கல்வி கற்க மாணவர் இல்லை; காற்றாடும் அரசு பள்ளிகள்; ம.பி.,யில் தான் இந்த நிலை!
போபால்: மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள 5 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை. மற்ற பள்ளிகளில் சொற்ப மாணவர்களே சேர்ந்துள்ளனர்.ம.பி.,யில் பள்ளிப்படிப்பை அதிகரிக்க அரசு முயற்சி செய்து வருகிறது. இதற்காக அனைவரும் படிக்க வேண்டும். அனைவரும் வளர்ச்சி பெற வேண்டும் என்ற கோஷத்தை உருவாக்கி உள்ளதுடன், மதிய உணவு மற்றும் இலவச சீருடை திட்டத்தையும் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இதற்கு எந்த பலனும் கிடைக்கவில்லை.மாநிலத்தில் மொத்தம் 94,399 அரசு பள்ளிகள் உள்ள நிலையில் 5,500 பள்ளிகளில் முதல் வகுப்பில் ஒரு மாணவர்கள் கூட சேரவில்லை. 25 ஆயிரம் பள்ளிகளில் ஓன்று அல்லது இரண்டு மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். 11,345 பள்ளிகளில் 10 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். இந்த 41,000 பள்ளிகளில் 40 சதவீதம் மாணவர் சேர்க்கை மட்டுமே நடந்துள்ளது.சியோனி, சாத்னா, நர்ஷிங்பூர், பெடல் கார்கோன், சாகர், விதிஷா தேவஸ் மற்றும் மண்டசூர் மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் ஒரு மாணவர் கூட சேரவில்லை.அரசு பள்ளிகளில் மோசமான உள்கட்டமைப்பு, போதிய ஆசிரியர்கள் இல்லாதது இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. 46 மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர் நியமிக்கப்படவில்லை. மற்ற 47 மாவட்டங்களில் பள்ளிக்கு ஒரு ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளனர். பள்ளிகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த 1.5 முதல் 2 லட்சம் வரை செலவு செய்யப்பட்டாலும், அது முறையாக செலவு செய்யப்பட்டு உள்ளதா என பலர் கேள்வி எழுப்பி உள்ளனர். இதனால், பல பெற்றோர் அரசு பள்ளிகளை தவிர்த்துவிட்டு தனியார் பள்ளிகளை நாடுவதாக கூறுகின்றனர்.