உள்ளூர் செய்திகள்

இஸ்லாமிய பெண் அறிஞரை பேச அனுமதிக்க வேண்டும்: சென்னை பல்கலை., மாணவர்கள் கையெழுத்து இயக்கம்

சென்னை: சென்னை பல்கலைக்கழக கருத்தரங்கில், இஸ்லாமிய பெண் அறிஞர் வருகையை ரத்து செய்ததற்கு, எதிர்ப்பு தெரிவித்தும், அவரை பேச அழைக்க வேண்டும் எனக் கூறியும், மாணவர்கள் கையெழுத்து இயக்கத்தை நடத்தினர். அமெரிக்க தூதரகம், சென்னை பல்கலைக்கழகத்தில் உள்ள, இஸ்லாமிய கல்வி மையத்துடன் இணைந்து, கடந்த, 29ம் தேதி, "இஸ்லாம் - பாலினம் மற்றும் மறுசீரமைப்பு" என்ற தலைப்பில், கருத்தரங்கம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது. இக்கருத்தரங்கிற்கு, அமெரிக்க இஸ்லாமிய பெண் அறிஞர் ஆமினா வாதூத், பேச அழைக்கப்பட்டார். ஆமினா வாதூத் பேச்சு, இஸ்லாமிய மதத்துக்கு எதிராக அமையும் என, இஸ்லாமிய அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, போலீசார், பல்கலைக்கழகத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன், நிகழ்ச்சியை ரத்து செய்ய உத்தரவிட்டார். இது குறித்து, அறிவிப்பு பலகையிலும் வெளியிடப்பட்டது. இச்சம்பவம், மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது குறித்து, பல்கலைக்கழக துணைவேந்தர் தாண்டவன் கூறுகையில், "பல அறிஞர்களின் சிந்தனைகளை விவாதிக்க, பல்கலைக்கழகம் வாய்ப்பு கொடுத்துள்ளது. சட்டம் - ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என்பதால், குறிப்பிட்ட கருத்தரங்கம் ரத்து செய்யப்பட்டது. இஸ்லாமிய அறிஞரை புறக்கணிக்க வேண்டும் என்ற எண்ணம், பல்கலைக்கழகத்திற்கு இல்லை. சிலரின் செயலால், இப்பிரச்னை பெரிதுபடுத்தப்பட்டுள்ளது," என்றார். இந்நிலையில், இஸ்லாமிய அறிஞர் பேசக் கூடிய கருத்தரங்கிற்கு தடை விதித்ததை கண்டித்தும், மீண்டும் அவரின் கருத்தரங்கை நடத்த வலியுறுத்தியும், மாணவர்கள், சென்னை பல்கலைக்கழகத்தில் கையெழுத்து இயக்கத்தை நேற்று நடத்தினர். இது குறித்து, மாணவர்கள் தரப்பில் கூறியதாவது: "கருத்தரங்கில் கலந்து கொள்ள இஸ்லாமிய அறிஞருக்கு தடை விதித்துள்ளது கண்டிக்கத்தக்கது. மேலும், ஜனநாயகத்துக்கும், பேச்சு சுதந்திரத்துக்கும் எதிரானது. பல்கலைக்கழகத்திற்குள், மதத்தையும், அரசியலையும் கொண்டு வருவது வேதனையளிக்கிறது. பல்கலைக்கழகம், பல அறிஞர்களின் புது புது கருத்துகளை விவாதிக்க வேண்டிய தளமாகும். எனவே, சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர், மறுபடியும், இஸ்லாமிய அறிஞர் ஆமினா வாதூத்தை பேச அழைக்க வேண்டும் என்றும், இதுபோன்ற நிகழ்வுகள் மறுபடியும் பல்கலைக்கழகத்தில் நடைபெறுவதை தவிர்க்க வலியுறுத்தியும், மாணவர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியுள்ளோம். வரும், 4ம் தேதி, துணைவேந்தரிடம் கையெழுத்து பிரதியை அளிக்க உள்ளோம். எங்கள் கோரிக்கையை ஏற்று, மீண்டும் இஸ்லாமிய அறிஞரை பேச அழைப்பார் என, எதிர்பார்க்கிறோம். பல்கலைக்கழகம் இதன் மீது, எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனில், அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபட, முடிவு செய்துள்ளோம்." இவ்வாறு, மாணவர்கள் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்