ஆசிரியர் ஓய்வு வயதில் குளறுபடி ஏப்ரலா, மே மாதமா என குழப்பம்
சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஓய்வு வயதை நிர்ணயிக்கும் தேதியில், மாவட்ட வாரியாக குளறுபடி ஏற்பட்டுள்ளது. இதனால், ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.தமிழக பள்ளிக்கல்வி மற்றும் உயர்கல்வியில் பணியாற்றும் ஆசிரியர்கள், பேராசிரியர்களுக்கு, ஓய்வு பெறும் வயதில் சலுகை வழங்கப்படுகிறது. அதாவது, கல்வி ஆண்டின் இடையில் ஓய்வு வயது வந்தால், அந்த கல்வி ஆண்டின் நிறைவு நாள் வரை, ஆசிரியர்கள், பேராசிரியர்கள் பணியாற்ற சலுகை அளிக்கப்படுகிறது.அதாவது, கல்வி ஆண்டின் இடையில் ஆசிரியர்களுக்கு ஓய்வு அளித்தால், ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டு, கற்பித்தல் பணி பாதிக்கப்படும் என்பதால், அரசு இந்த சலுகையை வழங்குகிறது.இந்நிலையில், நடப்பு கல்வி ஆண்டில், பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, சில மாவட்டங்களில், இந்த ஏப்ரல் மாதத்துடன் ஓய்வு அளிப்பதாக, முதன்மை கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.நடப்பு ஏப்ரல் மாதத்தில், பள்ளியின் இறுதி வேலை நாளை கணக்கில் கொண்டு, இந்த தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில மாவட்டங்களில், கல்வி ஆண்டின் நிறைவு நாளான மே 31 வரை பணியாற்றலாம் என, கூறப்பட்டுள்ளது.இந்நிலையில், ஏப்ரல் மாதத்துடன் ஆசிரியர்களை பணி நிறைவு செய்யும் உத்தரவை மாற்ற வேண்டும். மாநிலம் முழுதும் அனைத்து மாவட்டங்களிலும், கல்வி ஆண்டின் இறுதி நாளான மே, 31ஐ ஓய்வு வயதாக நிர்ணயிக்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.