ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு ரத்து செய்ய தமிழக அரசுக்கு கோரிக்கை
கம்பம்: ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு நடத்த வேண்டும் என்பதை ரத்து செய்து தமிழக அரசு கொள்கை முடிவு ஒன்றை அறிவிக்க வேண்டும் என தேனிமாவட்டம் கம்பத்தில் நேற்று நடந்த நலநிதி விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மயில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தமிழக முதல்வர் உறுதியளித்தார். இதனை உடனே நிறைவேற்ற வேண்டும்.ஆசிரியர்களின் பதவி உயர்வு ஒன்றிய அளவிலான முன்னுரிமை இருந்தது. அதை சமீபத்தில் மாநில அளவிலான முன்னுரிமை என்று அறிவித்துள்ளனர். இதனால் 90 சதவீத ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும்.ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தகுதி தேர்வு என்ற உத்தரவை எதிர்த்து ஆசிரியர் சங்கங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளன. தமிழக அரசும் எதிர்த்து வழக்கு தாக்கல் செய்துள்ளது.இந்த விஷயத்தில் கொள்கை முடிவு ஒன்றை அறிவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும். கடந்த 9 ஆண்டுகளாக ஆசிரியர்கள் நியமனங்கள் இல்லாமல் காலிப்பணியிடங்கள் அதிகரித்து வருகிறது. உடனடியாக அனைத்து காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.வருமான வரித்துறைக்கு என தானாகவே பிடித்தம் செய்யும் உத்தரவு என்பது தனி மனித உரிமைக்கு எதிரானது என கருதுகிறோம். எனவே பழைய முறையில் வருமான வரி தாக்கல் செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும். ஆசிரியர்களின் உயர்கல்விக்கான அனுமதி வழங்கி, ஊக்கத்தொகையை வழங்கிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.