும் இருக்கிறது. ஏனெனில், ஐ.ஐ.எம்.,கள் சாராத இதர மேலாண்மை கல்வி நிறுவனங்களில், ஏன், பிரபலமே அல்லாத மேலாண்மை கல்வி நிறுவனங்களில் படித்த பலபேர் வணிக உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை செய்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது. அதேசமயம், பிரபலமான கல்வி நிறுவனங்களில் படித்த பலர், எந்த சாதனையும் செய்யாமல், ஏதோ வேலை செய்தோம், சம்பளம் வாங்கினோம் என்று இருந்துவிட்டு, தம் வாழ்க்கையை முடித்துக் கொண்டவர்களும் உண்டு. ஆனால், பிரபலமான சிறந்த கல்வி நிறுவனம் என்று அறியப்படுவனவற்றில் இருக்கும் நன்மை என்னவெனில், அங்கிருக்கும் வசதிகள் மற்றும் வேலை வாய்ப்புகள். இயல்பிலேயே நல்ல திறமைகளைக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு, அதுபோன்ற கல்வி நிறுவனங்கள், திறமைகளை மேலும் மெருகேற்றி வளர்த்துக் கொள்வதற்கான வாய்ப்புகளை வழங்கும். மேலாண்மை கல்வி என்பது, சமூக மற்றும் பொருளாதார தளங்களில், பல்வேறான நடவடிக்கைகளை மேற்கொண்டு, அதன்மூலம்  நம் நிஜ உலக அறிவை வளர்த்துக் கொள்வதாகும். வணிகத்தின் நுட்பமான வேறுபாடுகளை புரிந்து கொள்வதற்கும் மேலாக, வணிக உலகில் அதுவரை பின்பற்றப்படும் வழக்கமான அம்சங்களுக்கு சவால்விடும் வகையில் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். எனவே, ஐ.ஐ.எம்.,கள் தங்களது நிலையை உணர்ந்தால், அதாவது தாங்கள் ஒரு உலகளாவிய வணிகப் பள்ளியா? அல்லது வெறுமனே ஒரு ஸ்பெஷலைசேஷன் கல்வி நிறுவனமா? தங்களது பணியின் தன்மை என்ன என்பதை அவை உணர்ந்து கொண்டால், மேற்கண்ட திறமைகள் மாணவர்களுக்கு வாய்க்கப்பெறும். தற்போது ஐ.ஐ.எம்.,கள், தொடர்ச்சியாக, தொழில் நிறுவனங்களுடன் தொடர்புகளை மேம்படுத்தி வருகிறது. இதன்மூலம், சமீபத்திய தொழில்துறை மாற்றங்களைக்கூட, பாடத்திட்டத்தில் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படுகின்றன. மேலும், தொழில்துறை நிபுணர்கள், பாடத்திட்டங்கள், குறிப்பாக எலெக்டிவ்களை(electives) வடிவமைப்பதில் முக்கியப் பங்காற்றுகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !