உள்ளூர் செய்திகள்

பொதுத் தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க ஆசிரியர் கல்விக் குழுக்கள் நியமனம்; வினாத்தாள்களையும் கண்காணிக்க முடிவு

மதுரை: மதுரையில் பொதுத் தேர்வில் தேர்ச்சியை அதிகரிக்க பள்ளி செயல்பாடுகளை ஆய்வு செய்யும் வகையில் பாட வாரியாக ஆசிரியர் கல்விக் குழுக்கள் (அகடமிக் கவுன்சில்ஸ்) ஏற்படுத்தப்பட்டுள்ளன.மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சியை மேம்படுத்தும் வகையில் கல்வியாண்டு துவக்கத்திலேயே அதற்கான பணிகளை கல்வித்துறை இந்தாண்டு முடுக்கிவிட்டுள்ளது. இதன்படி முதல்கட்டமாக பாடம் வாரியாக அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை கொண்ட கல்விக் குழுக்கள் (அகடமிக் கவுன்சில்ஸ்) ஏற்படுத்தப்பட்டுள்ளது. இக்குழுவில் சீனியர் தலைமையாசிரியர் தலைமையில் பி.ஜி., ஆசிரியர்கள் பாடம் வாரியாக தலா 5 பேர் இடம் பெற்றுள்ளனர்.சி.இ.ஓ., தயாளன் கூறியதாவது: இயக்குநர் கண்ணப்பன் அறிவுறுத்தல்படி மதுரையில் முதன்முறையாக இக்குழு ஏற்படுத்தி உள்ளோம். இந்தாண்டு பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஆய்வு செய்யப்பட்டதில், ஒருபாடம் தோல்வி, ஆண்கள் பள்ளியில் ஏற்பட்ட தோல்வி உள்ளிட்டவை தேர்ச்சி குறைவுக்கு முக்கிய காரணிகள் என தெரியவந்துள்ளது. இதுபோல் மாவட்டத்தில் எந்த பள்ளிகள் தேர்ச்சியில் பின்தங்கியுள்ளன என்பதும் 'லிஸ்ட்' எடுக்கப்பட்டுள்ளன.இப்பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நிர்வாகத்திற்கு உதவும் வகையில் இந்த கல்விக் குழுக்கள் ஆய்வு செய்து பரிந்துரைகள் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இது போல் டி.இ.ஓ.,க்களும் ஆய்வு, கண்காணிப்பு மேற்கொள்வதற்காக பள்ளிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றில் இருந்து கிடைக்கும் முடிவுக்கு ஏற்ப சம்பந்தபட்ட பள்ளிகளில் கற்பித்தலில் மாற்றம், தேர்வுமுறைகள் செயல்படுத்தப்படும்.காலாண்டு, அரையாண்டு உள்ளிட்ட தேர்வுகளுக்கு தயாரிக்கப்படும் வினாத்தாள்களும் குறித்தும் இக்குழுக்கள் ஆய்வுக்கு பின்னரே இறுதி செய்யப்படும். குழுக்களில் இடம் பெறும் ஆசிரியர்கள் அவர்கள் சார்ந்த பள்ளிகளில் கற்பித்தல் பணிகள் பாதிக்காத வகையில் முன்ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் வரும் பொதுத் தேர்வில் மாவட்ட 'ரேங்க்' முதல் 5 இடங்களுக்குள் பெற முயற்சி எடுக்கப்படுகிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்