அரசு நிதி ஒதுக்கீடு செய்தும் இன்னும் கிடைக்கவில்லை : மதுரை காமராஜ் பல்கலை அலுவலர்கள் புலம்பல்
மதுரை: மதுரை காமராஜ் பல்கலைக்கு அரசு ஒதுக்கீடு செய்தும் உயர்த்தப்பட்ட அகவிலைப் படி கிடைக்கவில்லை என அலுவலர்கள், ஓய்வூதியர்கள் அதிருப்தியில் உள்ளனர்.இப்பல்கலையில் 700க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். நிதிப்பற்றாக்குறை காரணமாக அடிக்கடி சம்பள பிரச்னை ஏற்படுகிறது. துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ள நிலையில், பல்கலையில் எழும் நிர்வாகம், நிதிசார்ந்த பிரச்னைகளுக்கு தீர்வுகாண்பது இழுபறியாகவே உள்ளது.இந்நிலையில், 2024 ஜூலை முதல் நவம்பர் வரை அலுவலர்கள், பேராசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய (7 சதவீதம் வரை) அகவிலைப்படி உயர்வு நிலுவையில் உள்ளது. இதையடுத்து 2025ல் அரசு அறிவித்த 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு பிற அனைத்து அரசு துறை அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு ஜனவரி முதல் சம்பளத்துடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், இப்பல்கலையில் மட்டும் தற்போது வரை யாருக்கும் வழங்கப்படவில்லை.அகவிலைப்படி உயர்வுக்கான தொகையை அரசு வழங்கிய போதும் பல்கலை நிதிநிலையை காரணம் காட்டி வேறு செலவினங்களுக்கு ஒதுக்குவது என்ன நியாயம் என அலுவலர்கள், ஓய்வூதியர்கள் பும்புகின்றனர்.அதேநேரம் தேவையில்லாத சூழலிலும் மேல்முறையீடு என்ற பெயரில் நீதிமன்ற வழக்குகளுக்காக ரூ. பல லட்சங்களை செலவிடுவது எவ்வகையில் நியாயம் என அலுவலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.அவர்கள் கூறியதாவது: இப்பல்கலை பேராசிரியர், அலுவலர்களுக்கு மாதச் சம்பளம் கிடைப்பது என்பது குதிரைக்கொம்பாக உள்ளது. ஓய்வூதியர்கள் நிலை அதைவிட மோசம். நிதி பற்றாக்குறை உள்ள போதிலும் தேவையில்லாத செலவுகளை குறைப்பதில் பல்கலை முன்வரவில்லை.குறிப்பாக, அலுவலர்கள் சம்பள மறுநிர்ணயம் தொடர்பான வழக்குகளுக்காக மட்டும் 2023 முதல் ரூ.கோடிக்கணக்கில் செலவு செய்து வருவதாக சர்ச்சை உள்ளது. ஆனால் சம்பளம் மறுநிர்ணயம் செய்யப்பட்டால் பல்கலைக்கு கிடைப்பது ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வரை மட்டுமே.இதுபோன்ற முடிவுகளால் பல்கலை நிர்வாகம், அலுவலர்கள் என இரு தரப்புக்குமே பாதிப்பு ஏற்படுகிறது. புதிய துணைவேந்தர் நியமிக்கப்படுவது பல்கலைக்கு சிக்கல் தான். அதுவரை இப்பல்கலை பிரச்னைகளுக்கு அரசு தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றனர்.