மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு டி.வி.ஆர்., அகாடமி சார்பில் பதக்கம்!
திருப்பூர்: டி.வி.ஆர்., அகாடமி வழங்கும் தினமலர் கல்வி மலர் ஜெயித்துக் காட்டுவோம் நிகழ்ச்சி, திருப்பூரில் துவங்கியது; கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியருக்கு டி.வி.ஆர்., அகாடமி சார்பில் பதக்கம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வை மாணவர்கள், தைரியமாகவும், தன்னம்பிக்கையுடனும் எதிர்கொண்டு, நல்ல மதிப்பெண் பெறுவதற்கு ஆலோசனை வழங்க, தினமலர் நாளிதழ், ஒவ்வொரு ஆண்டும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சி நடத்துகிறது. தமிழ் வழி மாணவர்களுக்கு கோவை பி.எஸ்.ஜி., சர்வஜன மேல்நிலைப் பள்ளி, நேஷனல் மாடல் மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும், ஆங்கில வழி மாணவர்களுக்கு, கோவை எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் பள்ளி ஆசிரியர்களும் ஆலோசனை வழங்கினர். கடந்த பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, தினமலர் நாளிதழ், டி.வி.ஆர்., அகாடமி சார்பில் பதக்கம் வழங்கப்பட்டது. 498 மதிப்பெண் பெற்ற, 15 வேலம்பாளையம் சாரதா வித்யாலயா பள்ளி மாணவி ஜெய்ஸ்ரீ, பெற்றோருடன் வந்து பதக்கம் பெற்றுக்கொண்டார். வெள்ளக்கோவில், முத்தூர் விவேகானந்தா வித்யாலயா மாணவர் விக்னேஷ் (498 மதிப்பெண்) நிகழ்ச்சிக்கு வர இயலவில்லை; அவரது தாயார் சித்ராதேவி, பதக்கத்தை பெற்றுக்கொண்டார். குமரன் கல்லூரி முதல்வர் ரேச்சல் நான்சி பிலிப், தன்னம்பிக்கை பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா ஆகியோர், பதக்கங்களை வழங்கினர். விக்னேஷின் தாயார் சித்ராதேவி பேசுகையில், "என் மகனுக்காக பதக்கம் பெற்றதற்கு, தாயாக ஆனந்த கண்ணீருடன் பேசுகிறேன். இதேபோல், ஒவ்வொரு மாணவராலும், வாழ்க்கையில் ஜெயித்துக் காட்ட முடியும். 500க்கு 500 மதிப்பெண் பெற்று, மாநில அள வில் ரேங்க் பெற வேண்டும். வாழ்க்கையில் முன்னுக்கு வர வேண்டும். தாய், தந்தையை ஒவ்வொரு பிள்ளையும் நினைத்துப் பார்த்து படிக்க வேண்டும். இந்நிகழ்ச்சிக்கு வந்துள்ள அனைவருமே 500 மதிப்பெண் பெற்று, பெற்றோரை மகிழ்விக்க வேண்டும், என்றார். நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவ, மாணவியருக்கு தினமலர் சார்பில், பொதுத்தேர்வு வினாத்தாள் அடங்கிய புளூ பிரின்ட் புத்தகம், உடம்பும், மனசும் நல்லா இருக்கணும் என்ற உடல் ஆரோக்கியம் சார்ந்த புத்தகங்கள் இலவசமாக வழங்கப்பட்டன. பிளஸ் 2 மாணவர்களுக்கு.. திருப்பூரில், டிசம்பர் 7ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கு நடக்கும் ஜெயித்துக்காட்டுவோம் நிகழ்ச்சியில், கோவை எஸ்.பி.ஓ.ஏ., ஆசிரியர்கள், டிப்ஸ் வழங்குகின்றனர். அறிவியல் பிரிவு மாணவர்களுக்கான நிகழ்ச்சியில், தமிழ் - உமாராணி, ஆங்கிலம் - அகஸ்டின் ரவி; கணிதம் - சில்வெஸ்டர் சந்துரு; இயற்பியல் - ரவி; வேதியியல் - பரமேஸ்வரி; தாவரவியல் - நாகராஜ்; விலங்கியல் - இசைவாணி; கம்ப்யூட்டர் சயின்ஸ் - சித்ரா ஆகியோர் பேசுகின்றனர். கலை பிரிவினருக்கான நிகழ்ச்சியில், தமிழ் - உமாராணி; ஆங்கிலம் - அகஸ்டின் ரவி; வணிகவியல் மற்றும் கணக்குப் பதிவியல் - ஷோபனா; பொருளியல் - சரஸ்வதி, கம்ப்யூட்டர் சயின்ஸ் - சித்ரா; வணிக கணிதம் - சில்வெஸ்டர் சந்துரு ஆலோசனை வழங்குகின்றனர்.