தேசிய அளவில் கல்வி தரத்தை நிர்ணயிக்க தேசிய தேர்வு பணி ஆராய்ச்சி
தேசிய அளவில் மாணவர்களின் கல்வித் தரத்தை அறியும் வகையிலும், முதற்கட்டமாக இந்தியளவில் 18 மாநிலங்களில் மூன்று மொழி பாடங்களை தேர்வு செய்து, பயிற்சியின் மூலம் தரம் நிர்ணயிக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்திய தேசிய தேர்வுப் பணி ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.இந்தியாவில் பல கல்வி நிறுனங்கள் உள்ளன. ஆனால், பொதுவான கல்வி திட்டம் இல்லாததால், கல்வி கற்போரிடம் பல்வேறு வேறுபாடுகளை காணமுடிகிறது. அரசு நிர்ணயிக்கும் கல்வி கொள்கைக்கும், மாணவர்கள் தேர்வு முறைக்கும் தொடர்பு இல்லாமல் உள்ளது. இதனால், கல்வி கற்பதன் நோக்கம் நிறைவேறவில்லை. தற்கால நிகழ்வுகளுடன் தொடர்பு படுத்தி பாடம் நடத்த வேண்டும். ஆனால், தற்போது பல இடங்களில் வேறுபட்ட பாடங்களை மாணவர்கள் கற்றுவருகின்றனர். இதை தவிர்க்கும் பொருட்டு, பொதுவான கல்விக் கொள்கை அமைத்து தர நிர்ணயம் செய்ய, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் மூலம் இந்திய தேசிய தேர்வுப் பணி ஆராய்ச்சி செய்து, நாட்டின் பல்வேறு மதிப்பீட்டு தேவைகளை நிறைவு செய்யும் பொருட்டு திட்டங்களை வகுத்துள்ளது.இது தொடர்பாக இந்திய தேசிய தேர்வுப் பணியின் தலைவர் பேராசிரியர் பொன் சுப்பையா, ராமநாதபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:இந்திய அளவில் தமிழ், இந்தி, உருது ஆகிய மூன்று மொழிப்பாடங்களை எடுத்து, மேல்நிலை மற்றும் பட்ட வகுப்புகளில், ஒவ்வொரு கல்வி நிலையிலும் கற்போரின் அறிதல், உணர்தல், தேர்வுக்கான நாட்டம், வல்லமை, செயல்திறன் போன்றவகளை கணக்கிட்டு தரம் நிர்ணயிக்கப்படும். இதற்காக இந்தியாவில் மூன்று பாடங்களுக்கு தலா பத்து மண்டங்கள் என 30 மண்டலங்களாக பிரித்து, ஒவ்வொரு மண்டலத்திற்கும் தலா இரண்டு கள பணியாளர்கள் நியமித்துள்ளோம். 18 மாநிலங்களில் அந்த பகுதி ஆசிரியர்களை தேர்வு செய்யும் கள பணியாளர்கள், திட்டம் குறித்து வீடியோ கான்பரன்சிங் மூலம் விளக்கி, மாணவர்களையும் தயார் செய்வர். இதன்மூலம் ஆசிரியர்களிடம் கேள்வி கேட்கப்பட்டு, ஒவ்வொரு கேள்விகளுக்கும் பரிசுகள் வழங்கப்படும். இதற்காக மத்திய அரசு, முதற்கட்டமாக 50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. 2010 மார்ச்சுக்குள் முதற்கட்ட சோதனை நடத்தி முடிக்கலாம் என, கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதன் முடிவுகளை கொண்டு அடுத்தகட்டமாக மற்ற பாடங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படும். இத்திட்டத்தின் மூலம் மாணவர்களின் தேசிய அளவிலான தரம் அறிய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு பொன் சுப்பையா கூறினார்.