தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலக பணியிடங்களை நிரப்ப வழக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
மதுரை : தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நுாலக இயக்குனர், நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.தஞ்சாவூர் மாவட்டம் ராயமுண்டான்பட்டி ஜீவகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு: தஞ்சாவூர் சரஸ்வதி மகாலில் ஓலைச்சுவடி நுாலகம் உள்ளது. ஆசியாவின் 2 வது பழமையான நுாலகம். சோழர், நாயக்கர், மராட்டிய மன்னர்கள் ஆட்சிக் காலம் முதல் செயல்படுகிறது. அது போதிய பராமரிப்பின்றி, ஊழியர்கள் பற்றாக்குறையுடன் உள்ளது. முழுநேர இயக்குனர், நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்பவில்லை. கலெக்டர் கூடுதலாக இயக்குனர், முதன்மைக் கல்வி அலுவலர் கூடுதலாக நிர்வாக அலுவலர் பொறுப்புகளை கவனித்து வருகின்றனர்.தமிழர்களின் வரலாறு குறித்து பதிக்கப்படாத புத்தகங்கள், மொழி பெயர்க்கப்படாத ஆவணங்கள் அழிந்து வருகின்றன. இயக்குனர், நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி மத்திய, மாநில அரசுகளுக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி முகமது ஷபீக் அமர்வு மத்திய கலாசாரத்துறை முதன்மை செயலர், தமிழக பள்ளிக் கல்வித்துறை, தொல்லியல்துறை முதன்மை செயலர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு நவ.,26 க்கு ஒத்திவைத்தது.