உள்ளூர் செய்திகள்

தமிழ் மொழி, கலைகள், இசை வெளிநாடு வாழ் தமிழருக்கு பயிற்சி முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை: தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண் இசைகளை, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்க, 10 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டம் உருவாக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.சென்னை, நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த அயலக தமிழர் தின விழாவில், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:நாடு, நிலம், கடல் என்று நம்மை பிரித்தாலும், தமிழ்மொழி, தமிழினம் என்ற உணர்வில், நாமெல்லாம் உள்ளத்தால் ஒன்றாக இருக்கிறோம். தமிழ் தான் நம்மை இணைக்கும் தொப்புள் கொடி. இங்கு வந்திருக்கும் பலரின் முன்னோர், 100, 200 ஆண்டுகளுக்கு முன், பல்வேறு காரணங்களுக்காக தாய் மண்ணில் இருந்து சென்று இருப்பர்.வெவ்வேறு நாடுகளுக்கும் சென்று, தங்களின் ஓய்வறியாத உழைப்பு, தியாகம், வியர்வை, கண்ணீர் சிந்தி, அந்த நாடுகளை வளர்த்தனர். அவர்களால் தான் பாலைகள், சோலைகள் ஆகின; கட்டாந்தரைகள் தார் சாலைகள் ஆகியுள்ளன; அலைகளில் துறைமுகங்கள் உருவாகின.தேயிலை, ரப்பர், கரும்பு பயிர் தோட்டங்கள் செழித்து வளர்ந்தன; அந்த நாடுகளும் வளம் பெற்றன. அப்படிபட்ட தமிழ் தியாகிகளின் வாரிசுகளை உறவாக அணைத்துக் கொள்ள தமிழகம் இருக்கிறது; நான் இருக்கிறேன். அதை பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.இப்படி வெளிநாட்டு மண்ணில், தமிழுக்காக பாடுபட்ட சான்றோர்களின் வழித்தோன்றல்கள் மற்றும் அண்மை காலங்களில் அங்கு சென்று, இந்தியா வளமாக வாழ அன்னிய செலாவணியை ஈட்டி தரும் தமிழ் சொந்தங்களுக்கு நன்றி சொல்லவும், அங்கீகாரம் வழங்கவும் தான், இந்த விழா கொண்டாடப்படுகிறது.நான்காவது ஆண்டாக, இந்த நிகழ்ச்சியை நடத்துகிறோம். எந்த துாரமும் நம்மை தமிழில் இருந்து துாரப்படுத்தி விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். அதனால் தான் வெளிநாடுகளில் தமிழ் வளர்க்கும் பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.இந்த விழாவில், ஆறு முக்கிய துறைகளில் முத்திரை பதித்த சாதனை தமிழர்களுக்கு, விருதுகளை வழங்கி இருக்கிறேன். அதற்கு மணிமகுடமாக, வெளிநாடுவாழ் தமிழர்களின் பன்முக தன்மையோடு விளங்கும் ஒருவரை தேர்ந்தெடுத்து, தமிழ் மாமணி விருதும், பட்டயமும் வழங்கி இருக்கிறோம்.தமிழகத்துக்கு உறவு பாலமாக செயலாற்றும் வெளிநாடு வாழ் தமிழ் இளைஞர் ஒருவருக்கு சிறந்த பண்பாட்டு துாதுவர் விருதையும் நடப்பாண்டு முதல் வழங்கியுள்ளோம். நம் தமிழ் மொழி, நாட்டுப்புற கலைகள், தமிழ் பண் இசைகளை வெளிநாடுகளில் வசிக்கும் தமிழ் மக்களின் அடுத்த தலைமுறைகளுக்கு நேரடியாக பயிற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்துள்ளன.அதை தீர்ப்பது தான் என் கடமை. இதற்காக, 100 ஆசிரியர்கள் மற்றும் தமிழ் கலைஞர்களுக்கு பயிற்சி கொடுத்து, வெளிநாடுகளில் தமிழர்கள் வாழும் பகுதிகளுக்கு தேவைக்கேற்ப அனுப்ப, ஒரு திட்டம் உருவாக்கப்படும்.இவர்கள் அந்த பகுதிகளில் இருக்கும் தமிழ் சங்கங்களுடன் இணைந்து, தமிழ் மொழியையும், கலைகளையும், இரண்டு ஆண்டுகளுக்கு நேரடி பயிற்சி வகுப்புகள் வாயிலாக நடத்துவர்; செலவை தமிழக அரசு ஏற்கும். இதற்காக, 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.பூமி பந்தில் எங்கு இருந்தாலும் அடையாளத்தை விட்டு விடக்கூடாது. மொழியையும், இந்த மண்ணையும், உறவுகளையும் மறக்கக்கூடாது.இவ்வாறு அவர் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்