புவிசார் குறியீடு பெற்ற மறையூர் வெல்லம்: பாதுகாக்க கேரள அரசு சிறப்பு திட்டம்
உடுமலை: கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டத்துக்குட்பட்ட மறையூர், காந்தலுார் கிராமங்கள், மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்துள்ளது. பிற மலைத்தொடர்களில், கரும்பு விளைவதில்லை.ஆனால், மறையூர் சுற்றுப்பகுதிகளில், சரிவான மலைத்தொடர்களில் கூட கரும்பு சாகுபடி செய்யப்படுகிறது; மேலும், எவ்வித ரசாயனமும் இல்லாமல் தயாரிக்கப்படும் மறையூர் வெல்லம் பிரசித்தி பெற்றதாகும்.மறையூர், காந்தலுார் பகுதியில் மட்டும், 2,700 ஏக்கரில், கரும்பு சாகுபடியாகி வந்தது. முக்கிய சீசனில், உடுமலை பகுதியில் இருந்து தொழிலாளர்களை அழைத்துச்சென்று, கரும்பு அறுவடை மற்றும் வெல்லம் உற்பத்தி செய்யும் அளவுக்கு, மறையூர் வெல்லத்துக்கு விற்பனை சந்தை இருந்தது.இந்நிலையில், மறையூர் வெல்லம் என்ற பெயரில், போலிகள் அதிகரிப்பால் விற்பனை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, மறையூர் வெல்லத்துக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டு, விற்பனை சந்தை வாய்ப்புகளை அதிகரிக்க கேரள அரசு நடவடிக்கை எடுத்தது.பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும், போலி வெல்லம் விற்பனையால், ஓணம் சீசனில் கூட மறையூர் வெல்லத்துக்கு விலை கிடைக்கவில்லை. கரும்பு சாகுபடியில் தொழிலாளர் பற்றாக்குறையால், அதிக பாதிப்புகள் ஏற்பட்டது.இதனால், கரும்பு சாகுபடியை விவசாயிகள் கைவிட துவங்கினர். முன்பு, 2,700 ஏக்கராக இருந்த சாகுபடி பரப்பு தற்போது, 1,200 ஏக்கராக குறைந்து விட்டது. பெரும்பாலான விவசாயிகள் காய்கறி சாகுபடிக்கு மாறி விட்டனர். பீன்ஸ் உள்ளிட்ட குறுகிய கால காய்கறி சாகுபடி, அதிகளவு மேற்கொள்ளப்படுகிறது.பிரசித்தி பெற்ற மறையூர் வெல்லம் மற்றும் அதை சார்ந்துள்ள விவசாயிகளை பாதுகாக்கும் வகையில், கூட்டுறவு நிறுவனங்களை உருவாக்கி, அதன் வாயிலாக விற்பனை சந்தை வாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.இதனால், மீண்டும் கரும்பு சாகுபடி பரப்பு மற்றும் வெல்ல உற்பத்தி அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.