இன்ஜி., மாணவர்களுக்கு பயிற்சி அளிக்க அண்ணா பல்கலை - பி.எஸ்.என்.எல்., ஒப்பந்தம்
சென்னை: அண்ணா பல்கலை மற்றும் இணைப்பு கல்லுாரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு சான்றிதழ் படிப்புகள் மற்றும் வளாகம் முழுதும், வைபை வசதி வழங்கவும் பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் நேற்று ஒப்பந்தம் செய்து கொண்டது.சென்னை அண்ணா பல்கலை பி.எஸ்.என்.எல்., நிறுவனம் ஆகியவை தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான சான்றிதழ் படிப்புகளை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டு உள்ளன.அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ், பி.எஸ்.என்.எல்., நிறுவன தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பிரவீன் குமார் பூர்வர், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.அண்ணா பல்கலை துணைவேந்தர் வேல்ராஜ் அளித்த பேட்டி:இந்தியாவில் உள்ள அனைத்து பெரிய கிராமங்களிலும், தகவல் தொடர்பு ஏற்படுத்துவதற்கு, பி.எஸ்.என்.எல்., நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும் மாணவர்களுக்கு இது குறித்த திறனை வளர்க்கவும், குறுகிய கால சான்றிதழ் படிப்பும் அளிக்கப்பட உள்ளது.அண்ணா பல்கலை வளாகம், வைபை வசதி கொண்டதாக மாற்றப்பட உள்ளது. கல்விக்கு அடிப்படையாக தற்பொழுது தகவல் தொழில்நுட்பம் தேவையாக உள்ளது. நகர்ப்புறங்களில் தனியார் நிறுவனங்கள் 5 ஜி தொழில்நுட்பத்தை அளிக்கின்றன. கிராமப்புறங்களில் பி.எஸ்.என்.எல்., தான் உள்ளது. கல்வியை கற்றுத் தருவதற்கு தொழில்நுட்ப வளர்ச்சி அதிகளவில் தேவைப்படுகிறது. தகவல் தொடர்பு தொடர்பான குறுகியக்கால பாடப்பிரிவுகள் துவக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.