மெட்ரிக் பள்ளிகளில் தமிழ் பாடம் தோல்வியை தவிர்க்க நடவடிக்கை; கல்வி இயக்குநர் தகவல்
மதுரை: தமிழகத்தில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் பாடத்தில் மாணவர்கள் தோல்வியை தவிர்க்க அப்பள்ளி பாட ஆசிரியர்களுக்கு கல்வித்துறை சார்பில் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதால் இந்தாண்டு தோல்வி குறையும் என தனியார் பள்ளிகள் இயக்குநர்நாகராஜ முருகன் தெரிவித்தார்.மதுரையில் ஜன.,29ல் மண்டல அளவில் தனியார் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா அமைச்சர், செயலர் தலைமையில் நடக்கவுள்ளது. இதற்கான ஏற்பாடு தொடர்பாகவும், தனியார்பள்ளிகளில் பொதுத் தேர்வு தேர்ச்சியை அதிகரிக்கும் வகையில் மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர் மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் ஆய்வும் நடத்தப்பட்டது.தமிழகத்தில் மெட்ரிக், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் பாடம் தோல்விகளை தவிர்க்கும் வகையில் கல்வித்துறை சார்பில் அப்பள்ளி தமிழாசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.இதில் மாணவர்களுக்கு தமிழ் பாடம் எளிமையாக புரியும் வகையிலும், அவர்களை பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற வைக்கும் வகையிலும் மாவட்ட ஆசிரியர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனங்களின் (டயட்) அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களால் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தாண்டு பொதுத் தேர்வில் தமிழ் தேர்வு தோல்வி குறையும் நம்பிக்கை உள்ளது.மாநில அளவில் அனைத்து பள்ளிகளிலும் சாரண சாரணீய இயக்கத்தை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தற்போது 2 லட்சம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் உள்ளனர். நாட்டில் ராஜஸ்தானில் அதிகபட்சம் 5 லட்சம் மாணவர்கள் இந்த இயக்கத்தில் உள்ளனர். அதை முறியடித்து தமிழகத்தில் 5 லட்சத்திற்கும் மேல் மாணவர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இதற்காக 100 சதவீதம்நர்சரி பிரைமரி பள்ளிகளிலும் இவ்வியக்கத்தில் மாணவர்களை சேர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மதுரை நோடல் அதிகாரி என்ற முறையில் இந்தாண்டு பொதுத் தேர்வு தேர்ச்சியை அதிகரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.டி.இ.ஓ.,க்கள் சிவானந்தம் (மதுரை), சந்திரக்குமார் (திண்டுக்கல்), சங்குமுத்தையா (தேனி), நாகேந்திரன் (ராமநாதபுரம்), விஜயசரவணகுமார் (சிவகங்கை), ஜான் பாக்கிய செல்வராஜ் (விருதுநகர்), கண்காணிப்பாளர் அண்ணாமலைராஜன் உள்ளிட்டோர்உடன் இருந்தனர்.